புத்தரிசி பூஜை... சபரிமலை கோயிலில் நடைதிறப்பு!


சபரிமலை ஐயப்பன் கோயில்

நாளை நடைபெற உள்ள நிறை புத்தரிசி பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது.

கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் ஆடி மாதத்தில் நிறை புத்தரிசி பூஜை நடத்தப்படுவது வழக்கம். நாட்டில் வறட்சி நீங்கி விவசாயம் செழிக்கவேண்டும் என்பதற்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நிறை புத்தரிசி பூஜை நடைபெறும். இந்த ஆண்டுக்கான நிறை புத்தரிசி பூஜை நாளை ஆகஸ்ட் 10- ம் தேதி நடக்கிறது.

இதை முன்னிட்டு ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. புத்தரிசி பூஜையில் நெற்கதிர்களை வைத்து சந்நிதானத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். அதனால் நாட்டில் தானியங்கள் விளைச்சல் அதிகரித்து சுபிட்சம் பெருகும் என்பது ஐதீகம்.

புத்தரிசி பூஜைக்குப் பின்னர், நாளை இரவு 10 மணி அளவில் விசேஷ பூஜைகள் நடைபெறும். அதனைத் தொடர்ந்து நடை சாத்தப்படுகிறது.

ஆவணி மாத பிறப்பு பூஜைக்காக ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி மீண்டும் நடை திறக்கப்பட்டு 21-ம் தேதி வரையிலும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பூஜை நடைபெறும். திருவோணம் திருவிழாவிற்காக ஆகஸ்ட் 27 முதல் 31-ம் தேதி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்.

x