திருவாரூர் மாவட்டத்தில் ஜாம்புவானோடை தர்ஹா பெரியகந்தூரி விழா கடந்த 10 நாட்களாக நடந்து வரும் நிலையில், இன்று சந்தனக்கூடு விழா வெகு விமரிசையாக நடைபெறவுள்ளதால் அந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜம்புவான் ஓடை தர்காவில் கந்தூரி விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். 14 நாட்கள் நடைபெறும் இந்த கந்தூரி திருவிழாவில் ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். இதனை காண்பதற்காக தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வருகை தருவது வழக்கம்.
இந்த நிலையில் இந்த ஆண்டு ஜம்புவான் ஓடை தர்கா கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு விழா நவம்பர் 24ம் தேதியான இன்று நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு ஆயிரக்கணக்கானோர் வருகை தருவார்கள் என்பதால் திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார். இதற்கு மாற்றாக அடுத்த சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவித்துள்ளார்.
இதேபோல் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு வாக்காளர் பட்டியல் சேர்க்கை முகாம் நடைபெறுவதை ஒட்டி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சனிக்கிழமையன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் பள்ளிகள் விடுமுறை என்பதால் திருவாரூர் மாவட்டத்துக்கு மூன்று நாட்கள் தொடர் விடுமுறை ஆகியுள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.