திருக்காட்கரை அப்பனை வரவேற்கும் திருவோணம்


திருவோணத் திருநாளில் அத்தப்பூக் கோலம்

உலகில் மரணமேயில்லாமல் சிரஞ்சீவியாக வாழும் ஒன்பது பேரில் மகாபலி சக்கரவர்த்தியும் ஒருவர். ஸ்ரீமகாவிஷ்ணுவின் தீவிர பக்தர்.

மகாபலி சக்கரவர்த்தி, வாமணர் வேடம் தரித்து ஓணம் கொண்டாட்டம்

பிரகலாதனின் வரம்

துவாபர யுகத்தில் தோன்றிய அசுரன் ஹிரண்யகசிபு தன்னையே இறைவனாக அறிவித்துக் கொண்டான். தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் பல்வேறு இன்னல்களைக் கொடுத்தான்.

ஹிரண்யகசிபுவின் மகன் பிரகலாதன். மகாவிஷ்ணுவின் தீவிர பக்தனாகிய பிரகலாதன், தனது தந்தையைத் திருத்த எவ்வளவோ முயன்றான். ஆனால் தனது மகனையும் ஹிரண்யகசிபு கொல்லத் துணிந்தான். கடைசியில் நரசிம்ம மூர்த்தியாக அவதாரம் எடுத்து வந்த மகாவிஷ்ணுவால், ஹிரண்யகசிபு கொல்லப்பட்டான்.

அப்போது மகாவிஷ்ணுவிடம், தனது தந்தைக்கு மோட்சம் அளிக்க வேண்டும் என்றும், தனது சந்ததியினர் உமது பக்தர்களாகவே விளங்க வேண்டும் என்றும் பிரகலாதன் வரத்தைக் கேட்டுப் பெற்றான்.

பிரகலாதனின் பேரன்

ஹிரண்யகசிபுவின் நாட்டை பிரகலாதனும், அவனுக்குப் பின் அவனது மகன் வீரோசனாவும், அவனையடுத்து அவனது மகன் மகாபலியும் சிறப்பாக ஆட்சிசெய்து வந்தனர். கொடை வள்ளலான மகாபலி சக்கரவர்த்தி தனது தானத்தின் மகிமையால் இந்திரனைக் காட்டிலும் புகழ்பெற்றவனாக விளங்கினான். ஆனாலும் தான் என்ற அகங்காரம் அவனுள் கிளர்ந்து எழுந்தது. தனது பக்தனாகிய மகாபலியிடம் இருந்த அகங்காரத்தை அகற்ற விருப்பம் கொண்டார் ஸ்ரீமகாவிஷ்ணு.

வாமண அவதாரம்

மகாபலி சக்கரவர்த்தி மிகப்பெரிய யாகத்தை மேற்கொண்டார். யாகத்தில் பங்கேற்றவர்கள் கேட்டதையெல்லாம் வாரி வழங்கினார். இந்த யாகத்தில் குள்ளமான சிறுவனைப் போல் உருவம் கொண்ட வாமணன் என்ற பிரம்மச்சாரி பங்கேற்றார். வலதுகையில் கமண்டலமும், இடதுகையில் தாழம்பூக் குடையும் வைத்துக் கொண்டு, உடல்முழுக்க காவித்துணியால் சுற்றியபடி, யாகசாலைக்கு அவர் வந்தார்.

மகாபலி சக்கரவர்த்திக்கும், மற்றவர்களுக்கும் அந்த குள்ள உருவத்தைக் கண்டு சிரிப்பு வந்தது. அவர் நேராக மகாபலியிடம் சென்றார். தனக்கு மூன்று அடி நிலம் தானமாக வேண்டும் என்றார். சிறுவனின் பாதத்தில் மூன்று அடி நிலம் என்பது சாதாரண விஷயம். உடனே கமண்டல நீரை தாரைவார்த்து, நிலத்தை கொடையளிக்க மன்னன் தயாரானார்.

அசுர மன்னர்களின் குருவான சுக்கிராச்சாரியார் அங்கு வந்தார். குள்ளமான வாமணராக வந்திருப்பது ஸ்ரீமகாவிஷ்ணுவே என்பதை அறிந்து கொண்டார். கமண்டலத்தில் ஒரு வண்டு வடிவத்தில் சென்று தண்ணீர் வெளியே வராமல் தடுத்தார். இதையறிந்த வாமணர் ஒரு தர்ப்பை குச்சியால் கமண்டல வாயைக் குத்த உள்ளேயிருந்த வண்டின் ஒரு கண் பறிபோனது. பின்னர் மகாபலி சக்கரவர்த்தி தாரை வார்த்து, மூன்று அடி நிலத்தை தானம் வழங்கினார்.

அடுத்த நிமிடம் விஸ்வரூபமெடுத்த வாமணர் தனது வலது பாதத்தால் பூமியையும், இடது பாதத்தால் வானத்தையும் அளந்தார். ‘இரண்டு அடி நிலத்தை எடுத்துக் கொண்டேன். மூன்றாவது அடி நிலம் எங்கே?’ என்று கேட்டார்.

மகாபலி சக்கரவர்த்தி மண்டியிட்டு தனது தலையை சமர்ப்பித்தார். உடனே மீண்டும் பகவான் வாமணராக மாறி தனது பாதத்தை மகாபலியின் தலையில் வைத்து மூன்றாவது அடியை நிறைவு செய்தார். பகவானின் பாரம் தாங்க முடியாமல் மகாபலி சக்கரவர்த்தி பாதாள லோகம் சென்றார்.

அப்போது மகாபலி சக்கரவர்த்தி, ‘ஆண்டுக்கு ஒருமுறை எனது நாட்டின் மக்களைக் காண இதே நாளில் நான் இங்கு வரவேண்டும். அந்த வரத்தை தரவேண்டும்’ எனக்கோரினார். பகவானும் இசைந்தார்.

தான் செய்த தானத்தின் மகிமையால் மகாபலி சக்கரவர்த்தி இன்றைக்கும் சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார். ஆண்டுதோறும் ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திர நாளில் அவர் தான் ஆட்சி செய்த இன்றைய கேரளத்துக்கு வருகிறார் என்பது ஐதீகம். இவ்விழாவே திருவோணத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

திருக்காட்கரை ஆலயம்

திருக்காட்கரை

வாமணராக அவதாரம் எடுத்த ஸ்ரீமகாவிஷ்ணு இந்த பூமியில் முதன்முதலாக தனது திருப்பாதத்தை பதித்த இடம் திரு+கால்+கரை = திருக்காட்கரை எனப்படுகிறது. கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ள திவ்யதேசமாகிய திருக்காட்கரை 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. சுவாமி நம்மாழ்வாரால் பாடப்பட்ட திவ்யதேசம் இது. மகாபலி யாகம் நடத்தியதும், வாமணர் தானம் கேட்டதும், விஸ்வரூபம் எடுத்ததும், மகாபலியை பாதாளத்துக்கு அனுப்பியதும் இங்குதான் என்பது குறிப்பிடத்தக்கது.

திருவோணத் திருவிழா தொடங்கும் நாளை ஆண்டுதோறும் திருக்காட்கரை தேவஸ்தானம்தான் முறைப்படி அறிவிக்கும். அதன்பிறகுதான் உலகம் முழுவதும் இருக்கும் மலையாள மக்கள் தங்கள் வீடுகளில் திருவோணத் திருவிழாவைத் தொடங்குவார்கள்.

திருக்காட்கரை ஆலயம்

10 நாள் கொண்டாட்டம்

ஆவணி மாதம் அஸ்தம் நட்சத்திரம் நாளில் இவ்விழா தொடங்குகிறது. அன்று தொடங்கி 10-வது நாளான திருவோணம் நாளில் இவ்விழா நிறைவுபெறுகிறது. இந்த பத்து நாட்களும் மலையாள மக்கள் மகாவிஷ்ணுவையும், மகாபலி சக்கரவர்த்தியையும் போற்றி பல்வேறு பூஜைகளை மேற்கொள்வார்கள்.

விழாவின் முதல்நாளில் பிரமிடு வடிவில் மண்ணாலான இரு உருவங்களைச் செய்வார்கள். அதில் பெரிதாக இருக்கும் உருவத்தை மகாவிஷ்ணுவாகவும், சிறிதாக இருக்கும் உருவத்தை மகாபலியாகவும் எண்ணி, தங்கள் வீட்டின் மையப்பகுதியில் வைத்து, ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவித அலங்காரங்களைச் செய்வார்கள். அந்த பெரிய உருவத்துக்கு ஓணத்தப்பன் அல்லது திருக்காட்கரை அப்பன் என்று பெயர். அதன் முன்பாக அத்தப்பூ கோலம் எனப்படும் மலர்களாலான கோலத்தை வரைவார்கள். ஓணத்தப்பனுக்கு தினமும் பல்வேறு பலகாரங்கள் செய்து நைவேத்தியம் படைத்து பூஜைகள் செய்வார்கள்.

திருவோண ஊஞ்சல் ஆடுவது, திருவோண ஓடம் விடுவது, திருவோண கோலமிடுவது, திருவோண பட்டு உடுத்துவது, திருவோண விருந்து உண்பது என, ஆவணி மாதத்தின் இந்த 10 நாட்களும் கோலாகல திருவிழாவாக வீடுகள்தோறும் கொண்டாடுவார்கள். கேரளம் முழுவதும் உள்ள கோயில்களில் விசேஷ பூஜைகள் நடைபெறும். பல்வேறு ஊர்களிலும் சிறுவர்கள் மகாவிஷ்ணு போலவும், மகாபலி சக்கரவர்த்தி போலவும் வேடமிட்டு, முத்துக்குடை, தாலப்பொலி தாங்கி, யானை குடைபிடிக்க ஊர்வலம் நடத்துவார்கள். கேரள மாநில அரசின் சார்பிலும் திருவோண ஊர்வலம் மிகப்பிரமாண்டமாக நடைபெறும்.

சுதந்திரத்துக்கு முன்புவரை கேரள மாநிலத்தில் இடம்பெற்றிருந்த கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை தாலுகா மக்களும் திருவோணத் திருவிழாவை விமரிசையாக கொண்டாடுகின்றனர்.

ஜாதி, மதங்களைக் கடந்து கேரள மக்கள் கொண்டாடும் திருவிழாவாக திருவோணம் விளங்குகிறது.

20.8.2023 - திருவோணம் தொடக்கம்.

29.8.2023 - திருவோணத் திருவிழா.

x