இன்று ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை... இதை மறக்காம செய்து பாருங்க. தொடர்ந்து வெள்ளிக்கிழமைகளில் உங்கள் வீட்டில் நிலை வாசலிலும் தீபம் ஏற்றி வழிபட்டு வருவது, உங்கள் வாழ்வில் நிச்சயம் மாற்றத்தைத் தரும். தீபத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்கிறது சாஸ்திரம்.
அதனால், வெள்ளிக்கிழமைகளில் உங்கள் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி வழிபடுவதோடு, காலையிலும், மாலையிலும் வீட்டின் நிலைவாசற்படியிலும் இரண்டு அகல் விளக்குகள் ஏற்றிவைத்து வேண்டிக்கொண்டால், கிரகலட்சுமியும் ஐஸ்வர்ய லட்சுமியும் நம் இல்லத்தில் குடியிருந்து, சுபிட்சத்தையும் நிம்மதியையும் தந்தருளுவார்கள்.உங்கள் வாழ்வில் ஐஸ்வர்யம் நிலைக்கும்.
எத்தனை வகை தீபங்கள் ஏற்றி வழிபடுகிறோமோ, அதற்குத் தக்க பலன்களும் புண்ணியங்களும் உண்டு. ஒரு தீபமேற்றி வழிபட்டால், மனதில் அமைதி நிலவும். குழப்பங்கள் யாவும் விலகும். ஒன்பது தீபங்களேற்றி வழிபட்டால், நவக்கிரக தோஷங்கள் அனைத்தும் விலகி விடும். தீயசக்திகள் அண்டாது.
12 தீபங்கள் ஏற்றி வழிபட்டால், ஜென்ம ராசியில் உள்ள தோஷங்கள் நீங்கும்; எதிர்ப்புகள் அகலும். 18 தீபங்களேற்றி வழிபட்டால், இல்லத்தில் சர்வ சக்தியும் குடிகொள்ளும்.
மொத்தம் 27 நட்சத்திரங்கள் இருக்கின்றன. எனவே, 27 தீபங்களேற்றி வழிபட்டால், நட்சத்திர தோஷங்கள் அனைத்தும் விலகும். 27 நட்சத்திரங்கள் மற்றும் ஒன்பது கிரகங்கள் ஆகியவற்றுக்காக 36 தீபங்களேற்றி வழிபட்டால், எடுத்த காரியம் அனைத்தும் கைகூடும். திருமணம் முதலான தடைபட்ட சுபகாரியங்கள் அனைத்தும் விரைவில் நடந்தேறும்.
48 தீபங்களேற்றி வழிபட்டால், தொழில் வளரும், மனோபயம் நீங்கும். மனோபலம் பெருகும். 108 தீபங்களேற்றி வழிபட்டால் நினைத்த காரியம் அனைத்தும் நடந்தேறும். நாமும் நம் சந்ததியும் செழிப்புடனும் சிறப்புடனும் வாழலாம். நம் புண்ணியங்கள் அனைத்தும் நம் சந்ததியைச் சென்றடையும். வாழையடி வாழையென அவர்கள் சீரும் சிறப்புமாக வாழ்வார்கள். இன்று முதல் வெள்ளிக்கிழமைகளில் இதைத் தொடர்ந்து செய்து வாங்க.