ராமேஸ்வரம் கோயிலில் குவிந்த பக்தர்கள்; கூட்ட நெரிசலில் மயங்கி சரிந்த பெண்ணால் பரபரப்பு


கோயிலில் கூட்ட நெரிசல்

தொடர் விடுமுறையினை தொடர்ந்து ராமேஸ்வரம் கோயிலில் குவிந்த கூட்ட நெரிசலில் சிக்கிய பெண் பக்தர் ஒருவர் மயங்கி சரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கூட்ட நெருக்கடியில் சிக்கி மயங்கிய பெண் பக்தர்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உலக பிரசித்தி பெற்ற காசிக்கு இணையான தீர்த்தம், மூர்த்தி, ஸ்தலம் என முப்பெருமைகளையும் கொண்ட கோயிலாகும். இந்த புண்ணிய தலத்திற்கு நாள்தோறும் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி விட்டு, கோயிலுக்குள் சென்று அங்குள்ள 22 புனித தீர்த்தங்களிலும் நீராடிய பின்னர் ராமநாதசுவாமியையையும், பர்வதவர்த்தினி அம்மனையும் வழிபட்டு செல்கின்றனர்.

இந்நிலையில், கோயிலுக்குள் வரும் பக்தர்களை கட்டுப்படுத்த என்ற பெயரில் கோயிலின் நுழைவுவாயில் தொடங்கி பிரதான சந்நிதிகள் வரை இரும்பு தடுப்புகளை கொண்டு பாதை அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் பிரகாரம் முழுவதையும் பக்தர்கள் பயன்படுத்தி வந்த நிலையில் ஒரே நேரத்தில் பல ஆயிரம் பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்து வந்தனர்.

இதற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒரு நபர் மட்டுமே செல்லக்கூடிய வகையில் குறுகிய பாதையை கொண்ட தடுப்புகள் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால் சாமி தரிசனம் செய்ய செல்லும் பக்தர்கள் பல மணிநேரம் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது. மேலும் பக்தர்கள் செல்லும் பாதையில் காற்றோட்டத்திற்கு வாய்ப்பு இல்லை. போதிய எண்ணிக்கையிலான மின்விசிறிகளும் அமைக்கப்படவில்லை. இதனால் ஒரே நேரத்தில் அதிக கூட்டம் திரளும் போது நெருக்கடியில் சிக்கும் நிலை அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது.

நெருக்கடியுடன் கூடிய தடுப்புகள் வழியே செல்லும் பக்தர்கள்

கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை கோயிலில் சாமி தரிசனம் செய்ய சென்ற பக்தர் ஒருவர் கூட்ட நெருக்கடியில் சிக்கி மயக்கமடைந்தார். அவருக்கு முதலுதவி செய்யக்கூட வழியில்லாத நிலையில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்ததால் நீண்ட போராட்டத்திற்கு பின் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்நிலையில், தொடர் விடுமுறை காரணமாக ராமேஸ்வரத்தில் இன்று ஒரே நாளில் பல ஆயிரம் பேர் குவிந்துள்ளனர். இவர்கள் இன்று காலை சாமி தரிசனம் செய்ய சென்ற போது கோயில் பிரகாரத்தில் கடும் நெருக்கடி ஏற்பட்டது. இந்த நெருக்கடியில் சிக்கிய வடமாநிலத்தை சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் மயங்கி விழுந்தார். அவருடன் வந்த உறவினர்கள் தரிசன வரிசையில் இருந்து அவரை மீட்டு வந்து கோயில் பிரகாரத்தில் வைத்து முதலுதவி செய்தனர்.

நாளுக்கு நாள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவர்களின் பாதுகாப்பு கருதி கூடுதல் மின்விசிறிகளுடன், அவசர நேரத்தில் பக்தர்கள் வெளியேறும் வகையில் தடுப்புகள் இடையே போதிய இடைவெளி ஏற்படுத்த வேண்டும் எனவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

x