மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நரியைப் பரியாக்கிய திருவிளையாடல்!


மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத் திருவிழாவின் எட்டாம் நாளான இன்று மாலையில் நரியைப் பரியாக்கிய திருவிளையாடல் நடைபெற்றது.

இதில் பிரியாவிடை சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளினர். இதில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன், திருவாதவூரிலிருந்து மாணிக்கவாசகர் எழுந்தருளினர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து ஒன்பதாம் நாளான நாளை (செப்.13) பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நடைபெறும். நரியைப் பரியாக்கிய திருவிளையாடல்: மாணிக்கவாசகர், அரிமர்த்தன பாண்டியனிடம், ‘தென்னவன் பிரம்மராயன்’ என்ற பட்டத்துடன், அமைச்சராகப் பணியாற்றினார்.

மன்னன், படைக்குக் குதிரைகள் வாங்கிட பெரும்பொருளுடன் மாணிக்கவாசகரை அனுப்பினார். திருப் பெருந்துறை என்னும் தலத்தை அடைந்தவுடன், இறைவனை குருவாகப் பெற்ற மாணிக்கவாசகர். அங்கே சிவாலய திருப்பணி, சிவனடியார் திருப்பணி என பொருள்களை செலவிட்டார். அரசனிடமிருந்து அழைப்பு வரவும், வெறுங்கையுடன் இருந்த மாணிக்கவாசகர், செய்வதறியாது இறைவனைத் தொழுதார்.

இறைவனும். ‘ஆவணி மூலத்தன்று குதிரைகள் வந்து சேரும்’ என்று கூறும்படி பணித்தார். ஆவணி மூலத்திருநாளும் வந்தது. குதிரைகள் வராதது கண்டு மன்னன், மாணிக்கவாசகரை சிறையில் அடைத்துத் துன்புறுத்தினான். மாணிக்கவாசகர். இறைவனிடம் முறையிட இறைவன் காட்டிலுள்ள நரிகளை எல்லாம் குதிரைகளாக்கி, சிவகணங்களைக் குதிரைப் பாகர்களாக்கி, தானேத் தலைவனாக ஒரு குதிரையின் மீதேறி மதுரைக்கு வந்தடைந்தார்.

அரசனும் மகிழ்ந்து மாணிக்கவாசகரைப் பாராட்டினான். ஆனால், அன்றிரவே அந்தக் குதிரைகள் மீண்டும் நரிகளாக மாறி, அங்கிருந்த குதிரைகளைக் கொன்றுவிட்டு, காடு நோக்கி ஓடின. மாணிக்கவாசகரை தண்டிக்கப் புகுந்த அரசன், அவரைக்கட்டி சுடுமணலில் கிடக்கச் செய்தான். இறைவன் அவரைக் காக்கும் பொருட்டு. வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுக்கச் செய்தார்.

x