சமயபுரம் கோயிலில் தீ விபத்து... பூசாரிகளுக்கு தீக்காயம்; பக்தர்கள் அதிர்ச்சி!


சமயபுரம் மாரியம்மன் கோயில்

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தீபாராதனை காட்டும்போது திடீரென தீப்பற்றியதால் கோயில் பூசாரிகள் இருவருக்கு தீக்காயம் ஏற்பட்ட சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமயபுரம் மாரியம்மன் கோயில்

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் ஏராளமான பக்தர்களை தன்னகத்தே கொண்டது. இங்கு தமிழ்நாடு முழுவதும் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்வார்கள். இக்கோயிலில் நடைபெறும் பூச்சொரிதல் உற்சவம் மிகவும் புகழ்பெற்றதாகும். அதன்படி இந்த ஆண்டுக்கான பூச்சொரிதல் விழா நேற்று இரவு தொடங்கியது. இதையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று இரவு முதல் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தனர்.

விடிய விடிய பக்தர்கள் வந்து கொண்டே இருந்தனர். கோயில் பூசாரிகளான நாகநாதன் மற்றும் குரு ஆகியோர் பணியில் இருந்தனர். இன்று காலையில் திருக்கோயில் சன்னிதியில் வலது பக்கம் உள்ள அருள்மிகு சூரப்ப நாயக்கர் அம்பாளுக்கு (அபிஷேக அம்பாள்) தீபாராதனை நடைபெற்றது. அப்போது நாகநாதன் பூசாரி தீபாராதனை தட்டை மேலே தூக்கி காட்டினார். அது அங்கு அலங்கரிக்கப்பட்டிருந்த வெட்டிவேர் பந்தலில் பட்டதில் தீப்பற்றிக் கொண்டது.

சமயபுரம்

அதைப்பார்த்த அங்கிருந்த பலரும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். வெட்டிவேரில் பிடித்த தீயை அங்கிருந்த புடவையைக் கொண்டு அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது அந்த புடவையிலும் தீப்பற்றியது. பின்னர் பக்தர்கள் ஒரு வழியாக போராடி தீயை அணைத்தனர். இதில், பூசாரி நாகநாதனுக்கு, (55) வலது தோள்பட்டையிலும், இன்னொரு பூசாரியான குருவுக்கு (40) முகம் மற்றும் கைகளிலும் தீக்காயம் ஏற்பட்டது.

உடனே இருவரையும் மீட்டு சமயபுரம் எஸ்.ஆர்.எம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு சில மணி நேரத்திற்கு அவர்கள் மீண்டும் கோயிலுக்கு திரும்பி வந்தனர்.

சமயபுரம் கோயிலில் பூச்சொரிதல் வைபவத்தின் போது ஏற்பட்ட இந்த தீ விபத்து ஏற்பட்டு பூசாரிகள் தீக்காயமடைந்தது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

x