கோவை: விநாயகர் சதுர்த்தியை தொடர்ந்து, 3-வது நாளான இன்று (செப்.9) கோவையில் 700-க்கும் மேற்பட்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.
விநாயகர் சதுர்த்தி தினம் கடந்த 7-ம் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அன்றைய தினம், பல்வேறு இந்து அமைப்புகள், இயக்கங்கள், அரசியல் கட்சியினர் சார்பில், கோவையில் சாலையோர பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன.
அதன்படி, மாநகரில் 708 சிலைகளும், புறநகரப் பகுதிகளில் 1,528 விநாயகர் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. சதுர்த்தி தினத்தை தொடர்ந்து இவ்வாறு பொது இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் எடுத்துச் செல்லப்பட்டு, நீர் நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, சதுர்த்தியைத் தொடர்ந்து 3-வது நாளான இன்று (செப்.9) அதிக எண்ணிக்கையில் சிலைகள் கரைக்கப்பட்டன. அதாவது, குனியமுத்தூர் தர்மராஜா கோயிலில் இருந்து இன்று இந்து அமைப்புகள் சார்பில் விசர்ஜன ஊர்வலம் தொடங்கி பாலக்காடு சாலை வழியாக குனியமுத்தூர் குளத்துக்கு வந்து முடிந்தது. அதேபோல், மற்றொரு விசர்ஜன ஊர்வலம் போத்தனூர் சாரதா மில் சாலையில் தொடங்கி, சங்கம் வீதியில் ஒன்று கூடி, சுந்தராபுரம் வழியாக பொள்ளாச்சி சாலையில் சென்று குறிச்சி குளத்தில் முடிந்தது. விசர்ஜன ஊர்வலத்தை தொடர்ந்து விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. அதேபோல், துடியலூர் அருகேயுள்ள வெள்ளகிணறு குட்டையிலும் விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கரைக்கப்பட்டன.
நீர்நிலைகளில் தீயணைப்புத்துறையினர் பணியில் இருந்து சிலைகளை கரைக்க உதவி புரிந்தனர். அதேபோல், புறநகரப் பகுதியில் இன்று மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் இரண்டுக்கும் மேற்பட்ட இடங்களில் சிலைகள் கரைக்கப்பட்டன. அதாவது, மேட்டுப்பாளையம் நகரப் பகுதியில் 85 சிலைகள், காரமடையில் 202 சிலைகள், சிறுமுகையில் 45 சிலைகள் என மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளி்ல் மொத்தம் 360-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. மேற்கண்ட சிலைகள், பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்திலிருந்து பத்ரகாளியம்மன் கோயில் அருகேயுள்ள பவானி ஆறு, சுப்பிரமணியன் கோயில் அருகேயுள்ள பவானி ஆறு ஆகிய இடங்களில் இன்று கரைக்கப்பட்டன. விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் மற்றும் நீர் நிலைகளில் கரைப்பதையொட்டி, இன்று போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.