ராணிப்பேட்டை மாவட்டத்தில் 108 திவ்ய வைணவ தலங்களில் ஒன்றான சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் உள்ளது. பராங்குச சோழன் கட்டிய 3-ம் நூற்றாண்டு கோயில் இது. இங்கு ஒரு கடிகை நேரம், அதாவது ஒரு நாழிகை மட்டும் இருந்தாலே மோட்சம் கிட்டிவிடும் என்பது நம்பிக்கை. அத்தனை பெருமை உடையது கடிகாசலம் என்று அழைக்கப்படும் சோளிங்கர்.
இந்த கோயிலில் கார்த்திகை திருவிழா, சித்திரை உற்சவம், ஆவணி திருப்பவித்ரோற்ஸவம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோயிலில் முக்கிய திருவிழாக்களின் ஒன்றான ஆண்டாள் நாச்சியார் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதனை முன்னிட்டு ஆண்டாள் நாச்சியாருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட தங்க கேடயத்தில் எழுந்தருளி ஆண்டாள் தாயார் பக்தர்களுக்கு காட்சி தந்தார். மங்கள வாத்தியங்களுடன் சுவாமி திருக்கோயில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.