கண்ணன் பிறந்தான் - 3


ஸ்ரீமத் பாகவதத்தை அருளிச்செய்தவர் வேதவியாசர். அவர் சாதாரணமானவர் அல்ல. வேதங்களை நான்காகத் தொகுத்தவர். 18 புராணங்களை அருளிச்செய்தவர். 18 உப புராணங்களையும், 5-வது வேதம் எனப்படும் 1,25,000 ஸ்லோகங்கள் கொண்ட மகாபாரதத்தையும், ‘வேதம் சொல்வது இதுதான்’ என்பதை நிலைநாட்டக்கூடிய பிரம்ம சூத்திரத்தையும் அருளியவர்.

ஸ்ரீவேதவியாசர்

அத்தகைய மகாமுனிவராகிய வேதவியாசருக்கு திடீரென ஒருநாள் நிம்மதியின்மை ஏற்பட்டது. மனதில் அமைதி இல்லாமல், சஞ்சலத்தோடு தவித்தார். அத்தகைய நிலைக்கு என்ன காரணம் என்பதும் அவருக்குத் தெரியவில்லை. சிஷ்யர்கள் எல்லோரும் இதைப் பார்த்தார்கள். “நம்முடைய ஆசார்யர் நிம்மதியின்றி தவிக்கிறாரே” என்று கலங்கினர்.

நாரதர் வருகை

அப்போது, நாரத மகரிஷி அங்கு வந்தார். வியாசரின் சஞ்சலத்தைக் கண்டு வியந்தார். ஸ்ரீமந் நாராயணனை ஒரு நிமிடம் மனதால் நினைத்துக்கொண்டு, வியாசரின் திருமுகத்தை நோக்கினார் நாரதர். உண்மையை அறிந்து கொண்டார்.

“வியாச மகரிஷியே! நீர் அருளிய புராணங்கள் வாயிலாகச் சொல்ல வேண்டிய எல்லாவற்றையும் சொன்னீர். முழுமுதற் கடவுளான ஸ்ரீமந் நாராயணனை முழுமையாக வெளிப்படுத்தாமல் விட்டுவிட்டீர். அதுபோல் சாதாரண தர்மத்தைச் சொல்லி விட்டீர். அடுத்து பிறக்கப்போவது கலிகாலம். அதற்குத் தேவையான சுத்தமான, சாத்வீகமான சரணாகதி மார்க்கத்தைப் பற்றி சொல்லாமல் விட்டுவிட்டீர்”.

சரணாகதி என்றால் என்ன?

“உயிருள்ள சித்துகளும், உயிரற்ற அசித்துகளும் ஸ்ரீமந் நாராயணனுக்காகவே, அவனுடைய உகப்புக்காகவே இருக்கின்றன. சகல ஆத்மாக்களும், தமக்காகவோ, பிறருக்காகவோ இருக்கும் இருப்பை விட்டுவிட்டு, எம்பெருமான் ஒருவனை மட்டுமே இருப்பாகக் கொள்வதுதான் ஸ்வரூபம். அதுதான் சரணாகதி. அதை நீர் பேசாமல் விட்டுவிட்டீர். அதனால்தான், உமது மனதில் சஞ்சலம் ஏற்பட்டது.

எல்லாம் நாராயணனே!

“எனவே, ஏக நாயகனான ஸ்ரீமந்நாராயணனின் ஒப்புயர்வற்ற தன்மையை நீர் பறைசாற்ற வேண்டும். அடுத்து, அனைத்து ஆத்மாக்களும் அடைய வேண்டிய ஒரே இடம் பரமபதம்தான். அதாவது, எம்பெருமானின் திருவடிகள்தான் என்பதை நீர் புலப்படுத்த வேண்டும். அத்தகைய உயர்ந்த நிலையைப் பெறுவதற்கு வழிகாட்டக்கூடிய ஒரே மார்க்கம் சரணாகதி மார்க்கம்தான்.

நம்மை ரட்சிக்கக் கூடியவன் ஸ்ரீமந் நாராயணன் மட்டுமே. சர்வக்ஞனாக (அனைத்தையும் அறிந்தவன்), சர்வசக்தனாக (அனைத்து சக்திகளும் கொண்டவன்), சர்வேஸ்வரனாக (அனைவருக்கும் ஈஸ்வரன்) அவன் இருப்பதுபோல், அனைவரையும் காக்கும் சர்வ ரக்சகனாகவும் அவன் இருக்கிறான். ரட்சகத்துக்கு ஏக ரட்சகன் (நம்மைக் காக்கும் தகுதி படைத்த ஒரே ஒருவன்) அவனே. நம்மை காக்க, அவன் நம்மிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை.

‘நான் உஜ்ஜீவனம் அடைய, எனக்கு உதவுவதற்கு எதுவும் இங்கில்லை. என்னை உஜ்ஜீவனம் அடையச் செய்ய யாரும் கிடையாது. ஸ்ரீமந் நாராயணனின் திருவடிகளைத் தவிர எனக்கு ஏதுமில்லை’ என்று, வெறுமையை நாம் அனுசந்திக்க வேண்டும். அப்படி வெறுமையை அனுசந்தித்தால், இலங்கையில் அசோகவனத்தில் இருந்த சீதா பிராட்டியைத் தேடி ஸ்ரீராமர் வந்ததுபோல், நாம் இருக்கும் இடத்துக்கும் வந்து, நம்மைக் காப்பான். அதற்காகவே அவன் காத்துக் கொண்டு இருக்கிறான்.

“ஆனால், நாம்தான் இந்த சம்பிரதாயத்தை அறியாமல், தெரியாமல், புரியாமல், அங்கே செல்லலாமா, இதைச் செய்யலாமா என்று உபாயங்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம். கடைசிவரை எம்பெருமானை அடைய முடியாமல் தவிக்கிறோம். நமது நிலையை எண்ணி அவன் வருந்துகிறான்” என்று ஸ்ரீநாரதர் கூறினார். இதனை, ஸ்ரீமத் பாகவதம் 1-வது ஸ்கந்தம், 5-வது அத்தியாயம், 16 மற்றும் 17-வது ஸ்லோகத்தில் படிக்கலாம்.

ஸ்ரீவேதவியாசர்

ஸ்ரீமத் பாகவதம் தோன்றியது

ஸ்ரீநாரதரின் மொழியைக் கேட்ட பின்புதான், 12 ஸ்கந்தங்களில், 18,000 ஸ்லோகங்கள் அடங்கிய ஸ்ரீமத் பாகவதத்தை ஸ்ரீவேதவியாசர் அருளிச்செய்தார். ஸ்ரீமந் நாராயணன் - பிரம்மாவுக்குச் சொல்லி, பிரம்மா - நாரதருக்குச் சொல்லி, நாரதர் - வியாசருக்குச் சொல்லி, வியாசர் - சுகதேவருக்குச் சொல்லி, சுகதேவர் - பரீக்ஷித் மகாராஜனுக்குச் சொல்லி, இப்படியாக ஸ்ரீமத் பாகவதம் உலகிற்கு வந்தது.

"ஸ்ரீ மத் பாகவதம் 12 ஸ்கந்தங்களையுடையது. முதல் ஒன்பது ஸ்கந்தங்கள் ஸ்ரீமந் நாராயணனின் பல்வேறு அவதாரங்களை விவரிக்கின்றன. 10 மற்றும் 11 ஆகிய இரு ஸ்கந்தங்களும் ஸ்ரீகிருஷ்ண பகவானின் வைபவங்களை விவரிக்கின்றன. 12-வது ஸ்கந்தம் ஸ்ரீமந்நாராயணன் இனி எடுக்க இருக்கின்ற கலி அவதாரத்தையும், கலியுகத்தின் தன்மைகளையும் கூறுகின்றது.

பரீக்ஷித் மகாராஜன்

அர்ச்சுனனின் மகன் - அபிமன்யு. அபிமன்யுவின் மகன் - பரீக்ஷித் மகாராஜன். பரீக்ஷித் மகாராஜன் ஒரு சமயம் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். அப்பொழுது அவனுக்கு மிகவும் தாகம் ஏற்பட்டது. அருகில் இருந்த ஒரு முனிவருடைய ஆசிரமத்திற்கு சென்றான், அப்பொழுது முனிவர் தியானத்தில் இருந்ததால், பரீஷித் மகாராஜனை அவர் உபசரிக்கவில்லை. அதனால் ஆத்திரம் அடைந்த பரீஷித் மகாராஜன், காட்டில் இறந்து கிடந்த ஒரு பாம்பின் உடலை எடுத்து, முனிவருடைய கழுத்தில் மாலையாகப் போட்டுச் சென்றான்.

முனிவருடைய மகன் இதைக்கண்டு கோபங்கொண்டு. “பரீக்ஷித் மகாராஜன் இன்னும் ஏழு நாளில் பாம்பு கடித்து இறப்பானாக" என்று சாபமிட்டார். ஏழு நாளில் தான் இறக்கப்போவதை அறிந்த பரீக்ஷித் மகாராஜன், தன் செயலுக்கு வருந்தி, தன் மகன் ஜனமேஜயனிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு கங்கைக் கரையை அடைந்தான். அப்பொழுது அங்கு வியாச முனிவரின் மகனான ஸ்ரீ சுகதேவர் வந்தார். அவர்கள் இருவருக்கும் இடையே நடந்த உரையாடலை, ஸ்ரீ மத் பாகவதத்தில் உள்ளபடியே படியுங்கள்:

சுகதேவரின் அருள்மொழி

பரீக்ஷித் மகாராஜன்: மரணத்தின் வாயிலில் நிற்கும் மனிதன் என்ன செய்தால் பிறப்பு இறப்பாகிய துன்பத்திலிருந்து விடுபட்டு, பேரின்பப் பெருவாழ்வை அடைவான்? - ஸ்ரீ மத் பாகவதம் 1.19.37.

ஸ்ரீசுகதேவர்: ஸ்ரீமந் நாராயணனை அடைய வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் மனிதன் பல ஆண்டுகள் வாழ்ந்தாலும் அந்த வாழ்க்கை வீணே. ஸ்ரீமந் நாராயணனை அடைய ஒரு சிறிய நேரம் முயன்றாலும், அதுவே ஒரு மனிதனுக்குப் பெரும் பலனை அளிப்பதாகும். - ஸ்ரீ மத் பாகவதம் 1.19.38

கட்வாங்கன் என்னும் மன்னன் தான் இறப்பதற்கு ஒரு முகூர்த்த நேரமே உள்ளதை அறிந்து, உடனே ஸ்ரீமந் நாராயணனை சரணடைந்தான். அதனால் அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபட்டு, பேரின்பப் பெருவாழ்வை அடைந்தான். - ஸ்ரீ மத் பாகவதம் 1.1.13.

நீ இறப்பதற்கு இன்னும் ஏழு நாட்கள் இருக்கின்றன. அதற்குள் எதைக்கேட்டால் ஸ்ரீமந் நாராயணனோடு வாழ்கின்ற அழியாத ஆனந்த வாழ்வுக்கு உன்னை அழைத்துச் செல்லுமோ, அந்த ஸ்ரீமந் நாராயணனின் அவதாரங்களை கூறுகிறேன் கேள். - ஸ்ரீ மத் ஸ்ரீ மத் பாகவதம் 1.1.14

யாரை நினைத்த மாத்திரத்தில் அனைத்துப் பாவங்களும் அழியுமோ, அந்த ஸ்ரீகிருஷ்ண பகவானின் வரலாற்றைப் பின்வருமாறு சுருக்கமாகக் கூறினார் ஸ்ரீசுகதேவர்:

வசுதேவருக்கு எட்டு குழந்தைகள் பிறந்தன. அதில் எட்டாவது குழந்தையாக ஸ்ரீமந் நாராயணன் தாமே தோன்றினார். - ஸ்ரீ மத் பாகவதம் 9.24.55.

எப்பொழுதெல்லாம் தர்மத்திற்கு அழிவும், பாவத்திற்கு ஏற்றமும் ஏற்படுகின்றதோ, அப்பொழுதெல்லாம் அனைத்தையும் உடையவரும், அனைத்துக்கும் ஈஸ்வரருமான ஸ்ரீமந் நாராயணன் அவதரிக்கின்றார். - ஸ்ரீ மத் பாகவதம் 9.24.56

உயிர் உள்ளவைகளுக்கும், உயிரற்றவைகளுக்கும் ஈஸ்வரரும், அனைத்திற்கும் சாட்சியானவரும், எல்லாவற்றிலும் பரமாத்மாவாக எழுந்தருளி இருப்பவரும், முழுமுதற்கடவுளுமான ஸ்ரீமந் நாராயணன் உயிர்களின் மீது கொண்ட இரக்கத்தினால் அவதரிக்கின்றார். - ஸ்ரீ மத் பாகவதம் 9.24.5.

ஸ்ரீமந் நாராயணன் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவாக அவதரித்து கலிகாலத்தில் பிறக்கப்போகும் மக்களின் துன்பத்தையும், அஞ்ஞானத்தையும் போக்கி புண்ணியத்தை அளிக்கும் புனிதமான தமது லீலைகளை செய்து அருளினார். - ஸ்ரீ மத் பாகவதம் 9.24.61

ஸ்ரீகிருஷ்ண பகவான் தமது அழகான புன்முறுவலாலும், கவர்ச்சியான பார்வையாலும், கம்பீரமான பேச்சாலும், திருமேனியின் அழகாலும், அனைத்து உயிர்களையும் மகிழ்வித்தார். - ஸ்ரீ மத் பாகவதம் 9.24.64.

ஸ்ரீகிருஷ்ண பகவானின் அழகுத் திருமேனியைக் கண்களால் பருகிய அனைத்து உயிர்களும் மகிழ்ச்சியால் பூரித்து, திருப்தியடையாமல் தங்களுடைய இமைகளைக் கோபித்தன. - ஸ்ரீ மத் பாகவதம் 9.24.65.

இவ்வாறு ஸ்ரீ கிருஷ்ண பகவானைப் பற்றிக் கூறி ஒன்பதாவது ஸ்கந்தத்தை ஸ்ரீ சுகதேவர் முடித்தார்.

10-வது ஸ்கந்தத்தில் ஸ்ரீகிருஷ்ணரின் பிறப்பு முதல் கோகுலம், பிருந்தாவனம், மதுரா, துவாரகை, குருஷேத்திரம் போன்றவற்றில் நடந்த வைபவங்கள் அனைத்தும் விவரிக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீசுகதேவர்

x