திருவண்ணாமலை: புரட்டாசி மாத பவுர்ணமியை யொட்டி திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த ஜமீன் கூடலூர் கிராமத்தில் உள்ள மகா காலபைரவர் கோயிலில் 108 மூலிகைகளால் சிறப்பு யாகம் நடைபெற்றது.
ஜமீன் கூடலூர் கிராமத்தில் உள்ள மகா காலபைரவர் கோயிலில் நேற்று புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி, கோயில் நிறுவனர் பரமானந்த சுவாமிகள், 108 மூலிகைகள் கொண்டு சிறப்பு யாகம், 108 சங்காபிஷேகம் மற்றும் பிரபஞ்ச தியான பயிற்சி ஆகியவற்றை நடத்தினார்.
பின்னர் பால், பன்னீர், சந்தனம் இளநீர், பஞ்சாமிர்தம் ஆகியவை கொண்டு மகா கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
இதையடுத்து, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய கால பைரவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில், பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.