கேரளாவில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் சபரிமலை உள்ள பத்தினம்திட்டா மாவட்டம் முழுவதற்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
கேரளாவில் வடகிழக்கு பருவமழையின் தீவிரம் தற்போது தொடங்கியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய பருவமழை தற்போது உச்சத்தை அடைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த கேரளாவில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
இந்த நிலையில், சபரிமலை இருக்கும் பத்தினம்திட்டா மாவட்டம் முழுவதற்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. மேலும் திருவனந்தபுரம், இடுக்கி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும், கண்ணூர் மற்றும் காசர்கோடு தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று முதலே சபரிமலையில் கனமழை பெய்து வருகிறது. தற்போது சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதால் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து ஐயப்பனை தரிசிக்க பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலைக்கு சென்று வருகின்றனர். மழையை எதிர்கொள்ள தேவஸ்தானம் மீட்புக் குழுவினருடன் தயார் நிலையில் உள்ளதால் பக்தர்கள் அச்சப்பட வேண்டாம் என தேவஸ்தானம் போர்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.