பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலுக்கு ரூ.8.54 கோடியில் புதிய தங்கத்தேர் வெள்ளோட்டம்: அமைச்சர்கள் பங்கேற்பு


புதிய தங்கத்தேர் வெள்ளோட்டம்

திருவள்ளூர்: பெரியபாளையம், பவானி அம்மன் கோயிலுக்கு ரூ.8.54 கோடி செலவில் உருவாக்கப்பட்ட புதிய தங்கத்தேரின் வெள்ளோட்டம் இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ஆர்.காந்தி, பி.கே.சேகர்பாபு ஆகியோர் பங்கேற்று, தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் அமைந்துள்ளது பவானி அம்மன் கோயில். தமிழகத்தில் உள்ள பிரசித்திபெற்ற அம்மன் கோயில்களில் ஒன்றாக விளங்கும் பவானி அம்மன் கோயிலுக்கு நாள் தோறும் தமிழகம் மட்டுமல்லாமல், ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் திரளாக வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து திரும்புகின்றனர்.

இந்நிலையில், இந்துசமய அறநிலையத் துறை சார்பில், பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலுக்கு ரூ.8.54 கோடி செலவில் புதிய தங்கத் தேர் உருவாக்கும் பணி நடைபெற்று வந்தது. 11.5 அடி உயரம், 5 அடி அகலம், 6.5 அடி நீளம் கொண்ட இந்த தங்கத்தேர் உருவாக்கும் அண்மையில் முடிவுக்கு வந்தது.

இதையடுத்து, பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் புதிய தங்கத் தேர் வெள்ளோட்டம் இன்று காலை கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இதில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் பங்கேற்று, புதிய தங்கத்தேரை வடம்பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

நிகழ்வின் போது செய்தியாளர்களிடம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு தெரிவித்ததாவது:
தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கோயில்களில் திருப்பணிகள், குடமுழுக்கு விழாக்கள், திருக்குளங்கள் சீரமைப்பு, திருத்தேர்கள் புனரமைப்பு, பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல் போன்ற பணிகள் செம்மையாக நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில், திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு புதிதாக 5 கோயில்களுக்கு தங்கத் தேர்களும், 9 கோயில்களுக்கு வெள்ளித் தேர்களும் செய்திட அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலுக்கு புதிய தங்கத் தேர் உருவாக்கப்பட்டது. அந்த தேர், இன்று வெள்ளோட்டம் விடப்பட்டு பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்த கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் .டி.ஜெ.கோவிந்தராஜன், ஆ. கிருஷ்ணசாமி, துரை.சந்திரசேகர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் சுகுமார், இணை ஆணையர்கள் லட்சுமணன், மங்கையர்கரசி, வான்மதி, குமரதுரை, துணை ஆணையர் சித்ராதேவி, திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமாமகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

x