விரஜ பூமி
ஸ்ரீமந் நாராயணனின் தசாவதாரங்களில் ஒன்பதாவது அவதாரம் ஸ்ரீகிருஷ்ண அவதாரம். திரேதாயுகத்தில் இன்றைய உத்தரபிரதேச மாநிலம் யமுனை நதிக்கரையில் உள்ள மதுரா நகரில் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா அவதரித்தார்.
யமுனை ஆற்றின் இருபுறமும் 48 வனங்கள் இருந்ததாக ஸ்ரீபாத்ம புராணம் கூறுகிறது. இவற்றில் மதுவனம் (மதுரா), கோகுலம் என்கிற மஹாவனம், தலாவனம், குமுதன வனம், பாண்டிரவனம், பஹீளவனம், பேல்வனம், விருந்தாவனம், கதிரவனம், லோஹவனம், பத்ரவனம், காம்யவனம் ஆகிய 12 வனங்கள் முக்கியமானவை.
இவை அனைத்தும் திரேதாயுகத்தில் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கன்று மேய்த்தும், தனது நண்பர்களுடன் விளையாடி பல்வேறு லீலைகள் புரிந்த இடங்கள். இவை விரஜ பூமி எனப்படுகின்றன. இதனை நாச்சியார் திருமொழியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் கீழ்க்கண்டவாறு பாடுகிறார்.
“பட்டி மேய்ந்தோற் காரேறு பலதேவற்கோர் கீழ்க்கன்றாய்
இட்டீறிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே
இட்டமான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி
விட்டுக் கொண்டு விளையாட விருந்தாவனத்தே கண்டோமே”
விளக்கம்: ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, பலராமருடனும், பசுக்களுடனும், யாதவச் சிறுவர்களுடனும், ராதை மற்றும் கோபியர்களுடனும் யமுனையில் விளையாடி பற்பல லீலைகளைப் புரிந்த விரஜ மண்டலத்தை தரிசிக்கிறோம்.
விரஜ பூமி உத்தரபிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 168 கி.மீ. சதுர கி.மீ. பரப்பளவுக்கு விரிந்து கிடக்கிறது. இதன் எல்லைகள், வடகிழக்கில் தற்போது அலிகார் மாவட்டத்தில் உள்ள பாரா என்கிற இடம் வரையும், வடமேற்கே ஹரியானா மாநிலம் குராகாவ் மாவட்டம் சோன்கதா என்ற இடம் வரையும், தென்கிழக்கில் உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் சூரசேன கிராமம் வரையும், தென்மேற்கே ராஜஸ்தான் மாநிலம் காமியவனம் வரையிலும் பரந்து கிடக்கிறது. இதனைச் சுற்றி பாதயாத்திரையாக வலம் வரும் வழக்கம் இப்போதும் உள்ளது.
மதுரா நகரம் முற்காலத்தில் யமுனை ஆற்றின் மேற்கு கரையில் காடாக இருந்தது. மது என்ற அரக்கன் இந்த காட்டையும் அதன் பிரதேசத்தையும் ஆண்டான். கோசல நாட்டு மன்னன் ஸ்ரீராமபிரானின் தம்பியான சத்ருக்னனால், மது தோற்கடிக்கப்பட்டான். பின்னர் சத்ருக்னன் இந்த காட்டை அழித்து இங்கு மதுரா என்ற நகரத்தை கட்டினான்.
பின்னர், சூரசேன ராஜ்யத்தின் தலைநகராக மதுரா மாறியது. இது மகாபாரத காலத்தில் யாதவ மன்னர்களான உக்ரசேனா மற்றும் கம்சா ஆகியோரால் ஆட்சி செய்யப்பட்டது. மதுராவில் கம்சனின் அரண்மனையில் இருந்த சிறைச்சாலையில் ஸ்ரீவசுதேவருக்கும், தேவகிக்கும் திருப்புதல்வனாக ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா அவதரித்தார். பின்னர் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவால் கம்சன் கொல்லப்பட்ட பின், ஸ்ரீவசுதேவர் இதன் மன்னராக விளங்கினார்.
உலகில் முக்தி தரும் ஏழு தலங்களில் மதுராவும் ஒன்றாக சிறப்பிக்கப்படுகிறது.