இன்று மாலை சபரிமலை கோயில் நடை திறப்பு!


மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை நடை திறக்கப்படுகிறது.

கேரள மாநிலம் சபரிமலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோவில், மற்ற கோவில்களை போல் வருடம் முழுவதும் திறந்திருப்பது கிடையாது. வனப்பகுதிக்குள் அமைந்துள்ள இக்கோவில் வருடத்தின் ஒரு சில நாட்களில் மட்டுமே திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஒவ்வொரு மாதமும் மலையாள மாதத்தின் துவக்க நாளில் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜை, படிபூஜை உள்ளிட்டவைகள் நடத்தப்படும். அந்த சமயத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே பக்தர்கள் வழிபடுவதற்காக கோவில் திறக்கப்பட்டிருக்கும். ஐந்தாவது நாள் இரவு பூஜைக்குப் பின்னர் நடை அடைக்கப்பட்டுவிடும்.

அதன்படி ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. சபரிமலை மேல் சாந்தி தலைமையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், மற்றும் பூஜைகள் நடத்தப்படுகிறது.

இம்மாதம் 21-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்காக கோயிலில் அனுமதிக்கப்படுவார்கள். விசேஷ பூஜைகளுக்குப் பின் அன்று இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும் என்று தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

x