117 ஆண்டுகளுக்கு பிறகு மானூர் அம்பலவாண சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!


மானூர் அம்பலவாண சுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார். கோபுர கலசம் மீது புனித நீர் ஊற்றப்பட்டது.

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே மானூரில் உள்ள அம்பலவாண சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழாநேற்று விமரிசையாக நடைபெற்றது. விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, எம்பிக்கள், எம்எல்ஏக்கள், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

மானூர் அம்பலவாண சுவாமிகோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. இக்கோயிலில் கடந்த117 ஆண்டுகளுக்கு முன்புகும்பாபிஷேகம் நடந்துள்ளது. தொன்மையான கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்ததமிழக அரசு நிதி ஒதுக்கியதை தொடர்ந்து மானூர் அம்பலவாண சுவாமி கோயிலில் திருப்பணிகள் மேற் கொள்ளப்பட்டன,

தொடர்ந்து கடந்த 6-ம் தேதி காலை 7 மணிக்கு மகா கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. நேற்று அதிகாலை 5 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜையும், தொடர்ந்து பிம்பசுத்தி, மகா பூர்ணாஹுதி, யாத்ராதானம், கடம் எழுந்தருளலும் நடைபெற்றது.

காலை 7 மணிக்குமேல் இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சர்பி.கே.சேகர்பாபு கொடியசைத்து தொடங்கி வைக்க சித்திரசபை அம்பலவாணர், காந்திமதி அம்பாள் உடனுறை, நெல்லையப்பர் சந்நிதி விமானங்கள், கருவறைகள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடை பெற்றது.

விழாவில் எம்பிக்கள் ராபர்ட் புரூஸ் (திருநெல்வேலி), டாக்டர் ராணி குமார் (தென்காசி), சட்டப்பேரவை உறுப்பினர்கள் அப்துல் வகாப், ராஜா, நயினார் நாகேந்திரன், மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், உதவி ஆட்சியர் (பயிற்சி) அம்பிகா ஜெயின், திருநெல்வேலி மேயர் ராமகிருஷ்ணன், துணை மேயர் கே.ஆர் ராஜூ, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் (பொறுப்பு அன்புமணி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் அம்பலவாணர், சுவாமி, அம்பாள் மற்றும்பரிவார மூர்த்திகளுக்கு மகா அபிஷேகம், திருக்கல்யாணம், தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை உதவி ஆணையர் சு.கவிதா, செயல் அலுவலர் அ.அய்யர்சிவமணி, தக்கார் க.பரமசிவன் உள் ளிட்டோர் செய்திருந்தனர்.

விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

திராவிட மாடல் ஆட்சி அறநிலையத்துறைக்கு பொற்காலம்: அமைச்சர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த வருமானம் இல்லாத கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்த 2022- 23, 2023-24,2024-25 ஆகிய 3 நிதியாண்டுகளில் ஆண்டுக்கு 100 கோடி வீதம் 300 கோடி ரூபாய் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதி ஒதுக்கீடு செய்தார்.

பக்தர்களிடமிருந்து உபயமாக ரூ.142 கோடி பெறப்பட்டுள்ளது. இதுவரை ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த 37 கோயில்களுக்கு குடமுழுக்கு நடந்துள்ளது. திமுக ஆட்சியில் இதுவரை 2,098 கோயில்களுக்கு குடமுழுக்கு நடந்துள்ளது. இன்று ஒரு நாள் மட்டும் 55 கோயில்களில் குடமுழுக்கு நடந்துள்ளது.

805 கோயில்களுக்கு சொந்தமான 6,703 கோடி மதிப்புள்ள 6,857 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு, எல்லைக் கற்கள் நடப்பட்டுள்ளன. ரூ.92 கோடி மதிப்பில் 47 ராஜகோபுரங்கள் கட்டப்படுகின்றன.

ரூ.59 கோடி செலவில் 97 புதிய மரத்தேர்கள் அமைக்கப்படுகின்றன. ரூ.29 கோடி மதிப்பில் 5 தங்கத் தேர் பணிகள், ரூ.27 கோடி செலவில் 9 வெள்ளித் தேர்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

புதிதாக 4 கோயில்கள் ரூ.3.07 கோடி செலவில் உருவாக்கப்பட்டு வருகின்றன. ரூ.301.67 கோடி மதிப்பில் 85 புதிய திருமண மண்டபங்கள், ரூ.86.97 கோடி மதிப்பில் 121 அன்னதான கூடங்கள், ரூ.187.05 கோடி மதிப்பில் பக்தர்களுக்காக 28 தங்கும் விடுதிகள், கட்டப்பட்டு வருகின்றன. 19 கோயில்களில் ரூ.1,530 கோடி செலவில் பெருந்திட்ட வரைவு மேற்கொள்ளப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுபோல் எண்ணற்ற பணிகளை மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி செய்து வருகிறது. இந்த ஆட்சி தான் இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் பொற்கால ஆட்சியாக கருதப் படும். திருச்செந்தூர் கோயிலில் எந்த திருப் பணிகளுக்கும் அறநிலையத்துறை தடை விதிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

x