ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த பிடாரி சிற்பம்... காரியாபட்டி அருகே கண்டுபிடிப்பு!


பிடாரி சிற்பம்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த பிடாரி சிற்பம் உள்ளிட்ட சிற்பங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம் கல்லுப்பட்டி கிராமத்தில் பழமையான சிலைகள் இருப்பதாக நாகரத்தினம் அங்காளம்மாள் கலை அறிவியல் கல்லூரி வரலாற்றுத்துறை மாணவர்கள் சிலர் தங்கள் கல்லூரி வரலாற்றுத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து அக்கல்லூரியின் வரலாற்றுத்துறை பேராசிரியரும் பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் தாமரைக்கண்ணன் மற்றும் ஶ்ரீதர் ஆகியோர் கல்லுப்பட்டி கிராமத்திற்கு நேரில் சென்று கள ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதியில் மக்கள் வழிபாட்டில் சில சிற்பங்கள் இருந்து வருவது தெரியவந்தது.

அவற்றை ஆய்வு செய்தபோது ஆயிரம் வருடத்திற்கு முற்பட்ட முற்கால பாண்டியர் காலத்தை சேர்ந்தவை என்பது தெரியவந்தது. ஆய்விற்கு பின் பேராசிரியர்கள் கூறுகையில், ''இங்கு காணப்படும் ஒரு சிற்பமானது நான்கடி உயரமும், மூன்றடி அகலமும் கொண்ட பலகைக்கல்லில் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. தலை பகுதியில் மகுடத்துடன் கூடிய ஜடாபாரம் காணப்படுகிறது. எட்டு கரங்களில் பாசம், மணி, கேடயம், கத்தி, சூலம், கபாலம் போன்ற ஆயுதங்களை தாங்கியபடி அழகாக வடிக்கப்பட்டுள்ளது.

கழுத்தில் ஆபரணத்துடன் மார்பு கச்சையின்றி சிறுத்த இடையுடன் வலது காலை குத்த வைத்தும், இடது காலை தொங்க விட்டும் ராஜ லீலாசன கோலத்தில் கம்பீரமாக செதுக்கப்பட்டுள்ளது.

காரியாபட்டியில் உள்ள சிற்பங்கள்

இது ஆயிரம் ஆண்டுகள் பழமையான முற்கால பாண்டியர் காலத்தை சேர்ந்த பிடாரி சிற்பம் ஆகும். பாண்டியர்கள் முதல் தாய்வழி தெய்வமாக பிடாரி சிற்பத்தை வணங்கினர். அதன் பிறகு தவ்வை, கொற்றவை, சப்தமாதர்கள் சிலைகளை வழிபாடு செய்தனர்" என்று தெரிவித்தனர்.

இது போன்ற மிகப் பழமையான வரலாற்றுப் பெருமை வாய்ந்த சிற்பங்களை இனங்கண்டு பாதுகாப்பது நமது ஒவ்வொருவரின் கடமை. இதை உணர்ந்து அப்பகுதி தற்போது மக்கள் இந்த சிற்பத்தை இன்னமும் தொடர்ந்து வழிபட்டு வருகின்றனர்.

x