இலங்கையில் அசோகவனத்தில் சீதா அமர்ந்திருந்த கல் அயோத்தி ராமர் கோயிலில் வைப்பதற்காக அரசு மரியாதையுடன் இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டது.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. கோயில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெற உள்ளது. இதற்கான விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார். ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாடு முழுவதும் விரிவான வகையில் பல்வேறு வேறுபாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ராவணனால் கடத்திச் செல்லப்பட்ட சீதாதேவி இலங்கையில் உள்ள அசோக வனத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த போது, அமர்ந்திருந்த கல்லை ராமர் கோயிலுக்கு கொண்டு வந்த பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று ராமஜென்ம பூமி அறக்கட்டளை நிர்வாகிகள் முடிவு செய்தனர்.
இதுகுறித்து இலங்கை அரசுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு ஒப்புக்கொண்ட இலங்கை அரசாங்கம் அதனை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தது.
இலங்கை அர்ச்சகர்கள், புத்த பிட்சுகள் மற்றும் இலங்கை அரசு அதிகாரிகளுடன் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மூலம் முழு மரியாதையுடன் அயோத்திக்கு அந்த கல் நேரடியாக கொண்டு வரப்பட்டது. அயோத்தி விமான நிலையத்தில், இலங்கை அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பாரம்பரிய இசை வாசிக்கும் இசைக்குழுவினரின் இசையோடு உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் அந்த கல் ஒப்படைக்கப்பட்டது. அதனை மாநில அரசின் சார்பில் ஆதித்யநாத் பெற்றுக் கொண்டார்.
இந்த புனித கல் விரைவில் ராமர் கோயிலில் உரிய இடத்தில் பிரதிஷ்டை செய்யப்படும் என்று ராமஜென்ம பூமி அறக்கட்டளை நிர்வாகிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...