அதிர வைத்த அண்ணாமலை கோஷம்... இன்று அதிகாலையில் ஏற்றப்பட்டது பரணி தீபம்!


தமிழகம் முழுவதும் இன்று கார்த்திகை தீபத்திருநாளைக் கொண்டாட உள்ள நிலையில், அதிகாலை 4 மணிக்கு திருவண்ணாமலை கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இன்று மாலை திருவண்ணாமலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுவதையொட்டி பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர். திருவண்ணாமலையில் திரும்பும் திசையெல்லாம் அண்ணாமலை கோஷம் விண்ணதிர எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீபம் இன்று மாலை ஏற்றப்பட உள்ள நிலையில், இன்று அதிகாலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

மூலவர் சன்னதியில் இருந்து எடுத்து வரப்பட்ட தீபத்தைக் கொண்டு மற்ற மடக்குகளில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, பக்தர்கள் அரோகரா முழக்கம் ஒலிக்க, ஐந்து அகல் விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டது. ஒன்றே பரம்பொருள் என்பதை உணர்த்தும் வகையில் முதல் மடக்கை கொண்டு மற்ற மடக்குகளில் ஏற்றப்பட்டது பரணி தீபம்.

பரணி தீபம் ஏற்றும் நிகழ்வைக் காண அண்ணாமலையார் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளதால் போலீஸார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பரணி தீபம் ஏற்றப்பட்டதையடுத்து இன்று மாலை 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. அதற்காக மாலை 6 மணிக்கு தீபங்களை மேள தாளத்துடன் வெளியே எடுத்துவந்து கொடிக் கம்பம் அருகேயுள்ள அகண்ட தீப கொப்பரையில் ஒன்று சேர்த்து எரிய விடுவார்கள். அந்த நிமிடத்தில் அர்த்தநாரீஸ்வரர் வெளி வந்து காட்சி கொடுத்துவிட்டு உள்ளே சென்று விடுவார்.

அப்போது வாசல் வழியே பெரிய தீவட்டியை ஆட்டியபடி, மலைக்கு அடையாளம் காட்டுவார்கள். உடனே மலைமீது இருக்கும் பர்வதராஜ குலத்தைச் சேர்ந்தவர்கள், மலை மீது தயாராக வைக்கப்பட்டிருக்கும் செப்புக் கொப்பரையில் மகாதீபத்தை ஏற்றுவார்கள். இந்த மகா தீபமானது தொடர்ந்து 10 நாட்கள் அணையாமல் எரியும். இரவில் பத்து கிலோமீட்டர் தூரம் வரை தெரியும்.

x