மகா பெரியவா: அருளே ஆனந்தம் - 51


மகா பெரியவா

‘‘எத்தனை பணம் வந்தாலும் இன்றைக்குப் போதுமானதாக இல்லை. பணம் அதிகம் வர வர, தன் தேவையையும் அதிகரித்துக் கொண்டே போகிறான் மனிதன்’’ என்று மகா பெரியவா அன்றைக்குச் சொன்ன உபதேசம் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும், சத்தியமான வார்த்தைகளே!

யோசித்துப் பாருங்கள்... மகா பெரியவா இந்த உபதேசத்தை அருளி சுமார் ஐம்பது வருடங்களுக்கு மேல் ஓடி இருக்கலாம். ஆனாலும், இன்றைக்கும் அது பொருந்துகிறதே!

‘கிடைப்பதைக் கொண்டு திருப்தியுடன் வாழ்ந்தால், அதுவே சொர்க்கம்’ என்று சும்மாவா சொன்னார்கள்?!

நவராத்திரி விழாவின் பூர்த்தியில் திரளான பக்தர்களுக்கு நடுவே மகா பெரியவா ஆற்றிய உரையின் தொடர்ச்சியைப் பார்க்கலாம்...
‘‘இன்றைக்கு அவரவர்கள் தங்களது தேவைகளைப் பெருக்கிக் கொண்டு விடுகிறார்கள். விளைவு... வீடு முழுக்க ஆடம்பரமான சாமான்களை வாங்கிப் போட்டு விடுகிறார்கள். ‘இத்தனை காசு குடுத்து இந்தப் பொருளை வாங்குகிறோமே... இது நமக்குத் தேவைதானா?’ என்று யோசிப்பதில்லை. பக்கத்து வீட்டுக்காரன் அவன் வீட்டில் வாங்கிப் போட்டிருக்கிறான் என்பதற்காக நாமும் போலி கவுரவத்துக்கு ஆசைப்பட்டுக் கடனில் வாங்கி விடுகிறோம். ஏதாவது ஒரு மாதம் பணம் கட்ட முடியாமல் போகும்போதுதான் பூகம்பம் வெடிக்கிறது.

இதெல்லாம் தேவையா? இருப்பதைக் கொண்டு வாழ்ந்தால், எத்தனை ஆனந்தம்! அதில் இருக்கிற சுகமே அலாதி.
நாலு காசு பார்க்க ஆரம்பித்த பிறகு, தான் ஏதோ ஜமீன்தார் குடும்பத்தில் இருந்து வந்தவன் என்பது போல் பலரும் இன்றைக்கு நடந்து கொள்வது வேதனையான விஷயம்!

பணம் ஒருவனை வாழவும் வைக்கிறது. பாதாளத்திலும் தள்ளுகிறது’’

இப்படிப் பல அறிவுரைகளை அள்ளித் தெளித்த மகா பெரியவா இதன் முத்தாய்ப்பாகச் சொன்ன கருத்துதான் ‘ஹைலைட்’.
அதுதான் இன்றைக்கு ஒவ்வொருவருக்கும் தேவை.

என்ன சொன்னார் பெரியவா?

‘‘போதும் என்ற எண்ணம் ஒருவருக்கு எப்போது வருகிறதோ, அப்போதிலிருந்துதான் தானம், தர்மம் போன்ற நல்ல கார்யங்களைச் செய்ய முடியும். வருகின்ற பணம் அவரவரது செலவுக்கே போதவில்லை என்றால், எங்கே தானம் செய்வது? தர்மம் மேற்கொள்வது?’’
தானம், தர்மம் இவற்றை செய்து வாழ்ந்தால்தான் சொர்க்க லோகம் கிடைக்கும். அதாவது, மீண்டும் பிறப்பற்ற நிலை அமையும்.
வாழுகின்ற வாழ்க்கையில் சுகமான நிலை அமைந்து விட்டால், அதுவே சொர்க்கம் என்கிறோம்.

எதிர்பார்த்தது நடக்காமல், குடும்ப வாழ்க்கையும் கசந்து, வறுமையில் உழல நேரிட்டால் அதை நரகம் என்கிறோம்.
சொர்க்கம், நரகம் ஆகிய இரு லோகங்கள் நாம் வாழும் காலத்திலும் பூலோகத்தில் அனுபவிக்கிறோம். என்ன ஒன்று, அவரவர் மனதுக்கேற்ப அந்தந்த லோகங்கள் அவரவர்களுக்கு அமைகின்றன.

இந்த இரண்டு லோகங்கள் மட்டுமில்லை. மூன்றாவது ஒரு லோகமும் உண்டு.

இதுகுறித்து மகான் சொல்வதைப் பார்ப்போம் ...

‘‘நமக்குத் தெரிந்த இரண்டு லோகம் தவிர, மூன்றாவதாக ஒன்று உண்டு. அதுதான் மிச்ரலோகம். தெர்மாமீட்டரில் ‘பாய்லிங் பாயின்ட்’, ‘ஃப்ரீஸிங் பாயின்ட்’, ‘நார்மல்’ என்று சொல்கிறார்கள் இல்லையா... இந்த டிகிரிக்குக் கீழே போய் விட்டால் ஜலம் எல்லாம் அப்படியே இறுகிக் கட்டித் தட்டிப் போய்விடும் என்று இருக்கிறது. டெல்லியில் சில சமயங்களிலே மார்கழி மாசத்திலே அப்படி ஆகிவிடும். ‘பைப்’பைத் திறந்து விட்டுவிட்டு அருகில் நெருப்பைக் கொண்டு போனால்தான் ஜலம் வரும் என்று சொல்வார்கள். அது ‘ஃப்ரீஸிங் பாயின்ட்’. இன்னொன்று உலைநீர் மாதிரி தளதளவென்று கொதிப்பது, ‘பாய்லிங் பாயின்ட்’. இரண்டுக்கும் நடுவே இருப்பது ‘நார்மல்’.

அந்த மாதிரி சுகம் நிறைய இருப்பது தேவலோகம். அங்கே சுகம் மட்டும்தான் இருக்கும்.

சுகம் என்பது கொஞ்சங்கூட இல்லாமல் ஒரே துக்கமயமாக இருப்பது நரகலோகம். நரகத்தில் சிரிக்கவே சந்தர்ப்பம் ஏற்படாது.
அதுவும் இதுவும் கலந்து இருக்கக் கூடிய லோகத்துக்குத்தான் மிச்ரலோகம் என்று பெயர்.

கலந்தது என்றால் சமமாகக்கூட இருக்காது. துக்கம்தான் அதிகமாக இருக்கும். எப்போதோ கொஞ்சம் சுகம் ஏற்படும். வேப்பங்காய்த் தித்திப்பு மாதிரி.நாமெல்லாம் இப்போது இருப்பது மிச்ரலோகம்’’

என்று மிச்ரலோகம் பற்றி விளக்குகிறார் காஞ்சி முனிவர்!

மகா பெரியவா

அதாவது, வாழ்க்கையில் துக்கம்தான் அதிகம் இருக்கும் என்கிறார்.

துக்கத்துக்குக் காரணம் ஆசைகள்.

ஆசை இல்லாத மனிதன் உண்டா? ஆசை இல்லாத தேசம் உண்டா?

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு உலகின் பல பகுதிகளை வென்ற மாபெரும் சக்கரவர்த்தி ராஜராஜசோழனை இந்த நேரத்தில் நாம் நினைவு கூரவேண்டும்.

எண்ணற்ற போர்களைப் பார்த்துப் பார்த்துச் சலிப்படைந்த ராஜராஜன், ஒரு கட்டத்தில், ‘யுத்தம் போதும். இனி வேண்டவே வேண்டாம்’ என்று தீர்மானித்தார். அவருக்கே வெறுத்துப் போய் விட்டது. போர் தொடுப்பது... பொருட் களைக் கவர்ந்து வருவது... பலரும் குடும்பத் தலைவரைப் போரில் இழப்பது... இவை எல்லாம் சக்கரவர்த்தியை விரக்தியின் விளிம்புக்கே கொண்டுபோய் விட்டன. போர்க்களத்தில் எத்தனை உயிர் பலிகளை நேருக்கு நேராகப் பார்த்திருந்தால், அந்த மாமன்னர் இத்தகைய ஒரு முடிவுக்கு வந்திருப்பார்?!

சமாதானத்தை விரும்பினார். அதற்கு முதல் படி என்ன?

தூது!

எனவே, அக்கம் பக்கத்து நாடுகளுக்குத் தன் சமாதானத் தூதர்களை அனுப்பி, அவர்களை அங்கேயே நிரந்தரமாகத் தங்க வைத்தார். இரு நாட்டு உறவுக்கும் பாலமாகத் திகழ்ந்தார்கள் அந்தத் தூதர்கள்.

இன்றைக்கு அரசுத் தரப்பில் வெளிநாடுகளுக்கான தூதர்களை ‘அம்பாஸடர்கள்’ என்று ஆங்கிலத்தில் சொல்கிறோமே... இரு நாட்டு உறவையும் பலப்படுத்து வதற்காக என்று சொல்கிறோமே... அதை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே அமல்படுத்தி விட்டார் நம்மவர் ராஜராஜசோழன்.

அதையும் மீறி முரட்டுத்தனமாகத் தன்னை எதிர்த்தவர் களோடு போரிட்டு வென்றார்.

சமாதானமாகப் போனவர்களை அரவணைத்து வாழ ஆரம்பித்தார்.

ஆக... சண்டை, போர்... இதெல்லாம் எதற்கும் ஒரு தீர்வாகாது. வீட்டுக்கும் சரி... நாட்டுக்கும் சரி!

யுத்தம் அவசியமா என்று பல நாடுகளும் இன்று யோசித்து வரும் நிலையில், மகா பெரியவா அன்றைக்கே யுத்தத்தைப் பற்றிப் பேசி இருக்கிறார்.

யுத்தங்கள் தேவையில்லை என்கிறார் மகா பெரியவா.

‘‘யுத்தம் என்று வந்துவிட்டால், பெரியவர்கள் (குடும்பத் தலைவர்கள்) எல்லாம் செத்துப் போய் விடுகிறார்கள். எனவே, அந்தக் குடும்பத்தை ரட்சிக்க ஆள் இல்லாமல் போகிறது. குழந்தைகளைக் கவனித்து வளர்ப்பதற்குப் பெண்கள் படுகிற கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. பெண்கள் தங்களுக்கு உண்டான தர்மத்தை மேற்கொண்டு வாழ்வது சிரமமாகிறது. எனவே, பெண்களுக்கு இத்தகைய இடைஞ்சலைக் கொடுத்தவர்கள் நரகத்துக்குப் போகிறார்கள் (நன்றாகக் கவனிக்க வேண்டும்... பெண்கள் தங்கள் தர்மத்தில் இருந்து பிறழ்ந்து வாழக் காரணமானவர்கள் அனைவரும் நரகத்துக்குப் போகிறார்கள். எனவேதான், பெண்களுக்கு எத்தகைய ஒரு தீங்கையும் மனதால்கூட நினைக்கக் கூடாது என்று சாஸ்திரம் வலியுறுத்துகிறது).

குருஷேத்ரக் களத்தில் இருக்கிற அர்ஜுனன் சொல்கிறான். ‘சண்டை எதற்காக? நாம் சண்டைக்குப் போகவில்லை என்றால் எதிர் தரப்பில் இருக்கிற அவர்களுடைய (கவுரவர்கள்) குடும்பங்களாவது அழியாமல் நன்றாக இருக்கும் அல்லவா? அந்தக் குடும்பங்களுடைய குழந்தைகளுக்காவது நல்ல பழக்கங்கள், நல்ல தர்ம எண்ணங்கள் எல்லாம் வரும்படி செய்வதற்குப் போர்முனையில் எதிர்த்து நிற்கக் கூடிய அந்தப் பெரியவர்கள் நன்றாக இருக்கட்டும். உயிரோடு இருக்கட்டும். நான் யுத்தம் செய்யப் போவதில்லை.’

போர் வேண்டாம். எதிரிகள் அழிந்து போய் விடுவார்கள். அதனால், பல குடும்பங்களில் தர்மம் காப்பாற்றப்பட முடியாமல் போய் விடும் என்று போரினால் ஏற்படக்கூடிய இழப்பை நன்றாக உணர்ந்து கிருஷ்ண பரமாத்மாவிடம் இப்படிச் சொல்கிறான்’’ என்கிற காஞ்சி பெரியவா அடுத்துச் சொல்லக் கூடியதை நாம் நன்றாக மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்!

(ஆனந்தம் தொடரும்...)

சென்ற அத்தியாயத்தை வாசிக்க:

மகா பெரியவா: அருளே ஆனந்தம் - 50

x