மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத் திருவிழா - வளையல் விற்ற திருவிளையாடல்


மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத்திருவிழாவின் ஏழாம் நாளான இன்று வளையல் விற்ற திருவிளையாடல் அலங்காரத்தில் பிரியாவிடை சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் கைகளில் வளையல்களுடன் அருள்பாலித்தனர் | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத் திருவிழாவில் ஏழாம் நாளான இன்று வளையல் விற்ற திருவிளையாடல் நடைபெற்றது. இன்று மாலையில் சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத் திருவிழாவின் ஏழாம் நாளான இன்று வளையல் விற்ற திருவிளையாடல் நடைபெற்றது. இதில் பிரியாவிடை சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் வளையல் விற்ற திருவிளையாடல் அலங்காரத்தில் அருள்பாலித்தனர். மாலையில் இம்மையில் நன்மை தருவார் கோயில், மேலமாசி வீதி, மேலக்கோபுரத்தெரு வழியாக ஆவணி மூல வீதிகள் வழியாக தங்கப்பல்லக்கில் எழுந்தருளி கோயிலை அடைந்தனர் பின்னர் மாலையில் 6.30 மணிமுதல் 6.45 மணிக்குள் சுவாமி சந்நிதி ஆறுகால் பீடத்தில் சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் நடைபெறும்.

அப்போது சுந்தரேசுவரரிடமிருந்து கோயில் அறஙகாவலர் குழுத்தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன் செங்கோலைப் பெற்று சகல விருதுகளுடன் சுவாமி சந்நிதி இரண்டாம் பிரகாரம் வலம் வந்து சுந்தரேசுவரர் திருக்கரத்தில் செங்கோலை சேர்ப்பிப்பார்.

எட்டாம் நாள் (செப்.12) நரியைப் பரியாக்கிய திருவிளையாடலில் பங்கேற்பதற்காக இன்று திருவாதவூர் கோயிலிலிருந்து மாணிக்கவாசகர் புறப்பாடும் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து முக்கிய விழாவான பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் செப்.13 வெள்ளிக்கிழமை நடைபெறும். இதில் பங்கேற்பதற்காக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை சமேதரராய் கோயிலிலிருந்து செப்.12-ல் புறப்பாடாகிறார்.

வளையல் விற்ற திருவிளையாடல் புராணம்: தாருகாவனத்து ரிஷிகள் தங்கள் மனைவியரே கற்பில் சிறந்தவர்கள் என்று செருக்குடன் இருந்தனர். அச்செருக்கை அடக்க எண்ணிய சொக்கநாதர் பிட்சாடனர் கோலத்தில் தாருகாவனத்திற்குச் சென்றார். பிச்சையிட வந்த அத்தனை ரிஷிபத்தினிகளும் அவரது அழகிலே மயங்கி ஆடைகள், அணிகலன்கள் நெகிழ்ந்து நின்றனர். கோபமுற்ற ரிஷிகள் அப்பெண்களை மதுரையிலே சாதாரண வணிகர் குலப்பெண்களாக பிறக்கும்படி சபித்தனர். தங்கள் தவறை உணர்ந்து சாபவிமோசனம் கேட்ட, பத்தினிகளுக்கு இறைவனே வந்து உங்கள் கைகளில் வளையல் சூடுவார்.

அப்போது உங்கள் சாபம் தீர்ந்து எங்களை வந்தடைவீர்கள் என்று உரைத்தனர். அவ்வாறே ரிஷிபத்தினிகளும் செட்டிப் பெண்களாக மதுரையிலே பிறந்து வளர்ந்தனர். இறைவனும் வளையல் வியாபாரியாக அத்தெருவில் வந்து, அவர்கள் கைகளைத் தொட்டு வளையல் அணிவிக்க அவர்களும் சாபம் நீங்கி சிவலோகம் சென்றனர். சுவாமியே பிச்சாடனர் போல வளையல் விற்க செல்வதால் ஆவணித்திருவிழாவில் பிச்சாடனார் புறப்பாடு தனியே நடப்பதில்லை.

x