ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி தோவாளை பூ மார்க்கெட்டில் நேற்று ஒரே நாளில் 700 டன் பூக்கள் விற்பனையாகி சாதனை படைத்தது.
கேரள மக்களின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் பண்டிகை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின் நிறைவு நாளான இன்று திருவோண பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கேரள மாநிலம் மற்றும் கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட தமிழக எல்லை மாவட்டங்களிலும் களை கட்டியுள்ளன.
ஓணம் பண்டிகையின் போது முக்கிய பங்கு வகிப்பது அத்தப் பூ என்கிற பூக்களினால் தயாரிக்கப்படுகிற கோலம் ஆகும். வண்ண வண்ண பூக்களால் வீட்டின் முன்புறங்களிலும், தெரு வீதிகளிலும் பூக்கோலமிட்டு பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவர். ஓணம் பண்டிகை காலம் தொடங்கியது முதல் பூக்கள் விற்பனை அதிகரித்து வந்தது.
இந்நிலையில் இன்று கொண்டாடப்படும் திருவோணம் பண்டிகைக்காக நேற்று ஒரே நாளில் மட்டும் 700 டன் பூக்கள் விற்பனையானது. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பூ மார்க்கெட்டில் நேற்று முன் தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடிய விடிய பூ விற்பனை நடைபெற்றது. கடந்த ஆண்டு ஓணம் பண்டிக்கை முந்தைய நாளில் 500 டன் பூக்கள் விற்பனை ஆன நிலையில் இந்த ஆண்டு அது 700 டன்னை கடந்து விற்பனையானது.
தோவாளை சந்தையில் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், பெங்களூரூ உள்ளிட்ட வெளி மாநில பகுதிகளில் இருந்தும் சுமார் 10 டன் பூக்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டிருந்த நிலையில் 700 டன் பூக்கள் விற்பனையானது சாதனையாக பார்க்கப்படுகிறது.