திருச்சி / திருப்பத்தூர்: திருச்சி மலைக்கோட்டையில் உள்ள மட்டுவார்குழலம்மை சமேத தாயுமானவர் கோயிலின் அடிவாரத்தில் மாணிக்க விநாயகர் சந்நிதியும், மலையின் உச்சியில் உச்சிப் பிள்ளையார் சந்நிதியும் உள்ளன.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று முன்தினம் கோயில் மடப்பள்ளியில் 60 கிலோ பச்சரிசி மாவு, 60 கிலோ உருண்டை வெல்லம், 10 கிலோ ஏலக்காய், ஜாதிக்காய், எள், தேங்காய்ப் பூ மற்றும் 30 கிலோ நெய் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி தலா 75 கிலோவில் 2 பிரம்மாண்ட கொழுக்கட்டைகள் தயார் செய்யப்பட்டன. இதில் ஒன்றை கோயில் பணியாளர்கள் ஒரு துணியில் தொட்டில் போல கட்டி, மடப்பள்ளியில் இருந்து உச்சிப் பிள்ளையார் கோயிலுக்கு சுமந்து சென்றனர்.
பின்னர், மாணிக்க விநாயகருக் கும், உச்சிப் பிள்ளையாருக்கும் கொழுக்கட்டைகள் படையலிடப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்நிகழ்வில், தருமை ஆதீனம் மவுனமடம் கட்டளை விசாரணை திருஞான சம்பந்தம் தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை அறநிலையத் துறை இணை ஆணையர் கல்யாணி, உதவி ஆணையர் அனிதா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
பிள்ளையார்பட்டியில்... சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் கோயிலில் கடந்த ஆக. 29-ம் தேதி கொடியேற்றத்துடன் சதுர்த்தி விழா தொடங்கியது. தினமும் காலையில் சுவாமி வெள்ளி கேடகத்திலும், இரவில் சிம்மம், பூதம், கமலம், ரிஷபம், மயில், குதிரை உள்ளிட்ட வாகனங்களிலும் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்று வந்தது.
கடந்த 3-ம் தேதி கஜமுக சூரசம்ஹாரம் நடைபெற்றது. கடந்த 6-ம்தேதி மாலை தேரோட்டம் நடைபெற்றது. அன்று சந்தனக் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு மூலவர் காட்சி அளித்தார். இந்நிலையில், சதுர்த்தி விழாவையொட்டி நேற்று முன்தினம் அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, கோயில் திருநாள் மண்டபத்தில் தங்க மூஷிக வாகனத்தில் உற்சவர் எழுந்தருளினார். அவருக்கு தீபாராதனைகள் காட்டப்பட்ட பின்னர் கோயிலைச் சுற்றிவலம் வந்து, திருக்குளக்கரையில் உற்சவர் எழுந்தருளினார்.
உற்சவர் முன்னிலையில் அங்குசத் தேவருக்கு பால்,பன்னீர், தயிர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர், திருக்குளத்தில் அங்குசத் தேவருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பிற்பகல் மூலவருக்கு முக்குறுணி மோதகப் படையல் நிகழ்ச்சியும், இரவில் பஞ்சமூர்த்தி சுவாமிகள் புறப்பாடும் நடைபெற்றன.