காக்கும் கார்த்திகைச் செல்வன் - 37


மயிலம் சுப்பிரமணிய சுவாமி

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோயில், முருகப் பெருமானின் திருத்தலங்களில் மிகவும் முக்கியத்துவம் பெற்ற இன்னொரு தலமாகப் போற்றப்படுகிறது. இது முருகப்பெருமானுக்கு திருமணம் ஆன தலம் என்பதால் இங்கு நிறைய திருமணங்கள் நடைபெறுகின்றன.

முருகப்பெருமான் வீற்றிருக்கும் மலை, மயில் வடிவத்தில் இருப்பதால், இத்தலம் ‘மயிலம்’ என்று பெயர் பெற்றது குறிப்பிடத்தக்கது. மயிலம் சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டால் மன அமைதி கிட்டும் என்பதால், எண்ணற்ற பக்தர்கள் எப்போதும் இத்தலத்துக்கு வந்து வழிபடுவது வழக்கம்.

தல வரலாறு

சூரபத்மனின் கொடுமையான ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதில் முருகப் பெருமான் உறுதியாக இருந்து, அவனது தந்திரங்களை முறியடித்தார். சூரபத்மனும், பல வித முயற்சிகள் மேற்கொண்டு முருகப் பெருமானை வீழ்த்துவதில் முனைப்பாக இருந்தான். இருப்பினும் அனைத்து முயற்சியிலும் தோல்வியுற்று, முருகப்பெருமானை சரண் புகுந்தான் சூரபத்மன்.

மனம் திருந்திய சூரபத்மன், தன்னை வாகனமாக ஏற்றுக் கொள்ளும்படி முருகப்பெருமானை வேண்டினான். அவனை தன் வாகனமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால் சூரபத்மன் கடும் தவம் புரிய வேண்டும் என்று முருகப்பெருமான் கூறினார்.

முருகப்பெருமானின் ஆலோசனைப்படி இத்தலத்துக்கு வந்து மயில் வடிவ மலையாக மாறிய சூரபத்மன், கடும் தவம் புரியத் தொடங்கினான். அவனது தவத்தில் மகிழ்ந்த முருகப்பெருமான் அவனுக்கு அருட்காட்சி வழங்கினார். சூரபத்மன் முருகப்பெருமானிடம் தன்னை வாகனமாக, ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினான். மேலும், தான் தவம் புரிந்த மயில் வடிவ மலை ‘மயூராசலம்’ என்று அழைக்கப்பட வேண்டும் என்றும் முருகப் பெருமானிடம் வேண்டுகோள் விடுத்தான். அத்துடன், முருகப்பெருமானும் மயூராசலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தான்.

முருகப்பெருமானும் அக்கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக உறுதி அளித்தார். மேலும், எதிர்காலத்தில் பாலசித்தர் என்பவர் மயூராசலத்தில் தவம் புரியும் சமயத்தில் சூரபத்மனின் விருப்பம் நிறைவேறும் என்றார். அந்த நாளை எதிர்நோக்கி மலையாக நிலை கொண்டு சூரபத்மன் காத்திருந்தான். ‘மயூராசலம்’ என்ற பெயர் காலப்போக்கில் மருவி ‘மயிலம்’ என்று ஆனதாகக் கூறப்படுகிறது.

சில காலம் கழிந்தது. சிவகணத் தலைவர்களில் ஒருவரான சங்கு கன்னர், தான் செய்த தவறு காரணமாக சாபம் பெற்று, பூவுலகில் மனிதராகப் பிறந்தார். மயிலம் மலைக்கு கிழக்குப் பகுதியில் பாலசித்தராக அவதாரம் எடுத்தார். தான் பெற்ற சாபத்துக்கு விமோசனம் பெற மயிலம் மலையில் தவம் மேற்கொண்டார். பாலசித்தர் ‘சிவ அபராதி’ என்று கூறி முருகப்பெருமான் அவருக்குக் காட்சி தரவில்லை.

முருகப்பெருமானின் தரிசனம் கிடைக்காத பாலசித்தர், மிகவும் வருத்தமடைந்தார். இதுதொடர்பாக வள்ளி மற்றும் தெய்வானையின் உதவியை நாடினார். அவர்களும் பாலசித்தர் மீது கருணை கொண்டு, அவருக்காக முருகப் பெருமானிடம் பரிந்துரை செய்தனர். வள்ளி, தெய்வானையின் சொல் கேட்டும் முருகப் பெருமான் மனம் இரங்கவில்லை.

இதையடுத்து வள்ளியும், தெய்வயானையும் பாலசித்தரின் ஆசிரமத்துக்கு எழுந்தருளினர். பின்னர் பாலசித்தரின் ஆசிரமத்திலேயே தங்கிவிட்டனர். வள்ளி மற்றும் தெய்வயானையின் வரவுக்காக சில காலம் காத்திருந்தார் முருகப்பெருமான். இருவரும் பாலசித்தரின் ஆசிரமத்தை விட்டு வருவதாகத் தெரியவில்லை. பொறுமை இழந்த முருகப் பெருமான், வேடனாக வேடம் தரித்து, பாலசித்தரின் ஆசிரமத்துக்கு வந்தார்.

பாலசித்தருக்கும் முருகப்பெருமானுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அதுவே மல்யுத்தமாக மாறியது. பிறகு தனது சுய உருவத்தை காட்டியருள எண்ணிய முருகப் பெருமான், பாலசித்தரின் விருப்பப்படியே, வள்ளி மற்றும் தெய்வானையுடன் திருமண கோலத்தில் காட்சியருளி, மலைமீது கோயில் கொண்டார்.

கோயில் அமைப்பும் சிறப்பும்

ஏறத்தாழ 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஒரு சிறிய குன்றின் மீது நெடிய ராஜ கோபுரத்துடன் அமைந்துள்ளது. எண்ணற்ற பசுமையான மரங்கள் சூழ்ந்து காணப்படுவதால், தொலைவில் இருந்து பார்க்கும்போது இக்குன்று மயில் தோகை விரித்திருப்பது போன்று காணப்படுகிறது. கோபுரமும் மயிலின் கொண்டை போல் உச்சியில் உள்ளது. கோயிலைப் போலவே, மலையும் புனிதமாகக் கருதப்பட்டு பக்தர்களால் வணங்கப்படுகிறது.

தவம் செய்வதற்கு ஏற்ற திசை வடக்கு என்று கூறப்படுகிறது. சூரபத்மன் இத்தலத்தில் வடக்கு நோக்கி தவமிருந்து முருகப்பெருமானின் வாகனமாக மாறியதால், அதே திசையை நோக்கி மயில் அமர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. (பெரும்பாலான கோயில்களில் மயில் தெற்கு நோக்கியோ அல்லது நேராகவோ இருக்கும்). தாமரை மலர் ஏந்திய வள்ளி வலதுபுறத்திலும், நீலோற்பவ மலர் ஏந்திய தெய்வானை இடதுபுறத்திலும் இருக்க, நின்ற கோலத்தில் முருகப்பெருமான் இத்தலத்தில் அருள்பாலிக்கிறார்.

மேல் கரங்களில் சக்தி ஆயுதம், சூலாயுதமும், கீழ்க் கரங்களில் அபய வரத முத்திரைகளும் கொண்டு சதுர்புஜங்களுடன் முருகப்பெருமான் காட்சி அருள்கிறார். கருவறை மண்டபத்துக்கு வெளியே பிரம்மாண்டமான வேலும் மயிலும் உள்ளன.

சித்தர்களின் ஜீவசமாதியில் வழிபாடு செய்தால், அனைத்து வரங்களும் கிடைக்கும் என்பதற்கு ஏற்ப, பாலசித்தர் சமாதியில் வழிபாடு செய்தால் அனைத்து செல்வங்களும் கிட்டும் என்பது ஐதீகம். எவரிடமும் சரணடையாத முருகப்பெருமானின் வேலாயுதம் பாலசித்தரிடம் சரணடைந்ததால், பாலசித்தர் சக்தி மிகுந்தவராகப் போற்றப்படுகிறார். மயிலம் கோயிலில் நடைபெறும் கந்தசஷ்டி விழாவின்போது சூரசம்ஹாரத்துக்குப் புறப்படும் முருகப் பெருமான், பாலசித்தரிடம் இருந்து வேலாயுதத்தைப் பெற்றுச் செல்வது குறிப்பிடத்தக்கது.

மயிலம் கோயிலில் உள்ள 11 தீர்த்தங்களில் ஒன்று அக்னி தீர்த்தம். பக்தர்கள் மலை ஏறும் சமயத்தில் முதலில் அக்னி தீர்த்தத்தைக் கண்டதும் சுந்தர விநாயகரை தரிசிப்பது வழக்கம். தைப்பூசத் திருவிழாவில் பக்தர்கள் இந்தக் குளக்கரையில் இருந்துதான் காவடி எடுப்பது வழக்கம். பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி என்று தோளில் சுமந்தபடி பக்தர்கள் மலைமீது ஏறுவர்.

மூன்று உற்சவர்கள்

மயிலம் கோயிலில் மூன்று உற்சவ மூர்த்திகள் அருள்பாலிக்கின்றனர். இவர்களில் பிரதானமாக இருப்பவர் வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலிக்கும் பாலசுப்பிரமணியர். பகலில் வெள்ளிக் காப்பு அணிந்தும், மாலை பூஜைக்குப் பிறகு தங்கக் காப்பு அணிந்தும் அருள்பாலிக்கிறார். மாதாந்திர கார்த்திகை நட்சத்திர தினத்திலும், பங்குனி உத்திரப் பெருவிழாவிலும் இவர் வீதியுலா காண்கிறார்.

இரண்டாவது உற்சவர் வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலிக்கும் முத்துக் குமாரசுவாமி. இவர் பரணி நட்சத்திர தினத்தில் வீதியுலா காண்பார். மாசி மகம் தீர்த்தவாரிக்கு புதுவை கடற்கரைக்குச் சென்று 5 நாட்கள் தங்கியிருந்து, ஆறாவது நாள் கோயிலுக்குத் திரும்புவார்.

மூன்றாவது உற்சவர் ஆறுமுகங்கள் கொண்ட சண்முகப்பெருமான். இந்த உற்சவமூர்த்திக்கு அருகில் அவரது படைத் தளபதி வீரபாகுவும் எழுந்தருளியுள்ளார். கந்தசஷ்டி திருவிழாவின்போது ஆறு நாட்கள் வீதியுலா காணும் உற்சவருடன் வீரபாகுவும் செல்வது வழக்கம்.

திருவிழாக்கள்

சித்திரை பௌர்ணமி, வைசாகப் பெருவிழா, ஆனி மாத திருவாதிரை குரு பூஜை, ஆடிக் கிருத்திகை, கந்த சஷ்டி பெருவிழா, கார்த்திகை தீபம், தைப்பூசத் திருவிழா, மாசி மகத் திருவிழா, பங்குனி உத்திர பெருவிழா இங்கே வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திரத் திருவிழாவில் முருகப்பெருமான் திருமண கோலத்தில் மயில், யானை, ஆட்டுக் கிடா, நாகம், பூதம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வருவார்.

அனைத்து செவ்வாய்க்கிழமைகளிலும் வேலாயுதத்துக்கு அர்ச்சனை செய்யப்படும். உற்சவமூர்த்திக்கு பால் அபிஷேகம் நடைபெறும்.

முருகப்பெருமானுக்கு நொச்சி இலை மாலை அணிவித்தால் அனைத்து நன்மைகளும் கிட்டும் என்பது நம்பிக்கை. தினமும் முருகப்பெருமானுக்கு நொச்சி இலை மாலை அணிவித்த பிறகே மற்ற பூமாலைகள் அணிவிக்கப்படுகின்றன. திருமணத் தடை நீங்க, கடன் பிரச்சினை தீர, மன அமைதி பெற இத்தலத்தில் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அமைவிடம்: புதுச்சேரி எல்லை கிராமங்களில் இருந்து 13 கி.மீ, திண்டிவனம் நகரத்தில் இருந்து 15 கி.மீ, புதுச்சேரி நகரத்தில் இருந்து 30 கி.மீ தூரத்தில் உள்ளது மயிலம் திருத்தலம்.

x