கண்பார்வைக் குறைபாடுகளை நீக்கும் எண்கண் முருகன்!


திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற எண்கண் முருகன் கோவில் பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது.

திருவாரூர் – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில், அதாவது திருவாரூரில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது எண்கண் என்ற இடத்தில்தான், முருகனின் ஆலயம் அமைந்துள்ளது. அதனாலேயே இது எண்கண் முருகன் கோவில் என பெயர்பெற்றது.

இங்குள்ள முருகன் சிலை முத்தரச சோழன் காலத்தில் வடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இச்சிலை போன்றே பொரவாச்சேரி, எட்டுக்குடியில் சிலைகள் உள்ளன. மூன்று திருத்தலங்களிலும் மயில் மேல் அமர்ந்த கோலத்தில் ஆறுமுகப்பெருமான் காட்சி தருகிறார்.

முருகன் மயில்மேல் அமர்ந்திருப்பதும் மயில் ஒற்றைக்கால் தாங்கி நிற்பது போல் உள்ளது சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த சிலையை வடித்த சிற்பி முதலாவதாக சிக்கல் முருகன் கோவிலில் சிலை வடித்தார்.

இதே போல் வேறு சிலை வடிக்கக் கூடாது என கூறி முத்தரச சோழன் சிற்பியின் வலது கை கட்டைவிரலை தானமாக பெற்றதாக கூறப்படுகிறது. வலது கையின் கட்டைவிரல் இல்லாத சிற்பி மீண்டும் எட்டுக்குடியில் முருகன் சிலையை வடித்துள்ளார்.

அதை அறிந்த முத்தரச சோழன் சிற்பியின் இரு கண்களை தானமாக பெற்றுக் கொண்டார் என்பது புராணம். இந்நிலையில், சிற்பியை எண்கண் முருகன் சிலை வடிக்க இறைவன் பணிந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. அப்படி சிற்பி வடித்த சிலைதான் எண்கண் முருகன் சிலை என்று கூறப்படுகிறது.

மேலும் சிலை வடித்த சிற்பிக்கு இறைவன் கண் கொடுத்ததால் எண்கண் என்று இந்த ஊர் பெயர் பெற்றதாகவும், எட்டு கண்களைக் கொண்ட முருகன் என்பதால் எண்கண் என்று பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த தலத்தில் வந்து வேண்டுபவர்களுக்கு கண்பார்வை குறைப்பாடுகள் நீங்க பக்தர்கள் இத்தலத்தில் பிரார்த்தனைச் செய்கின்றனர்.

x