ஒரு நவராத்திரியின்போது சென்னை எண்ணூருக்கு அருகே மகா பெரியவா முகாமிட்டிருந்தார்.
ஒன்பது நாட்கள் நவராத்திரி விசேஷ பூஜை. ஒன்பது நாட்களும் மகான் மவுனம் காத்தார். சைகையில்கூட உத்தரவு கிடையாது.
பத்தாம் நாள் விஜய தசமி அன்று பூஜை முடிந்து மவுனம் கலைப்பது வழக்கம். எனவே, விஜய தசமி அன்று பூஜைகளை முடித்துவிட்டு அருளுரை வழங்க ஒரு பந்தலின் கீழே அமர்ந்திருந்தார் பெரியவா.
மவுனம் துறக்கின்ற வேளையில் மகான் அருளுகின்ற அமுதத்தைப் பருக வேண்டும் என்பதற்காக ஏராளமான பக்தர்கள் காத்துக் கொண்டிருந்தனர்.
மகானின் பார்வை, பக்தகோடிகள் வரிசையில் அமர்ந்திருந்த ராமமூர்த்தி சர்மா மீது படிந்தது. வைதீகரான அவரைப் பார்த்து ஒரு புன்னகை பூத்தார் மகான். பரவசத்தில் ஏகத்துக்கும் நெளிந்தார் ராமமூர்த்தி.
அவரது ஆனந்தத் தவிப்பைக் கண்ட மகான், ‘‘என்னப்பா ராமமூர்த்தி... எப்படி இருக்கே?’’ என்று கணீரென்ற குரலோடு தன் இத்தனை நாள் மவுனத்தைக் கலைத்தார்.
ஒன்பது நாட்கள் நீண்ட மவுனத்துக்குப் பிறகு மகானின் திருக்குரலைக் கேட்டதும், கூடி இருந்த பக்தர்களிடம் பரவசம், ஆனந்தம். ‘‘ஈஸ்வரா... சர்வேஸ்வரா...’’ என்று அவரைப் பார்த்துக் கன்னங்களில் மாறி மாறி அறைந்து கொண்டு தரிசித்தனர்.
மகானின் விசாரிப்புக்குப் பதில் சொல்லும் விதமாக, தான் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து எழுந்தார் ராமமூர்த்தி. ‘இத்தனை பேர் கூடி இருக்கிற இடத்தில் இந்தப் பரப்பிரம்மத்தின் பார்வை என் மீது படிகிறதே... அந்த மகானது சிந்தனையில் நான் இருக்கின்றேனே..? நான் என்ன புண்ணியம் செய்தேனோ?’ என்று உள்ளுக்குள் அரற்றினார். ஆனந்தக் கண்ணீர் விட்டார்.
மேல் வஸ்திரத்தால் இரு கண்களையும் முகத்தையும் அழுந்தத் துடைத்துக் கொண்டார். துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டார். பெரியவாளுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார். பிறகு, ‘‘உங்க கிருபை இருக்கறப்ப, எனக்கு என்ன குறை இருக்க முடியும் பெரியவா... ஆனந்தமா இருக்கேன்’’ என்று பரவசத்தில் நா தழுதழுத்தார்.
‘‘வைதீகத் தொழில் எப்படிப் போயிண்டிருக்கு?’’ மகானிடம் இருந்து அடுத்த கேள்வி ராமமூர்த்தி சர்மாவுக்கு.
வைதீகர்களையும், வேத விற்பன்னர்களையும் பார்த்து விட்டால் மகானுக்கு அத்தனை குஷி. அவர்களால்தான் இந்த உலகமே செழிக்கிறது என்பதை அடிக்கடி நினைவூட்டிக் கொண்டே இருப்பார், வருகின்ற பக்தகோடிகளிடம்.
‘‘பெரியவா ஆசிர்வாதத்துல அமோகமா போயிண்டிருக்கு’’ என்றார் ராமமூர்த்தி.
உள்ளதை உள்ளபடி சொல்லக் கூடிய மனம் எல்லோருக்கும் வராது.
இன்று எவரிடமாவது, ‘எப்படிப்பா இருக்கே?’ என்று கேட்டால், பெரும்பாலும் புலம்பல்தான் பதிலாக வருகிறது. சொந்தமாக நாலு வீடுகள் வைத்திருந்தாலும், வங்கியில் நிரந்தர வைப்பாக ஏழெட்டு லட்சங்கள் வைத்திருந்தாலும், ‘ஏதோ இருக்கேன்ப்பா’ என்று பட்டும் படாமலும்தான் சொல்கிறார்கள். அன்றாடங்காய்ச்சிகளாகப் பலரும் இருக்கக் கூடிய லோகத்தில் இத்தகையவர்கள் கோடீஸ்வரர்கள்.
ஏன் அப்படிப் பட்டும் படாமலும் சொல்கிறார்கள் என்றால், அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. ஒருவன் ‘நான் நன்றாக இருக்கிறேன்’ என்று உண்மையை உரக்கச் சொன்னாலும், ‘பார்த்தியாப்பா... அவன் நன்னா இருக்கானாம்’ என்று வயிற்றெரிச்சல் படுகிற உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
தவிர, ‘நான் நன்றாக இருக்கேன்’ என்று ஒருவன் சொல்லிவிட்டால், ‘அப்படியாப்பா... நான் ரொம்பக் கஷ்டப்படுகிறேன். ஒரு ரெண்டு லட்ச ரூபாய் கடனா குடேன்’ என்று எதிராளி கூச்சமில்லாமல் கேட்டு விடுவானோ என்கிற பயமும் காரணம்.
எனவேதான், இருப்பவர்களும் ‘இல்லை’ என்ற பாட்டைப் பாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இங்கே ராமமூர்த்தி ‘பெரியவா ஆசிர்வாதத்துல அமோகமா போயிண்டிருக்கு’ என்று சொல்லி இருக்கிறார்.
இந்தப் பதிலைக் கேட்ட பெரியவா முறுவலித்தார். பிறகு, ‘‘சந்தோஷம்... நன்னா போயிண்டு இருக்குன்னு சொல்றியே... உனக்கு மாதாந்திர வருமானம் இவ்வளவு வருதுன்னு ‘ஃபிக்ஸ்’ பண்ணிச் சொல்ல முடியாது. அப்பப்ப வேலை வரும். திடீர்னு சில நாட்கள் சும்மாவே உக்காந்துண்டும் இருக்கணும். ஒண்ணாம் தேதியானா ‘டாண்’ணு சம்பளம் வர்றதுக்கு நீ பண்றது ‘கவர்மென்ட்’ வேலை இல்லை. இருந்தாலும், ஒனக்கு வர்ற வருமானத்தை வெச்சு ‘ஆவரேஜா’ மாசம் எவ்ளோ வரும்?’’ என்று கேட்டார்.
ஆண்களிடம் சம்பளத்தையும், பெண்களிடம் வயதையும் கேட்கக் கூடாது என்பார்கள்.
இங்கே கேட்பது மகான்; கலியுக தெய்வம்; ஜகத் ரட்சகன். ‘சொல்ல மாட்டேன்’ என்று ராமமூர்த்தி சர்மா மறுக்க முடியுமா? இத்தனை பேர் கூடி இருக்கிற சபையில் சொல்லித்தான் ஆக வேண்டும். கூடி இருக்கின்ற பக்தர்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் ராமமூர்த்தி சர்மாவைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஒரு சில விநாடிகள் தன் மனதுக்குள் கணக்குப் போட்டுப் பார்த்துவிட்டு, நிதானமாகச் சொன்னார்: ‘‘மாசம் முந்நூறு ரூவா வரும் பெரியவா.’’
மகான் முகத்தில் புன்னகை. ‘‘பலே.. மாசம் முந்நூறு ரூவாயா? நீ பெரிய வைதீகன் தான்’’ என்று புளகாங்கிதம் அடைந்தவர், ‘‘சரி... உன்னோட மாசாந்திர செலவுக்கு இந்த முந்நூறு ரூவா போதுமானதா இருக்கா? இல்லே, ஆத்திர அவசரத்துக்குக் கடன் உடன் வாங்கறியா?’’
ராமமூர்த்தி சற்றே உடல் குறுகினார். ‘‘நீங்க கேக்கறது வாஸ்தவம் பெரியவா. இந்த வருமானம் போதலை... மாசாந்திர தேவைக்குன்னு கொஞ்சம் கடன் வாங்கும்படித்தான் இருக்கு.’’
‘‘ஓ... அப்படின்னா மாசம் எவ்ளோ கடன் வாங்குவே?’’
‘‘எப்படியும் 10, 20 ரூபாய்னு வாங்கினாத்தான் தேவை கள் பூர்த்தி ஆறது பெரியவா.’’
‘சரி, உட்கார்ந்துக்கோ’ என்பது போல் ஜாடை காட்டி அவரை அமர வைத்தார் மகான். அடுத்து, ராமமூர்த்தி சர்மாவுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ‘இன்கம்டாக்ஸ் ஆபீஸரை’ப் பார்த்தார். புன்னகைத்தார்.
விருட்டென்று எழுந்தார் அந்த ‘ஆபீஸர்’. பெரியவா திருச்சந்நிதிக்கு நமஸ்காரம் செய்தார். கைகளைக் கூப்பிய வண்ணம் நின்றிருந்தார்.
‘‘நீங்க எங்கே ‘ஒர்க்’ பண்றேள்?’’ இது மகான் கேட்ட கேள்வி.
‘‘வருமான வரித்துறையில பெரியவா.’’ ‘ஆபீஸர்’ பதில்.
‘‘பொதுவா நீங்கதான் எல்லார்கிட்டயும் கேட்பேள். ஒரு வித்தியாசத்துக்கு இன்னிக்கு நான் உங்ககிட்ட கேக்கப் போறேன்...’’ என்ற பீடிகையோடு ஆரம்பித்தார் மகான்.
‘இன்கம்டாக்ஸ் ஆபீஸர்’ தயாராக இருந்தார்.
‘‘உங்களுக்கு மாச சம்பளம் எவ்வளவு?’’
‘இன்கம்டாக்ஸ் ஆபீஸரி’டமே மகான் இப்படிக் கேட்கிறாரே... என்று பக்தகோடிகள் அனைவரும் பதிலைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தார்கள்.
‘‘சுமாரா பத்தாயிரம் ரூவா வரும் பெரியவா’’ ‘ஆபீஸர்’ சொன்னார்.
‘‘சரி... இந்தப் பத்தாயிரத்தை வெச்சுண்டு ஒம்ம குடும்பம் மாசா மாசம் கடன் இல்லாம ஓடறதா?’’
‘‘இல்லே பெரியவா... இந்தப் பணம் போறாததால் கொஞ்சம் கடனும் வாங்கி சமாளிக்கிறேன். இது எனக்கு வழக்கமாயிடுத்து.’’
கூட்டத்தினர் முகத்தில் ஆச்சரியம். மாசம் பத்தாயிரம் சம்பளம் வாங்கறவரும் கடன் வாங்குகிறாரா என்கிற பிரமிப்பு அது.
‘‘மாசம் எவ்ளோ கடன் வாங்குவேள்?’’
‘‘ஒரு மூவாயிரம் ரூவா வரைக்கும் வாங்கும்படியா இருக்கும் பெரியவா.’’
‘‘ஆக, மாசம் முந்நூறு ரூவா ‘ஆவரேஜா’ சம்பாதிக்கிற ராமமூர்த்தியும் மாசம் கடன் வாங்கறான். பத்தாயிரம் ரூவா சம்பளம் வாங்கற இந்த ஆபீஸரும் கடன் வாங்கறார்... இதுலேர்ந்து என்ன தெரியறது...’’ என்று கேட்டபடி தனக்கு முன்னால் அமர்ந்திருந்த பக்தர்கள் கூட்டத்தைப் பார்த்தார் மாமுனிவர்.
அவர்களுக்குக் காரணம் புரிந்தது. என்றாலும், மகான் சொல்லப் போகிற விஷயத்தைக் கேட்க வேண்டும் என்று அமைதியாக இருந்தார்கள்.
ஒரு சில விநாடி இடைவெளிக்குப் பிறகு பெரியவாளே தொடர்ந்தார்: ‘‘எவ்வளவு பணம் நமக்கு வந்தாலும், அது நமக்கு போதமாட்டேங்கிறது. இன்னும் இன்னும்னு தேவைப்பட்டுண்டே இருக்கு. ஏன்னா, நம்மோட தேவைகளை நாம் பெருக்கிக் கொண்டே வாழப் பழகி விட்டோம். சில விஷயங்கள் இல்லாமல் வாழவே முடியாது என்று தீர்மானித்து விட்டோம். ‘நாம் சம்பாதிப்பது நம் குடும்பத்துக்குப் போதும். இதைக் கொண்டு குடித்தனத்தை நிம்மதியாக நடத்துவோம்’ என்கிற பக்குவம் பெரும்பாலானோர்க்கு வரவில்லை...’’
நிறுத்திவிட்டு, பக்தகோடிகளைத் தன் பார்வையால் அளைந்தார் மகான்.
எப்பேர்ப்பட்ட உபதேசம்!
மகான் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொள்வதுபோல் அனைவரின் முகமும் காணப்பட்டது.
ஒவ்வொருவரும் தனித்தனியாக உட்கார்ந்து யோசித்தால், மகா பெரியவா சொன்னதில் இருக்கக்கூடிய உண்மை புரியும்.
தொடர்ந்து மகா பெரியவா சொன்னது என்ன?
(ஆனந்தம் தொடரும்...)
சென்ற அத்தியாயத்தை வாசிக்க:
மகா பெரியவா: அருளே ஆனந்தம் - 49