ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் விராலிபட்டி கோட்டை கருப்பண்ணசாமி கோயில் திருவிழாவில் மூன்று ஆயிரம் ஆடுகள் பலியிடப்பட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே விராலிப்பட்டி கிராமம் உள்ளது. இங்குள்ள பிரசித்தி பெற்ற கோட்டை கருப்பணசாமி கோயில் ஆடித் திருவிழா ஒவ்வொரு வருடம் ஆடி மாதம் நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் ஆடி மாதம் அமாவாசை முடிந்து அடுத்து வரும் முதல் வெள்ளிக்கிழமை ஒரு நாள் திருவிழாவாக கொண்டாடப்பட்டது.
இதற்கென15 நாட்களுக்கு முன்பு கிராம மக்கள் விரதத்தை தொடங்குவார்கள். விரதம் இருக்கும் போது கிராமம் முழுவதும் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் டிவி பார்க்கமாட்டார்கள். இதனை தொடர்ந்து அன்று காலை முதல் மாலை வரை ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் கோட்டை கருப்பணசாமி கோயிலில் குடும்பத்துடன் அருள் பெற்று சென்றனர்.
அதனை தொடர்ந்து இரவு 10 மணிக்கு மேல் விடிய விடிய ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளும் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இக்கோயிலுக்கு பக்தர்கள் ஆடுகள், கிடாக்கள் மற்றும் சேவல்களை நேர்த்திக்கடனாக செலுத்தி இருந்தனர். ஆண்டு முழுவதும் நேர்த்திக்கடனாக செலுத்தப்படும் ஆடுகள் கோயில் நிர்வாகத்தால், பராமரிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை இரவு கோட்டை கருப்பணசாமிக்கு பலியிடப்பட்டது.
இந்த திருவிழாவில், விராலிப்பட்டி, வத்தலக்குண்டு, பழைய வத்தலக்குண்டு, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி, தேவதானப்பட்டி, பெரியகுளம், திண்டுக்கல், நிலக்கோட்டை, மதுரை உள்ளிட்ட தமிழகம் முழுவதுமிருந்து பல்லாயிரக்கணக்கான ஆண் பக்தர்கள் கலந்துகொண்டு நள்ளிரவில் சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய, சுமார் மூன்றாயிரத்திற்கும் அதிகமான ஆடுகள் மற்றும் நூற்றுக்கணக்கான சேவல்கள் ஒரே நேரத்தில் பலியிட்டப்பட்டது. இதன் பின் இவை அனைத்தும் மொத்தமாக சமைக்கப்பட்டு, ஆண் பக்தர்களுக்கு கறி மட்டும் பிரசாதமாக வழங்கப்பட்டது.