திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று மாலை மலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபத்தை மலையேறி தரிசிப்பதற்கான அனுமதி சீட்டு வாங்க வந்த இடத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலரும் மயக்கமடைந்தனர்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் தீபத் திருவிழா கொடியேற்றம் கடந்த 17-ந்தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை தொடங்கியது. தீபத் திருவிழாவின் உச்ச நிகழ்ச்சி தீப தரிசன நாளான இன்று நடைபெறுகிறது. இன்று அதிகாலை 4 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவில் கருவறைக்கு முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் தீப தரிசன மண்டபத்தில் எழுந்தருள, ஆண்டுக்கு 5 நிமிடங்கள் மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் ஆனந்த தாண்டவம் ஆடியபடி வந்த பின்பு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.
கார்த்திகை தீப தரிசனம் காண சுமார் 40 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். தீபம் ஏற்றப்படுவதை மலை மீது ஏறி பார்க்க 2,500 பேருக்கு அனுமதி சீட்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இன்று காலை 05 மணிக்கு திருவண்ணாமலை நகரம் செங்கம் சாலை கலைஞர் கருணாநிதி அரசுக் கலை கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையத்தில் முதலில் வரும் 2,500 பக்தர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வரிசை கிரமமாக புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனை பெறுவதற்காக நேற்று மாலையிலிருந்து இந்த கல்லூரி வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் குவிய ஆரம்பித்தது. 2500 பேருக்கு மட்டுமே அனுமதி என்று சொல்லப்பட்ட நிலையில் சுமார் 10,000 த்துக்கும் மேற்பட்டவர்கள் இரவு முழுவதும் அங்கே கூடியிருந்தார்கள். காலை நான்கு மணி அளவில் அனுமதிச்சீட்டு வழங்கப்படும் என்று சொல்லப்பட்ட நிலையில் அதனை பெறுவதற்காக மக்கள் கூட்டம் திடீரென ஒரே நேரத்தில் முண்டியடித்தபடி ஓடியது. இதனால் கல்லூரியின் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து சிலருக்கு காயம் ஏற்பட்டது.
ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் முண்டியடித்து அனுமதி சீட்டு வாங்கும் வரிசையை நோக்கி ஓடினர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்களுக்கு மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களுக்கு முதலுதவி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அந்த பகுதியில் தற்போது காவல்துறையினர் சூழ்ந்து கூட்டத்தை ஒழுங்கு படுத்தி வருகின்றனர்.