திருப்பதி செல்லும் பக்தர்களே உஷார்... கேமராவில் சிக்கியது கரடி, காட்டு பன்றி, முள்ளம்பன்றிகளின் நடமாட்டம்!


கரடி நடமாட்டம்

திருமலை திருப்பதியில் உள்ள அலிபிரி மலைப்பகுதியில் பக்தர்கள் பாதயாத்திரை செல்லும் இடங்களில் இரவு நேரங்களில் சிறுத்தை, கரடி, முள்ளம் பன்றி போன்ற வனவிலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து இருப்பது வனத்துறையினர் பொருத்தி இருக்கும் கேமராக்களில் பதிவாகி உள்ளது.

திருப்பதி கோயிலில் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் அலிபிரி மலைப் பாதையில் பாதயாத்திரையாக செல்கின்றனர். கடந்த வாரம் சாமி தரிசனம் செய்ய வந்த நெல்லுரைச் சேர்ந்த தினேஷ் தனது ஆறு வயது மகள் லட்ஷிதாவுடன் அலிபிரியில் இருந்து திருப்பதிக்கு பாதயாத்திரையாக சென்ற போது சிறுத்தை தாக்கி உயிரிழந்தார். இதனையடுத்து திருப்பதி மலைப்பாதையில் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பாதயாத்திரை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், நடந்து செல்லும் பக்தர்களுக்கு கையில் கைத்தடிகளும் கொடுக்கப்படுகிறது.

கரடி

திருப்பதி வனப்பகுதிகளில் கூண்டுகள் வைக்கப்பட்டதில் இதுவரை 3 சிறுத்தைகள் சிக்கியுள்ளன. இந்த சிறுத்தைகளுக்கு மரபணு சோதனை நடத்த வனத்துறை திட்டமிட்டுள்ளது. இதனிடையே திருப்பதி அலிபிரி மலைப்பாதையில் இரவு நேரங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.

திருப்பதி மலையில் உள்ள முதலாவது பாதையில் இருக்கும் யானை வளைவு அருகே சிறுத்தை புலி ஒன்றின் நடமாட்டம் இருப்பது நடைபாதை சமீபத்தில் பொருத்தப்பட்டு இருக்கும் ட்ராப் கேமராவில் பதிவாகியுள்ளது. அதேபோல் திருப்பதி மலையில் உள்ள ஸ்பெஷல் டைப் காட்டேஜ் பகுதியில் கரடி ஒன்றின் நடமாட்டம் இருப்பதும் ட்ராப் கேமராவில் பதிவாகியுள்ளது.

கூண்டில் சிக்கிய சிறுத்தை

இதுதவிர பல்வேறு இடங்களில் முள்ளம்பன்றிகள், காட்டு பன்றிகள், புனுகு பூனைகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளின் நடமாட்டம் இரவில் இருப்பது தானியங்கி முறையில் படம்பிடிக்கும் ட்ராப் கேமராக்களில் பதிவாகியுள்ளன. எனவே பக்தர்களை அச்சுறுத்தும் சிறுத்தைகளை பிடிப்பதற்காக மேலும் ஆறு கூண்டுகளை வனத்துறையினர் வரவழைத்துள்ளனர். மேலும், பக்தர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், வனத்துறையினர் கேட்டு கொண்டுள்ளனர். பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் தனியாக செல்ல வேண்டாம் எனவும் கூட்டமாக சேர்ந்தே செல்லுங்கள் எனவும், வனத்துறையினரும் தேவஸ்தான நிர்வாகமும் கேட்டுக்கொண்டுள்ளது.

x