மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழா 5-ம் நாள்: உலவாக் கோட்டை அருளிய திருவிளையாடல்


மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 5-ம் நாளான இன்று உலவாக்கோட்டை அருளிய திருவிளையாடல் அலங்காரத்தில் பிரியாவிடை சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் அருள்பாலித்தனர். அப்போது சுவாமி, அம்மனின் பாதத்தில் நெற்குவியல் உள்ளது.

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத் திருவிழாவின் 5-ம் நாளான இன்று காலையில் உலவாக்கோட்டை அருளிய திருவிளையாடல் நடைபெற்றது.

அப்போது பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் பாதத்தில் நெற்குவியல்களுடன் சுவாமி அம்மன் அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்றிரவில் நந்திகேஸ்வரர் சுவாமியும், யாழி வாகனத்தில் மீனாட்சி அம்மனும் எழுந்தருளினார். அதனைத்தொடர்ந்து ஆறாம் திருநாளான பாணனுக்கு அங்கம் வெட்டிய திருவிளையாடல் நடைபெறும்.

உலவாக்கோட்டை அருளிய திருவிளையாடல் புராணம்: மதுரையில் அடியார்க்கு நல்லார் என்ற சிவனடியார் வாழ்ந்தார். இவர் தினமும் சிவனடியார்களுக்கு உணவளித்த பின்பே சாப்பிடும் கொள்கையை கொண்டிருந்தார். சிவனடியார்களுக்கு உணவு வழங்கியே செல்வம் குறைந்தாலும் கடன் வாங்கியாவது தனது கடமையை செய்தார். எல்லோரிடமும் கடன் வாங்கியதால், ஒரு கட்டத்தில் அவருக்கு கடன் கிடைக்காத நிலை ஏற்பட்டது. எனவே தனது மனைவியுடன் சோமசுந்தரரைத் தரிசனம் செய்து விட்டு, பின்னர் உயிர் நீப்பது என நினைத்து கோயிலுக்கு சென்றார்.

அடியார்க்கு நல்லாரின் தருமநெறியின் உண்மை நிலை கண்ட இறைவன் அசரீரியாகத் தோன்றி, ‘‘உடனே வீட்டிற்கு செல். அங்கே உனக்காக அள்ள அள்ளக் குறையாத நெல்மணிகளை கொண்ட உலவாக்கோட்டை ஒன்றை அளித்துள்ளோம்’’ என்றார். அதன்படியே சிவனடியார் மனைவியுடன் வீடு திரும்பிச் சென்றார். அங்கு இறைவன் தெரிவித்தபடி உலவாக் கோட்டை இருந்தது. அதன் மூலம் கிடைத்த நெல்மணிகளை கொண்டு கடைசி காலம் வரை சிவனடியார்க்கு உணவளித்தார்.

x