விநாயகர் சதுர்த்திக்காக பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் கரைப்பு


ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் நடைபெற்ற விநாயகர் சிலைகள் கரைப்பு நிகழ்ச்சி. படங்கள்: எல். பாலச்சந்தர்.

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் விநாயகர் சதுர்த்தி விழாக்காக பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அக்னி தீர்த்தக்கடற்கரையில் நேற்று கரைக்கப்பட்டன.

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இந்து அமைப்புகளின் சார்பில் 350-க்கும் மேற்பட்ட இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டன. இதற்காக ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரை, மண்டபம் இந்திரா நகர் கடற்கரை, தேவிபட்டணம் நவபாஷணம் கடற்கரை, நரிப்பையூா் கடற்கரை, ராமநாதபுரம் நொச்சிச் வயல் ஊருணி, பரமக்குடி வைகை ஆறு பெருமாள் கோயில் பகுதி ஆகிய இடங்களில் விநாயகர் சதுர்த்தி சிலைகளை கரைக்கும் இடங்களாக மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராமேசுவரத்தில் பெரியகடை வீதி, ராமகிருஷ்ணபுரம், சேரான் கோட்டை, எம்.ஆர்.டி.நகர், இந்திரா நகர், சிவகாமி நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் விநாயகர் கோயில்கள் மற்றும் இந்து அமைப்புகள் சார்பாக ஏற்பாடுகள் சிலைகள் வைக்கப் பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் அக்னி தீர்த்தக் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை மாலை கரைக்கப்பட்டன.

இந்து முன்னணி சார்பில் ராமேசுவரம் தேவல் சிலை சந்திபிலிருந்து விநாயகர் ஊர்வலம் துவங்கியது. ஊர்வலத்திற்கு இந்து முன்னணி நகரத் தலைவர் நம்புராஜன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் பரமேஸ்வரன், மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி அகியோர் சிறப்புரையாற்றினர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்று, அக்னி தீர்த்த கடலில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது.

துணைக் கண்காணிப்பாளர் உமா தேவி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பரமக்குடியில் இந்து முன்னணி சார்பில் 31-வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவில் விநாயகர் சிலை ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் பகுதியிலிருந்து புறப்பட்ட ஊர்வலத்திற்கு பரமக்குடி இந்து முன்னணி மாவட்ட செயலாளர் எஸ்.வீரபாண்டியன் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் மணலி மனோகரன் சிறப்புரையாற்றினார்.

பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக நகரின் முக்கிய வீதிகளின் வழியாக கொண்டு செல்லப்பட்டன. பின்பு, பெருமாள்கோயில் படித்துறையில் வைகையாற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

x