கார்த்திகை தீபத்தை ஒட்டி மீன் வாங்க அசைவ பிரியர்கள் ஆர்வம் காட்டாததால் சென்னை காசிமேடு மீன் சந்தை வெறிச்சோடி காணப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய மீன் சந்தைகளில் ஒன்று காசிமேடு மீன் சந்தை. காசிமேடு துறைமுகத்திலிருந்து கடலுக்கு சென்று மீன் பிடித்து விட்டு வரும் மீனவர்களிடம் இருந்து வியாபாரிகள் மீன்களை வாங்கி இங்கு விற்பனை செய்து வருகின்றனர். குறைந்த விலையில் உடனடியாக பிடிக்கப்பட்ட மீன்கள் கிடைக்கும் என்பதால் ஏராளமான பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு குவிவது வாடிக்கை.
இதனால் ஞாயிற்றுக்கிழமை காலையில் காசிமேடு மீன் சந்தை மிகுந்த பரபரப்புடன் காணப்படும். இதனிடையே இன்று தமிழ்நாடு முழுவதும் கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மீன் வாங்குவதற்கு பெரும்பாலான அசைவ பிரியர்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் காசிமேடு மீன் சந்தையில் இன்று காலை பொதுமக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
வாடிக்கையாளர்கள் வராததால் மீனவர்கள் மற்றும் மீன் வியாபாரிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். வழக்கமாக பல டன் அளவிற்கு மீன்கள் விற்பனை செய்யப்படும் நிலையில் தற்போது கடைகளில் மீன்கள் இருந்தும் வாடிக்கையாளர்கள் இல்லாததால் மீன் விற்பனை மிகவும் மந்தமாக இருந்து வருவதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.