பாரத நாட்டின் தெற்கு முனையாகவும், மூன்று கடல்கள் சங்கமிக்கும் இடமாகவும், சூரியன் மறைவதையும் பெளர்ணமி சந்திரன் உதிப்பதையும் ஒரே நேரத்தில் காண முடிகிற இடமாகவும், சக்தி பீடங்களில் ஒன்றாகவும் விளங்குவது கன்னியாகுமரி. முக்கடல் சங்கமத்தில் இப்போதும் கன்னியாகவே தவக்கோலத்தில் அருள்பாலிக்கிறாள் கன்னியாகுமரி பகவதி அம்மன்.
புராண காலத்தில் பாணாசுரன் என்பவன் கன்னிப்பெண்ணைத் தவிர வேறு யாராலும் தனக்கு மரணம் நிகழக்கூடாது என்ற வரத்தினை பிரம்மாவிடம் பெற்றான். அதன்பின் இந்திரனையும், தேவர்களையும் கடும் துன்பத்துக்கு ஆளாக்கினான். அவனை அழிப்பதற்காக பார்வதி தேவியையே பூலோகத்துக்கு அனுப்புவது என மும்மூர்த்திகளும் முடிவெடுத்தனர்.
அதன்படி பாரதத்தின் தெற்கு கோடியில் அன்னை அவதரித்தாள். சிவபெருமானையே மணாளனாக அடைய வேண்டும் என்று ஆசைகொண்டு முக்கடல் சங்கமத்தில் உள்ள பாறையில் ஒற்றைக்காலில் நின்றபடி அவள் கடும் தவம் இருந்தாள். சிவபெருமானும் குறிப்பிட்ட நாளில் சூரிய உதயத்துக்கு முன்பாக திருமணம் நடைபெறும் என்றும், சூரியன் உதித்துவிட்டால் திருமணம் நடைபெறாது என்றும் வாக்கு தந்தார்.
குறிப்பிட்ட நாளும் வந்தது. சிவபெருமான் வாக்குப்படி திருமணம் நடைபெற்றால், பாணாசுரன் வதம் நிகழாது போகுமே என்று தேவர்கள் அஞ்சினர். நாரத முனிவரிடம் யோசனை கேட்டனர். அவரும் தான் உதவுவதாக கூறினார்.
சுசீந்திரத்தில் தாணுமாலயன் என்ற திருப்பெயருடன் எழுந்தருளியுள்ள சிவபெருமான், கன்னியாகுமரிக்கு செல்ல ஆயத்தமானார். சூரிய உதயத்துக்கு முன்பாகவே கன்னியாகுமரியை சென்றடையும் வகையில் வேகமாகச் சென்றார். சுசீந்திரத்துக்கும், கன்னியாகுமரிக்கும் நடுவே வழுக்கம்பாறை என்ற ஊர் உள்ளது. அங்கு சேவல் வடிவில் நின்று கொண்டிருந்த நாரதர் சிவபெருமான் வரும் நேரம் பார்த்து, பொழுது விடிந்துவிட்டது என்று அறிவிக்கும் வகையில் கூவினார். சேவல் கூவியதும் பொழுது விடிந்துவிட்டதே என்று தவறாக எண்ணிக்கொண்டு மீண்டும் சுசீந்திரத்துக்கே சிவபெருமான் திரும்பினார்.
அங்கு கன்னியாகுமரியில் திருமணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளுடன் சக்திதேவி காத்துக் கொண்டிருந்தாள். சூரியன் உண்மையிலேயே உதயமான பிறகும் சிவபெருமான் வராத கோபத்தால், திருமணப் பொருட்களையெல்லாம் அவர் வீசியெறிந்தாள். மீண்டும் அங்கு தவத்தை தொடர்ந்தாள். அவளது அழகில் மயங்கிய பாணாசுரன் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு தேவி பகவதியிடம் வேண்டினான். போரில் தன்னை வென்றால் திருமணம் செய்து கொள்வதாக அன்னை கூறினாள். இருவருக்கும் போர் தொடங்கியது. வானளாவிய உருவம் எடுத்த தேவி விஜயதசமி நாளில் மகாதானபுரம் என்ற இடத்தில் பாணாசுரனை வதம் செய்தாள். அன்னையை தேவர்கள் போற்றித் துதித்தனர்.
தற்போதும் முக்கடல் சங்கமத்தில் தவக்கோலத்தில் அன்னை காட்சி தருகிறாள். குங்குமம், சந்தனம் போன்ற பொருட்களை அன்னை வீசியதால் இப்போதும் கன்னியாகுமரி கடற்கரை பல்வேறு வண்ணங்களில் காட்சி தருகிறது. கன்னியாகுமரி பகவதி அம்மன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். முக்கடல் தீர்த்தத்தில் நீராடி, பகவதி அம்மனை வணங்கிச் செல்ல நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் தினமும் குவிகின்றனர். புரட்டாசி மாதம் விஜயதசமி அன்று குதிரை வாகனத்தில் அம்மன் மகாதானபுரத்துக்கு பரிவேட்டைக்கு எழுந்தருள்வார். அங்கு பாணாசுர வதம் நடைபெறுவதை இப்போதும் காணலாம்.