“எனது தெய்வீகமான அவதாரங்களையும், செயல்களையும் உள்ளபடி அறிகின்றவர்கள் உடலை விட்டபின் மீண்டும் பிறக்க மாட்டார்கள். என்னையே அடைகின்றார்கள்” -ஸ்ரீமத் பகவத்கீதை-4:9.
ஸ்ரீமத் பாகவதத்தில் 121 அத்தியாயங்களில் ஸ்ரீ கிருஷ்ண சரிதம் கூறப்படுகின்றது. ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஒரு சாதிக்கோ, ஒரு மதத்திற்கோ, ஒரு மொழியினருக்கோ, ஒரு நாட்டிற்கோ, ஓர் உலகத்திற்கோ, ஓர் உயிரினத்திற்கோ உரியவர் அல்லர். எல்லா உயிரினங்களுக்கும், எல்லா உலகங்களுக்கும், ஸ்ரீ கிருஷ்ண பகவானே கடவுள்.
ஸ்ரீமத் பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுவதைக் கேளுங்கள்:
“நானே உலகத்தின் தாய், தந்தை, பாட்டன். ஒருவன் செய்யும் நன்மை தீமைகளுக்கு ஏற்ப பலன்களை அளிப்பவன். எல்லோரும் அறிவதற்கு உரியவன்” - ஸ்ரீ மத் பகவத் கீதை 9.17.
“என்னைவிட மேலானது வேறு எதுவும் இல்லை; எவரும் இல்லை. நூலில் மணிகள் நிற்பது போல, அனைத்தும் என்னிடத்தில் நிற்கின்றன” - ஸ்ரீ மத் பகவத் கீதை 7.7.
“நானே அனைத்து உயிர்களுக்கும் புகலிடம். நானே அனைத்து உயிர்களுக்கும் பர்த்தா. நானே அனைத்து உயிர்களுக்கும் சாட்சி.நானே அனைத்து உயிர்களுக்கும் வசிப்பிடம். நானே அனைத்து உயிர்களும் சரணம் அடையத்தக்கவன். நானே அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்பவன்.
நானே அனைத்திற்கும் பிறப்பிடம். நானே அனைத்திற்கும் அழியாத வித்து” - ஸ்ரீ மத் பகவத் கீதை 9.18.
நினைத்த மாத்திரத்திலேயே அண்ட சராசரங்கள் அனைத்தையும் படைத்து, காத்து, அழிக்கின்ற சர்வ சக்தியுள்ள ஸ்ரீ மந் நாராயணன் 5,250 ஆண்டுகளுக்கு முன் அதாவது கி.மு. 3227-ம் ஆண்டு மதுராவில் வசுதேவருக்கும் - தேவகிக்கும் 8-வது குழந்தையாக ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவாக அவதரித்தார்.
125 ஆண்டுகள் இந்த பூமியில் எல்லோரும் கண்களால் காணும் படியாகவும், அவருடைய மதுரமான சொற்களை காதால் கேட்கும்படியாகவும், மனதால் அவருடைய திருமேனியை நினைக்கும்படியாகவும், நம்மில் ஒருவராக எழுந்தருளிந்தார். கி.மு. 3102-ல் தன்னுடைய பரமபதத்திற்கு மீண்டும் எழுந்தருளினார்.
ஸ்ரீ கிருஷ்ணராக பகவான் அவதாரம் எடுத்தது ஏன்? இதற்கான பதிலை ஸ்ரீ கிருஷ்ண பகவானே கூறுவதைக் கேளுங்கள்:
“எப்பொழுதெல்லாம் தர்மம் அழிந்து, அதர்மம் பெருகுகிறதோ, அப்பொழுதெல்லாம் நான் அவதரிக்கிறேன்” - ஸ்ரீமத் பகவத் கீதை 4-7.
“தர்மத்தை நிலைநாட்ட நான் யுகந்தோறும் அவதரிக்கிறேன்” - ஸ்ரீமத் பகவத் கீதை 4-8.
ஸ்ரீ கிருஷ்ண பகவான் நினைத்தால் போதும், அதர்மம் அழியும், தர்மம் பெருகும்.
சூரியனையும், சந்திரனையும், எண்ணிக்கையற்ற கிரகங்களையும் நினைத்த மாத்திரத்தில் படைத்து இயக்குகின்ற ஸ்ரீ கிருஷ்ண பகவானால் முடியாதது எதுவும் இல்லை.
கெளரவர்களின் சபையில் திரெளபதியின் ஆடையை துச்சாதனன் களைய முற்பட்டபோது, துவாரகையில் இருந்தபடியே விதவிதமான ஆடைகளை மலைபோல் குவியச் செய்தவர் ஸ்ரீ கிருஷ்ண பகவான்.
தாம் இருந்த இடத்தில் இருந்து கொண்டே; குசேலரின் வீட்டைத் துவாரகையில் உள்ள தனது அரண்மனை போல் மாற்றி அனைத்துச் செல்வங்களையும் குவியச் செய்தவர் ஸ்ரீ கிருஷ்ண பகவான்.
எனவே, தர்மத்தை நிலைநாட்டவும் அதர்மத்தை அழிக்கவும் மட்டுமல்ல தம்முடைய பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றவும் அவதரித்தார்.
பக்தர்களுக்கு அப்படி என்ன விருப்பம்?
ஸ்ரீ கிருஷ்ண பகவானைப் பக்தர்கள் தலைவனாகவும், குருவாகவும், குழந்தையாகவும், தோழனாகவும், காதலனாகவும் பல பாவனைகளுடன் பக்தி செய்கின்றனர்.
அந்த பக்தர்களின் பாவனைகளை நிறைவேற்றவே பூமியில் அவதரிக்கிறார். அந்த பக்தர்களே ஸ்ரீ கிருஷ்ண பகவானின் பெற்றோர்களாகவும், தோழர்களாகவும், ஏவலர்களாகவும், காதலியாகவும், சிஷ்யராகவும், சுற்றத்தார்களாகவும் ஆகின்றார்கள்.
“இந்த பூமியில் பிறந்தவர்களிடம் முன் செய்த புண்ணியத்தின் பயனாய்க் குழந்தையாகவும், நண்பனாகவும் ஸ்ரீ கிருஷ்ண பகவான் திருவிளையாடல்களைப் புரிந்தார்” என்று ஸ்ரீமத் பாகவதம் 10.12.11. கூறுகிறது.
தர்மத்தை நிலைநாட்ட மட்டுமல்ல, பக்தர்களின் ஆசைகளை நிறைவேற்ற மட்டுமல்ல, இன்னும் உயர்ந்த காரணம் ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கு உயிர்கள் மீது கொண்ட இரக்கமே ஆகும். அது எப்படி?
நாம் அடைகின்ற துன்பத்திற்கும், பிறவிக்கும் காரணம் நம்முடைய மனத்தில் உள்ள தீய எண்ணங்களாகிய நோய்களே ஆகும். தீய எண்ணம் தீய செயலாக மாறுகிறது. அதனால் துன்பமும், பிறவியும் தொடர்ந்து ஏற்படுகின்றன.
உடல் நோயுற்றால் அதற்கான மருந்தைச் சாப்பிட்டுக் குணப்படுத்துவது போல, நமது மனத்தில் உள்ள தீய எண்ணங்களாகிய நோயைக் குணப்படுத்தி ஆற்றலையும், ஆனந்தத்தையும் அளிக்கும் அருமருந்து ஸ்ரீ கிருஷ்ண பகவானின் திவ்ய செயல்களாகும்.
எச்செயல்களைச் சிந்தித்தால் மனம் தூய்மையாகித் தன்னோடு வாழ்வதற்கு தகுதி பெறுமோ அவ்விதமான செயல்களைச் செய்வதற்கு ஸ்ரீ கிருஷ்ண பகவான் பூமியில் அவதரித்தார்.