ஐயப்பனை காண அச்சமின்றி செல்லலாம்... வந்துவிட்டது `அய்யன்' செயலி!


அய்யன் செயலி

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களை வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன் 'அய்யன்' செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சபரிமலை வனம்

கேரள மாநிலம் பத்தினம் திட்டாவில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். சபரிமலை ஐயப்பன் கோயில் வழக்கமான கோயில்கள்போல் இல்லாமல் ஒவ்வொரு மாதமும் அந்தந்த பூஜைக்காக மட்டுமே திறக்கப்படும்.

நடைதிறக்கும்போது மட்டும் பக்தர்கள் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்வர். மகர ஜோதி, கார்த்திகை மாத பூஜை மற்றும் விஷு பண்டிகையின் போது திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

ஐயப்பன் கோயில்

குறிப்பாக கார்த்திகை முதல் நாளில் மாலை அணிந்து மார்கழி நல்ல நாளில் சபரிமலைக்கு சென்று வழிபடுவது பெரும்பாலான பக்தர்களின் வழக்கம். ஆனாலும் தங்களின் வசதி கருதி கார்த்திகை முதல் நாளிலிருந்து பக்தர்கள் சபரிமலை பயணத்தை தொடங்கி விடுகிறார்கள். முதல் நாள் தொடங்கி மண்டல பூஜை காலம் வரை 41 நாட்கள் ஐயப்பன் கோயில் நடைதிறக்கப்பட்டிருக்கும். அதாவது டிசம்பர் 27ம் தேதி வரை 41 நாட்கள் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டிருக்கும். 27ம் தேதி மாலை நடை அடைக்கப்படும்.

மண்டல பூஜைக்காக தினமும் அதிகாலை 3.15 மணி முதல் 12 மணி வரை நெய்யபிஷேகம் நடக்கும். இரவு 11 மணிக்கு கோயில் நடை அடைக்கப்படும். மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படும். சபரிமலையின் மண்டல பூஜை டிசம்பர் 27ம் தேதி நடைபெறுகிறது.

ஐயப்பனை தரிசனம் செய்ய இணையதளம் மூலமாக பக்தர்கள் முன்பதிவு செய்ய வேண்டும். ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கும் வகையில், நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேவசம் போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சமயத்தில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இதனால், பக்தர்களின் வசதிக்காக புதிய ஆன்லைன் செல்போன் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மலையின் நுழைவாயில் உள்ளிட்ட பல பகுதிகளில் வைக்கப்பட்டிருக்கும் க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்து இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த செயலியை கொண்டு வனப்பகுதியில் விலங்குகள் நடமாட்டம் உள்ளதா? என்பதை தெரிந்து கொள்ளலாம். மேலும், மருத்துவ வசதிகள், குடிநீர் வசதிகள், தங்கும் வசதிகள் கிடைக்கும் இடங்களை இந்த செயலி மூலம் பக்தர்கள் எளிதாக அறிந்து கொள்ளலாம் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இதையும் வாசிக்கலாமே...

நடிகைக்கு பாலியல் தொல்லை... சர்ச்சையில் இயக்குநர் சீனு ராமசாமி!

x