திங்களூரில் அந்தணர் குலத்தில் அவதரித்த அப்பூதியடிகள், சிவபெருமானும் அடியாரும் ஒருவரே என்பதை அனைவருக்கும் உணர்த்தியவர். அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசரை தெய்வமாக வணங்கி சிவப்பதம் அடைந்தவர்.
சோழ நாட்டில் திங்களூர், பசுமை நிறைந்த திருத்தலம் ஆகும். இங்கு 7-ம் நூற்றாண்டில், அப்பூதியடிகள் என்ற சிவனடியார், ஈசன் திருவடிகளையே இடையறாது நினைத்து வணங்கி வந்தார். மனைவி மற்றும் மகன்களுடன் வசித்து வந்த இவர், தலங்கள் தோறும் சென்று இறைவனை தரிசித்து மகிழ்ந்தார். அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசர் பெருமானைப் பற்றியும் அவரது திருத்தொண்டுகளைப் பற்றியும் கேள்வியுற்ற அப்பூதியடிகள், அவரையே நினைத்துக் கொண்டிருந்தார்.
தாம் பெற்ற செல்வங்களுக்கு மூத்த திருநாவுக்கரசு, இளைய திருநாவுக்கரசு என்று பெயர் சூட்டினார். தான் ஏற்படுத்திய தண்ணீர் பந்தல்கள், மடங்கள், சாலைகள், குளங்கள் முதலானவற்றுக்கு திருநாவுக்கரசர் பெயரையே சூட்டினார். திருநாவுக்கரசர் மீதான பக்தி மேலிட்டு, தன் இல்லத்தில் உள்ள அளவைகள், தராசுகள், பசுக்கள், எருமைகள் அனைத்துக்கும் திருநாவுக்கரசர் பெயரையே சூட்டினார். சைவ அடியாரையும் இறைவனாகவே கருதினார்.
திருநாவுக்கரசரின் தேவாரப் பாடல்கள் குறித்து ஒவ்வொரு முறையும் கேள்விப்படும் போதும், அப்பூதியடிகளுக்கு அவரை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணமும், அவர் மீதான பக்தியும் அன்பும் அதிகரித்துக் கொண்டே இருந்தது. ஒருசமயம் அவரை சந்திக்கும் வாய்ப்பு அப்பூதியடிகளாருக்குக் கிட்டியது. திங்களூரில் உள்ள ஈசனை தரிசிக்க திருநாவுக்கரசர் அங்கு வந்திருந்த சமயத்தில் ஊரில் இருந்த தண்ணீர் பந்தலைப் பார்த்தார். அருகே ஒரு குடில் இருப்பதையும் அறிந்தார்.
கோடைகாலத்தில் அருந்துவதற்கு தண்ணீரும் அளித்து, இளைப்பாறுவதற்கு ஒரு தங்குமிடமும் அமைத்தவரை மனதான வாழ்த்தினார் அரசர். தண்ணீர்ப் பந்தலில் அனைத்து இடங்களிலும் ‘திருநாவுக்கரசர்’ என்று எழுதியிருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தார். அருகில் உள்ள அன்னதானக் கூடம், மக்கள் தங்குமிடம் (சத்திரம்) ஆகியவற்றுக்கும் திருநாவுக்கரசர் பெயரே சூட்டப்பட்டிருந்தது.
தன் மீது பக்தி கொண்டிருந்த அடியாரைச் சந்திக்க அப்பர் பெருமான் விருப்பம் கொண்டு, அந்த அடியார் குறித்து ஊர் மக்களிடம் வினவினார். அவர்களுள் ஒருவர், அப்பூதியடிகள் குறித்து தகவல் தெரிவித்தார். உடனே அப்பர் பெருமான் அப்பூதியடிகளாரின் இல்லம் நோக்கிப் பயணித்தார்.
தன் இல்லத் திண்ணையில் அமர்ந்திருந்த அப்பூதியடிகளார் தன் இல்லம் நோக்கி ஓர் அடியார் வருவதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தார். இல்லத்துக்கு வந்த அடியாரை உபசரித்த அப்பூதியடிகள், அவரைப் பார்த்து, “சுவாமி.. தங்களுக்கு நான் என்ன உதவி புரிய வேண்டும்? என்று வினவினார். அடியவரும், “திருப்பழனம் ஈசனை தரிசித்துவிட்டு, பெரிய நாயகி உடனுறை திங்களூர் கைலாசநாதரை தரிசிக்க வந்தேன். வழியில் தண்ணீர் பந்தலைப் பார்த்தேன். அதற்கு ஏன் உமது பெயரை வைக்காமல் யாரோ திருநாவுக்கரசர் என்பவரின் பெயரை வைத்துள்ளீர்?” என்று கேட்டார்.
அடியவர் இப்படிக் கேட்டதும் மனம் வருந்திய அப்பூதியடிகளார், “திருநாவுக்கரசர் பெருமானை அறியாதவர் யாரேனும் உண்டா? சைவ சமயத்தின் சன்மார்க்க நெறியை அனைவரும் அறியும்படி செய்தவர் அவர்” என்று அவர் புகழ் உரைத்தார்.
தன் மீது இவ்வளவு பக்தி கொண்ட அப்பூதியடிகளாரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் அப்பர் பெருமான். மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்த அப்பூதியடிகளார், அப்பர் பாதங்களில் விழுந்து வணங்கி தன் இல்ல சிவ வழிபாட்டுக்கு எழுந்தருளச் செய்து, அவரை உணவருந்த அழைத்துச் சென்றார்.
அப்பர் பெருமானுக்கு அப்பூதியடிகளின் மனைவி அறுசுவை அமுது படைப்பதற்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினார். சற்று நேரத்தில் அமுது தயாரானது. அப்பூதியடிகள் மூத்த திருநாவுக்கரசரை அழைத்து வாழை இலை அரிந்து வருமாறு பணித்தார். அவரும் மகிழ்ச்சியாக தோட்டத்துக்கு சென்றபோது அங்கிருந்த அரவம் அவரைத் தீண்டியது. இருப்பினும் இலையை அரியத் தொடங்கினார். விஷம் தலைக்கு ஏறியிருந்தாலும் இலையை அரிந்து கொண்டு இல்லத்துக்குள் சென்று அப்படியே மயங்கி விழுந்து உயிரிழந்தார். விஷயம் அறிந்த அப்பூதியடிகள் தம்பதி, மகனின் உடலை பாயால் சுற்றி ஓரமாக வைத்தனர்.
அடியார் உணவருந்துவதில் தாமதம் ஏற்படக் கூடாது என்று எண்ணிய அப்பூதியடிகள் அவரை உணவருந்த அழைத்தார். திருநாவுக்கரசரும் உணவருந்த ஆசனத்தில் அமர்ந்தார். அனைவருக்கும் திருநீறு அளித்த திருநாவுக்கரசர், மூத்த திருநாவுக்கரசரைத் தேடினார். உடனே அப்பூதியடிகளார், “அவன் இங்கு நமக்கு உதவான்” என்றார்.
ஏதோ நேர்ந்திருக்கிறது என்பதை உணர்ந்த திருநாவுக்கரசர், நடந்தவற்றைக் கூறுமாறு அப்பூதியடிகளாரை வற்புறுத்தினார். அவரும் நடந்த விஷயத்தைக் கூற, பதறிய திருநாவுக்கரசர், மூத்த திருநாவுக்கரசரைத் தூக்கிக் கொண்டு திங்களூர் ஈசன் கோயிலுக்குச் சென்றார். விஷயம் ஊர் முழுவதும் பரவி, ஊர்மக்கள் அனைவரும் கோயிலில் திரண்டனர்.
அப்போது, ‘ஒன்று கொல்லம்’ எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடினார் அப்பர் பெருமான். அவரது பக்தியில் பரமனின் மனம் குளிர்ந்தது. இதைத் தொடர்ந்து மூத்த திருநாவுக்கரசு, உறக்கத்தில் இருந்து எழுவது போன்று எழுந்தார். அப்பர் பெருமானின் மகிமையை உணர்ந்து ஊர்மக்கள் மகிழ்ந்தனர். அனைவரும் கோயிலில் இருந்து அப்பூதியடிகளாரின் இல்லம் திரும்பி அமுது உண்டனர். அப்பர் பெருமான் சிலகாலம் அப்பூதியடிகளாரின் இல்லத்தில் தங்கியிருந்து பல தலங்களுக்குச் சென்றார்.
பல ஆண்டு காலம் வாழ்ந்து, பல தலங்களுக்குச் சென்று ஈசனை தரிசித்த அப்பூதியடிகள் தை மாதம் சதய நட்சத்திரம் கூடிய தினத்தில் சிவப்பதம் அடைந்தார்.
‘திருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்’
முத்தைய அத்தியாயத்தை வாசிக்க...
சிவனருள் பெற்ற அடியார்கள் – 17