ஆவணி ஞாயிறும் நாகர் வழிபாடும்


நாகர்கோவில் நாகராஜா கோயில்

நாகர் வழிபாடு மிகவும் பழமையானது. சைவம், வைணவம், சாக்தம், கெளமாரம், காண்பத்யம், சமணம், பெளத்தம் என இந்தியாவில் தோன்றிய அனைத்து வழிபாட்டு முறைகளிலும் நாகர் வழிபாடு முக்கியத்துவம் பெறுகிறது.

நாகர்கோவில் நாகராஜா கோயில்

ஸ்ரீமகாவிஷ்ணு, சிவபெருமான், சக்திதேவி, விநாயகப் பெருமான், முருகப்பெருமான் உள்ளிட்ட தெய்வங்களோடு இணைந்து நாகர்களை வழிபடுவதும், நாகர்களை மட்டுமே வழிபடும் முறையும் உள்ளது. நாகம் என்பது வேறு, சர்ப்பம் என்பது வேறு. நாகம் என்பது நாக லோகத்தில் வாழும் நாகதேவர்களைக் குறிக்கும். சர்ப்பம் என்பது பூமியில் வாழும் ஊர்வனவற்றைக் குறிக்கும். இந்தியாவைத் தாண்டி கிரேக்கம், இத்தாலி, எகிப்து, நேபாளம், இலங்கை போன்ற நாடுகளிலும் நாக வழிபாடு பண்டைய காலம் முதலே உள்ளது.

நாக தெய்வங்களின் கதைகளோடு தொடர்புடைய, நாகர்கோவில், நாகப்பட்டினம், கோடகநல்லூர் (திருநெல்வேலி), திருவனந்தபுரம், திருக்காளத்தி (ஆந்திரா), திருப்பாம்புரம், பாம்புக்கோவில்சந்தை (தென்காசி), திருநாகேஸ்வரம் (கும்பகோணம்) என பல ஊர்கள் உள்ளன. பண்டைய தமிழர் வழிபாட்டு முறைகளில் நாக வழிபாடு தொன்றுதொட்டு நடைமுறையில் இருப்பதை பல்வேறு நூல்களில் காண்கிறோம்.

தென் தமிழகத்திலும், கேரளத்திலும் அனந்தன், வாசுகி, தட்சன், சங்கன், கார்க்கோடகன், குளிகன், பத்மன், மஹாபத்மன் ஆகிய எட்டுவித நாக தெய்வங்களை மக்கள் வழிபடுகின்றனர். கோயில்கள் மட்டுமின்றி வீடுகளின் முற்றம், பின்பகுதி தோட்டம் போன்றவற்றில் நாகர் ஆராதனை நடைபெறுகிறது. ஆயில்ய பூஜை, சர்ப்ப பிரதிஷ்டை, அஷ்டநாக பூஜை, சர்ப்பசம்ஸ்காரம், நூறும்பால், சர்ப்ப பலி, சர்ப்ப பாட்டு, புள்ளுவப் பட்டு, நாக பஞ்சமி போன்ற பெயர்களில் குறிப்பிட்ட நாட்களில் நாகர் வழிபாடு விமரிசையாக நடைபெறுகிறது. நாக வழிபாட்டு முறைகள் குறித்தும், ஒற்றைத் தலைமுதல், ஆயிரம் தலை வரையான நாக தெய்வங்கள் குறித்தும் ‘சில்பரத்னை’ என்ற மலையாள நூல் விவரிக்கிறது.

நாகர்கோவில் நாகராஜா கோயில்

நாகராஜா கோவில்

நாகர்கோவில் நாகராஜா கோயில் நாகர் வழிபாடு மட்டுமே கொண்டது. நகரின் மத்தில் ஓலைக்கூரையின் கீழ் அமைந்திருக்கிறது நாகராஜா கோயில். இக்கோயிலின் பெயரே, ஊரின் பெயராக நாகர்+கோவில் என்று விளங்குகிறது.

முற்காலத்தில் புல் அறுக்கச் சென்ற பெண் ஒருவரின் அரிவாள் பட்டதால், ஐந்து தலை நாகத்தின் ஒரு தலை அறுபட்டதாகவும், அதைக் கண்டு அஞ்சிய அந்தப் பெண் ஊருக்குள் சென்று தகவல் கூற, ஊர்த் தலைவரும், மக்களும் வந்து பார்த்தபோது, அந்த இடத்தில் ஐந்துதலை நாகத்தின் கற்சிலை இருந்ததாகவும், மக்களின் வழிபாட்டுக்குரிய தலமாக மாறிய அந்த இடமே இப்போதைய நாகராஜா கோவில் என்றும் தலபுராணம் கூறுகிறது.

கேரளத்தையும், தமிழகத்தின் தெற்கு, மேற்கு பகுதிகளையும் சேர மன்னர்கள் ஆட்சிபுரிந்தனர். அதன்பிறகு சேர நாடு பல பகுதிகளாக பிரிந்தது. சேர நாட்டின் தென்பகுதி வேணாடு என அழைக்கப்பட்டது.

வேணாட்டு மன்னர்கள் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி, களக்காடு, கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் போன்ற பகுதிகளை தலைநகரமாகக் கொண்டு ஆட்சிபுரிந்தனர். இவர்களின் அரண்மனை, கோட்டை கட்டுமானங்களை இப்போதும் காணலாம். இவ்வாறு 14-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் களக்காட்டைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த வேணாட்டு மன்னர் பூதலவீர உதயமார்த்தாண்ட மகாராஜாவுக்கு தொழுநோய் பீடித்தது. ஜோதிடர்களின் ஆலோசனைப்படி, சிம்ம ராசியில் சூரியன் உலவும் ஆவணி மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் நாகராஜா கோயிலில் தரிசனம் செய்தார் மன்னர். இத்தலத்தின் தல விருட்சமான ஓடவள்ளிக் கொடி இலைகளை அவர் உண்டு, விரதம் மேற்கொண்டார். இதன்பயனாக அவரது நோய் நீங்கியது. அதுமுதல் ஆவணி ஞாயிற்றுக் கிழமைகளில் நாகராஜரை வணங்க கூட்டம் குவிகிறது.

நாகர்கோவில் நாகராஜா கோயில்

இக்கோயிலில் எங்கு பார்த்தாலும் ஆயிரக்கணக்கான நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலையிலேயே இங்கு மக்கள் குவிகின்றனர். பசும்பாலை எடுத்து வந்து, இங்கு வரிசையாகவுள்ள நாகர் சிலைகள் ஒவ்வொன்றுக்கும் பாலை அபிஷேகம் செய்தவாறு செல்வார்கள். சிலர் மஞ்சள் பொடியைத்தூவி, மலர்களையும் படைப்பார்கள். குறிப்பாக பெண்கள் கூட்டம் கடுமையாக இருக்கும்.

பின்னர் நாகராஜாவையும், அருகிலுள்ள அனந்தகிருஷ்ணன், சிவபெருமான் சன்னதிகளிலும் அர்ச்சனை செய்து வழிபடுவார்கள்.

இக்கோயில் பூஜைகளை கேரள தந்திரிகள் மேற்கொள்கின்றனர். நாகராஜரின் மூலஸ்தானத்தில் உள்ள புற்று மண்ணையே பிரசாதமாக தருகின்றனர். இவ்வாறு பல நூறு ஆண்டுகளாக பிரசாதத்துக்கு மண் எடுத்த போதும் மூலஸ்தானத்தில் மண்ணின் அளவு குறைவதே இல்லை என்பது அதிசயம்.

ஆவணி ஞாயிற்றுக் கிழமைகள்: 2023 ஆகஸ்ட் 20, 27, செப்டம்பர் 3, 10, 17.

x