காக்கும் கார்த்திகைச் செல்வன் – 39


வடசென்னிமலை பாலசுப்பிரமணியர் கோயில்

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே காட்டுக்கோட்டை பகுதியில் உள்ள வடசென்னிமலை பாலசுப்பிரமணியர் கோயில் குழந்தை வரம் அருளும் தலமாகப் போற்றப்படுகிறது. குன்றுதோறும் குமரன் இருப்பான் என்பதற்கு ஏற்ப, இத்தலத்திலும் மலை மீது அமர்ந்தே முருகப் பெருமான் அருள்பாலிக்கிறார்.

வடசென்னிமலை கோயில் கோபுரம் - ஸ்ரீபாலசுப்பிரமணியர்

வடசென்னிமலை கோயிலில் முருகப் பெருமான் சுயம்பு மூர்த்தியாக மூன்று கோலங்களில் அருள்பாலிப்பது தனிச்சிறப்பு. முருகப் பெருமான், கருவறையில் பாலசுப்பிரமணியராக குழந்தை வடிவில் (இளமை) மேற்கு நோக்கியபடி சிரித்த கோலத்தில் காட்சி அருள்கிறார். அவர் அருகில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி துறவற கோலத்தில் (முதுமை) அருள்பாலிக்கிறார். உற்சவ மூர்த்தி வள்ளி, தெய்வயானையுடன் கிரகஸ்த கோலத்தில் (குடும்பஸ்தராக) அருள்பாலிக்கிறார்.

தல வரலாறு

வட சென்னிமலை பகுதியில் உள்ள சிறுவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வர். அவ்வாறு அந்த ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு, அவர்கள் விளையாடுவது வழக்கம்.

ஒருசமயம் வெளியூர் சிறுவன் ஒருவன், அங்கு வந்து வட சென்னிமலை சிறுவர்களிடம், தன்னை விளையாட சேர்த்துக் கொள்ளும்படி கூறினான். வட சென்னிமலை சிறுவர்களும் அச்சிறுவனை விளையாட சேர்த்துக் கொண்டனர். சிறிது நேரம் கழித்து, வெளியூர் சிறுவன் திடீரென்று குன்றின் மீது வேகமாக ஏறினான்.

வட சென்னிமலை சிறுவர்களும், விளையாடும் நோக்கில் அச்சிறுவனைப் பின்தொடர்ந்தனர். நீண்ட தூரம் சென்றபின் ஓரிடத்தில் அச்சிறுவன் நின்றான். பேரொளி தோன்ற அதன் மத்தியில் அச்சிறுவன் மறைந்ததும், வட சென்னிமலை சிறுவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஊருக்குள் சென்று நடந்தவற்றை தெரிவித்தனர். ஊர் மக்கள் திரண்டு வந்து, சிறுவர்கள் காட்டிய இடத்தைப் பார்த்தபோது, அவ்விடத்தில் 3 சுயம்பு விக்கிரகங்கள் இருந்தன. அருகில் பூஜை செய்ததற்கான வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழம் மற்றும் மலர்கள் காணப்பட்டன. சிறுவனாக வந்தது முருகப் பெருமான்தான் என்றும், மூன்று விக்கிரகங்களில் பெரியது முருகப் பெருமான், சிறிய விக்கிரகங்கள் வள்ளி, தெய்வானை என்றும் உறுதியாகக் கூறிய ஊர்மக்கள், அதே இடத்தில் கோயில் எழுப்பி வழிபாடு செய்யத் தொடங்கினர்.

வடசென்னிமலை பாலசுப்பிரமணியர் கோயில்

கோயில் அமைப்பும் சிறப்பும்

400 ஆண்டு காலமாக விளங்கும் ஆலமரத்தடியில் கருவறை மண்டபம், விமானம் ஆகியவற்றுடன் அமைதியான சூழலில் இத்தலம் அமைந்திருந்தது. முதலில் இக்கோயில் 5 நிலை ராஜ கோபுரம், சுயம்பு மூர்த்தி (வள்ளி, தெய்வானை சமேத குடும்பஸ்தர்) சந்நிதி, அருகில் தண்டாயுதபாணி (முதுமை - துறவறம்) சந்நிதியுடன் மட்டுமே இருந்தது. பக்தர் ஒருவரது கனவில் தோன்றிய முருகப் பெருமான், தான் இத்தலத்தில் குழந்தை வடிவமாக இருக்க விருப்பம் தெரிவித்துள்ளார். அதன்படி சுயம்பு மூர்த்தி விக்கிரகங்களுக்கு பின்பகுதியில் பாலசுப்பிரமணிய சுவாமி (இளமை) விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இளமை, முதுமை, குடும்பஸ்தர் என்று மூன்று கோலங்களில் முருகப் பெருமான் காட்சி அருள்வது தனிச்சிறப்பு. ஒரே சமயத்தில் முருகப் பெருமானின் மூன்று கோலங்களையும் வணங்கினால், அனைத்து நன்மைகளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும் பௌர்ணமி தினத்தில் கிரிவலம் வந்து முருகப் பெருமானை வணங்கினால் தீமைகள் விலகும் என்பது ஐதீகம்.

மனிதன், குழந்தையாக இருக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறான். பின்னர், இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு மகிழ்ச்சியும், துன்பமும் கலந்த கடமையை நிறைவேற்றுகிறான். எதன் மீதும் பற்றில்லாத நிலையில் (துறவற நிலையை அடையும்போது) மீண்டும் மகிழ்ச்சியில் திளைக்கிறான். இதன்மூலம் ‘எதன் மீதும் அதிக பற்று வைக்காமல் இருந்தால், எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்கலாம்’ என்பதை முருகப் பெருமான் உணர்த்துகிறார்.

வடசென்னிமலை கோயில் - தண்டாயுதபாணி சுவாமி

தல விநாயகர் ‘அடிவார விநாயகர்’ என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இவருக்கு நான்கு கால பூஜைகள் நடைபெறும். ராஜ கோபுரத்தைத் தொடர்ந்து உள்ள 16 கால் மகா மண்டபம் கடந்த 2001-ம் ஆண்டு கட்டப்பட்டது.

தண்டாயுதபாணி சுவாமி தலைப்பாகை, கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்து காட்சி அருள்கிறார். நடுமலையில் இடும்பன் சந்நிதி உள்ளது. அருகில் ஔவையார் முருகப் பெருமானுக்கு நெல்லிக்கனி வழங்கிய காட்சியை விவரிக்கும் சிலை வைக்கப்பட்டுள்ளது. இச்சிலை அருகே பக்தர்கள் கற்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கின்றனர். இவ்வாறு செய்வதால் வீடு கட்டும் பாக்கியம் கிட்டும் என்று கூறப்படுகிறது.

முருகப் பெருமான் சந்நிதிக்குச் செல்ல 60 படிகள் உள்ளன. இப்படிகள் 60 தமிழ் மாதங்களைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது. படிகளுக்கு பூஜை செய்தால் ஆயுள் நீடிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்யும்போது அவர் கண் திறந்து பக்தர்களைப் பார்த்து சிரிப்பதாக உணரப்படுகிறது.

அப்பன்ன சுவாமிகள்

வடகரை என்ற ஊரைச் சேர்ந்த அப்பன்ன சுவாமிகள், வட சென்னிமலை முருகப் பெருமான் மீது மிகுந்த ஈடுபாடுக் கொண்டிருந்தார். அவருக்கு குழந்தை வடிவிலான விக்கிரகம் செய்ய விருப்பம் கொண்ட அப்பன்ன சுவாமிகள், காஞ்சிபுரம் மகா பெரியவரிடம் இதுதொடர்பாக ஆலோசனை கேட்டார். மகா பெரியவர், திருவண்ணாமலை ரமணர் ஆசிரமத்தில் உள்ள வைத்தியநாத சிற்பி குறித்து தகவல் தெரிவிக்கிறார்.

திருவண்ணாமலை சென்று வைத்தியநாத சிற்பியை சந்தித்த அப்பன்ன சுவாமிகள் அதிர்ச்சி அடைந்தார். வைத்தியநாத சிற்பிக்கு பார்வை கிடையாது என்பதையும், வாய் பேசவும் வராது என்பதையும் உணர்ந்த அப்பன்ன சுவாமிகள், சிற்பி எப்படி சிலை வடிப்பார் என்று கவலை அடைந்தார்.

இருப்பினும் சிற்பியிடம் தனக்கு குழந்தை வடிவிலான குமரன் விக்கிரகம் வேண்டும் என்று சைகையில் தெரிவித்தார் அப்பன்ன சுவாமிகள். அதற்கு சம்மதம் தெரிவித்த சிற்பி, அப்பன்ன சுவாமிகளை ஏழு நாட்கள் கழித்து வருமாறு சைகையில் தெரிவித்தார்.

ஏழு நாட்கள் கழித்து அப்பன்ன சுவாமிகள் சிற்பியை சந்தித்தபோது, அங்கு குழந்தை வேலன் விக்கிரகத்தைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார். அப்பன்ன சுவாமிகள் சிற்பியிடம் இருந்து, குழந்தை வேலன் விக்கிரகத்தைப் பெற்றுக் கொண்டு, வட சென்னிமலை பாலசுப்பிரமணியர் கோயிலில் பிரதிஷ்டை செய்தார்.

சேலம் ஆத்தூரில் இருந்து 15 கிமீ தூரத்தில் உள்ள வடக்குமரை கிராமத்தில் இவரது ஜீவ சமாதி உள்ளது.

வடசென்னிமலை முருகன் கோயில்

குழந்தை வரம்

குழந்தை வடிவில் முருகப் பெருமான் அருள்பாலிப்பதால், குழந்தைப் பேறு வேண்டி வரும் தம்பதிகள் இத்தலத்தில் சிறப்பு வழிபாடுகள் செய்கின்றனர். தங்கள் வேண்டுதல் நிறைவேறிய பின்னர், இத்தம்பதிகள் மீண்டும் இத்தலம் வந்து கரும்பில் தொட்டில் கட்டி அதில் குழந்தையை வைத்து கோயிலை வலம் வருவது வழக்கம்.

கோயில் தேரோட்டத்தின்போது, ஒரு சில தம்பதிகள் தேரின் ஒருபுறத்திலும், அவர்களது உறவினர்கள் மறுபுறத்திலும் நின்று கொண்டு, குழந்தையை தூக்கிப் போட்டு பிடித்து வேண்டுதலை நிறைவேற்றுவர்.

திருவிழாக்கள்

கந்தசஷ்டி, கார்த்திகை தீபம், தைப்பூசம், பங்குனி உத்திர திருவிழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. கார்த்திகை நட்சத்திரம், விசாக நட்சத்திரம், வளர்பிறை சஷ்டி, ஆடி பதினெட்டு, ஆடி அமாவாசை, மார்கழி மாத பூஜை, ஆங்கிலப் புத்தாண்டு, சிவராத்திரி தினங்களில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் முருகப் பெருமான், வள்ளி மற்றும் தெய்வானையுடன் பல வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரத் திருவிழாவில் நடைபெறும் தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றதாக உள்ளது. இரண்டாம் நாள் திருவிழாவாக நடைபெறும் சத்தாபரம் விழாவில், முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வீதியுலா வருவார்.. இதையொட்டி நடைபெறும் வாண வேடிக்கையைக் காண சுற்று வட்டார கிராமங்களில் இருந்து மக்கள் குவிவது வழக்கம்.

தீமைகள் விலக பக்தர்கள் பௌர்ணமி தினத்தில் கிரிவலம் செல்கின்றனர். மன அமைதி பெற இங்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

வடசென்னிமலை முருகன் கோயில்

விழாக் காலங்களில் பக்தர்கள் ஒன்று கூடி அருணகிரி நாதர் அருளிய கந்தர் அனுபூதி பாடல்களைப் பாடி வழிபாடு செய்வது வழக்கம். காலை முதல் மாலை வரை இருக்கும் பக்தர்கள், ‘கந்தக் கடவுளே, ஒளி படைத்த வேலாயுதத்தை உடையவனே, உமையம்மையின் மைந்தனே, என்றும் இளையோனே, வேத நாயகனே, எங்களுக்கு பெற்ற தாயாகவும், தந்தையாகவும் இருந்து அருள்புரிபவனே, எங்கள் மனக் கவலைகளை எல்லாம் தீர்த்து எங்களை ஆண்டு அருள வேண்டும்” என்று பால சுப்பிரமணிய சுவாமியை வேண்டுகின்றனர்.

தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 முதல் 6 மணி வரையும் இக்கோயில் திறந்திருக்கும்.

அமைவிடம்: சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து 8 கிமீ தொலைவிலும், தலைவாசலில் இருந்து 12 கிமீ தொலைவிலும் உள்ளது வட சென்னிமலை. காட்டுக்கோட்டை என்ற இடத்தில் இருந்து நடந்து செல்லலாம்.

வடசென்னிமலை முருகன் கோயில்

x