மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா தீர்த்தவாரி உற்சவம்!


மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் ஆவணி மூலத் திருவிழாவின் நிறைவுநாளான (12-ம் நாள்) இன்று (செப்.16) பொற்றாமரைக் குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இன்று மாலையில் வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளினர். திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை, திருவாதவூர் மாணிக்கவாசகர் விடைபெறும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா ஆக.30) கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. ஆக.30 முதல் செப்.04-ம் தேதி வரை தினமும் இரவு சந்திரசேகரர் உற்சவம் நடந்தது. செப்.05-ல் முதல் திருவிளையாடலாக கருங்குருவிக்கு உபதேசம் அருளிய திருவிளையாடல் நடந்தது. செப்.06-ல் நாரைக்கு முக்தி கொடுத்த திருவிளையாடல், செப்.07-ல் மாணிக்கம் விற்ற லீலை, செப்.08-ல் தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை, செப்.09-ல் உலவாக்கோட்டை அருளிய லீலை, செப்‌10-ல் காலை பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை. செப்.11- ல் காலையில் வளையல் விற்ற லீலையும், அன்று மாலையில் சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் நடந்தது.

செப்.12-ல் நரியை பரியாக்கிய லீலை நடந்தது. திருப்பரங்குன்றம் முருகன்-தெய்வானை, திருவாதவூர் மாணிக்கவாசகர் எழுந்தருளினர். செப்13-ல் பிட்டுத்தோப்பில் பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடந்தது. செப்.14-ல் மாலையில் விறகு விற்ற லீலை, செப்.15-ல் காலையில் சட்ட தேர், மாலையில் சப்தாவர்ண சப்பரத்தில் எழுந்தருளினர். 12-ம் நாளான நேற்று மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரை குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் இன்று (செப்.16) நடைபெற்றது. அப்போது பிரியாவிடை சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளினர்.

அதனையொட்டி மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானையுடன் தங்கக்குதிரை வாகனத்திலும், திருவாதவூர் மாணிக்கவாசகர் வெள்ளிக்குதிரை வாகனத்தில் விடைபெறும் நிகழ்வு நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி பழனிவேல் ராஜன், கோயில் இணை ஆணையர் கிருஷ்ணன் தலைமையில் அறங்காவலர்கள் கோயில் பணியாளர்கள் செய்தனர்.

x