“உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய வொருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே”
திருவண்ணாமலை குறித்து திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருமுறை திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் உண்ணாமுலை அம்பாளின் திருப்பெயருடன் தொடங்குகிறது.
பார்வதி தேவி சிவபெருமான் தேகத்தில் பாதியைப் பெற்று அர்த்தநாரியாக வரம் வேண்டினார். சிவபெருமானின் வழிகாட்டுதலின் படி காஞ்சிபுரம் வந்து அங்கு மணலால் ஒரு லிங்கம் அமைத்து தவம் இருந்தாள்.
பின்னர், அக்னி ஸ்தம்பமாக சிவபெருமான் காட்சி கொடுத்த திருவண்ணாமலையில் கெளதம ரிஷியின் ஆச்ரமத்துக்கு வந்தாள். மலை வடிவமாக லிங்கம் காட்சிதரும் திருவண்ணாமலையில் தவத்தை தொடருமாறு முனிவர் கூற தேவியும் தனது தவத்தை தொடர்ந்தாள். அங்குதான் மகாவிஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் அக்னி ஸ்வரூபமாக சிவபெருமான் காட்சி கொடுத்து, தனது இடதுபாகத்தை அன்னைக்கு அளித்தார்.
திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை நாளில் அர்த்தநாரீச்வரராக சிவபெருமான் எழுந்தருள்வதையும், தொடர்ந்து மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதையும் இப்போதும் நாம் தரிசிக்கிறோம்.
பஞ்ச பூத தலங்களில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அக்னித்தலமாகும். அண்ணாமலையார் சன்னதிக்கு இடதுபுறம் தனிக்கோயிலில் ஸ்ரீ உண்ணாமுலை அம்பாள் வீற்றிருக்கிறார். அபிதகுஜாம்பிகை, திருக்காமக்கோட்ட நம்பிராட்டி என்ற பெயர்களும் அம்பாளுக்கு உண்டு.
திருமுறைப் பாடல் பெற்ற 275 சிவன் கோயில்கள் திருமுறைத்தலங்கள் எனப் போற்றப்படுகின்றன. இவற்றில் 22 திருத்தலங்கள் நடுநாட்டில் அமைந்துள்ளன. இந்த 22 தலங்களில் மிகவும் சிறப்புடையது திருவண்ணாமலை ஆகும்.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் இத்தலத்தைப் பாடியுள்ளார்கள். மாணிக்கவாசகர் திருவண்ணாமலைக்கு வந்து பலகாலம் தங்கியிருந்து திருவெம்பாவை பாடல்களையும், திருவம்மானை பதிகங்களையும் இயற்றினார். திரு அண்ணாமலையார் குறித்து ஏராளமான பதிகங்கள் பாடப்பட்டது போல், இத்தலத்து அம்பாள் குறித்தும் உண்ணாமுலையம்மன் பதிகம், உண்ணாமுலையம்மன் சதகம் ஆகியவை பாடப்பட்டுள்ளன.