விநாயகர் வழிபாட்டில் எந்தெந்த அர்ச்சனைகளுக்கு என்னென்ன பலன்கள்?


புண்ணிய தலங்களில் உள்ள கோயில்களில் மட்டுமின்றி ஆற்றங்கரையில் உள்ள அரசமரத்தடியிலும் பக்தர்களுக்கு அருள்பாலிப்பவர் விநாயகர். எளிமையின் வடிவான விநாயகப்பெருமானுக்கு வன்னி மரத்தின் இலைகளால் செய்யும் ஆராதனை மிகவும் சக்திவாய்ந்தது என சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. அதுவும் விநாயகர் சதுர்த்தி தினத்தில் வன்னி மர இலைகளின் மூலம் விநாயகர் வழிபாடு செய்வது விசேஷமானதாகக் கருதப்படுகிறது.

பெருமாளுக்குத் துளசி இலைகளைப் போன்ற உயர்வான சமர்ப்பணம் வேறு இல்லை என்கிறது வைணவம், சிவபெருமானுக்குப் பெரிய பூஜைகள் செய்வதைவிட பக்தியோடு ஒரு வில்வ இலையை சமர்ப்பித்தாலே அவர் மனம் மகிழ்ந்து அருள்வார் என்கிறது சைவம். அதேபோல் எளிமையின் வடிவான விநாயகருக்கு வன்னி இலைகள் கொண்டு செய்யும் ஆராதனை மிகவும் சக்திவாய்ந்தது என்கின்றன சாஸ்திரங்கள்.

இயற்கையில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு இறைவனை வழிபடுவதே நம் மரபு. அந்த வகையில் வழிபாடுகளில் பூக்களுக்கு இருக்கும் முக்கியத்துவம் இலைகளுக்கும் புற்களுக்கும் உண்டு. விநாயகர் சதுர்த்தி பூஜையில் 108 அஷ்டோத்திர பூஜை, 21 மலர்கள், 21 இலைகள், 21 இரட்டை அருகம்புல் ஆகியன கொண்டு செய்யும் அர்ச்சனைகளும் உண்டு. விநாயகருக்கு மிகவும் உகந்த மலர் எருக்கம்பூ மற்றும் தும்பைப் பூ. இவை எளிமையாக அனைவருக்கும் கிடைக்கும் வகையில் வளர்வன.

இவற்றைத் தவிர புன்னை, மந்தாரை, மகிழம், பாதிரி, அரளி, ஊமத்தை, சம்பங்கி, மாம்பூ, தாழம்பூ, முல்லை, கொன்றை, செங்கழுநீர், செவ்வரளி, வில்வம், குருந்தை, பவழமல்லி, ஜாதிமல்லி, மாதுளம், கண்டங்கத்திரி ஆகியவை. இந்த 21 மலர்களும் விநாயகர் வழிபாட்டுக்கு மிகவும் உகந்தவை. இவை அனைத்தும் கிடைத்தால் அவற்றைக் கொண்டு கணபதியே போற்றி என்று 21 முறை சொல்லி அர்ச்சித்தாலே போதுமானது.

பத்ரம் என்றால் இலை என்று பொருள். இலைகளைக் கொண்டு பூஜை செய்தால் இல்லை என்பதே இல்லை என்பது அடியார் வாக்கு.

மாசி, பருஹதி எனும் கிளா இலை, வில்வம், அருக்கு, ஊமத்தை, இலந்தை, நாயுருவி, துளசி, மாவிலை, தங்க அரளி, விஷ்ணு கிரந்தி, மாதுளை, மருவு, நொச்சி, ஜாதிக்காய் இலை, நாரிசங்கை, வன்னி, அரசு, நுணா, எருக்கு, தேவதாரு ஆகிய 21 இலைகள் கணபதி வழிபாட்டுக்கு மிகவும் உகந்தவை. இவற்றுள் நம் வீட்டுக்கு அருகே கிடைக்கும் இலைகளைக் கொண்டே நாம் இறைவனை அர்ச்சித்து வழிபடலாம் இதில் ஒவ்வொரு இலைக்கும் ஒரு விசேஷமான பலன் உண்டு.

மாவிலை கொண்டு அர்ச்சித்தால் எதிரிகளின் சூழ்ச்சியினால் ஏற்பட்ட வழக்குகள் நல்ல முறையில் தீரும். வில்வ இலை கொண்டு அர்ச்சித்தால் செல்வம் பெருகும்.

ஊமத்தை இலை கொண்டு அர்ச்சித்தால் தீய குணங்கள் நீங்கும். நெல்லி இலை கொண்டு அர்ச்சித்தால் நிலையான வருமானமும் இனிய இல்லறமும் கிடைக்கும். நாயுருவி இலை கொண்டு பூஜை செய்தால் நல்ல வசீகரமான தோற்றம் கிடைக்கும். துளசி இலை கொண்டு அர்ச்சித்தால் ஆரோக்கியம் மேம்படும். இவ்வாறு ஒவ்வொரு இலைக்கும் ஒரு குறிப்பிட்ட பலன் உண்டு என்பதால் கிடைக்கும் இலைகளைக் கொண்டு 21 முறை கணபதியின் திருநாமங்களைச் சொல்லி வழிபட வேண்டும்.

21 மலர்கள், 21 இலைகள் கொண்டு அர்ச்சித்து வழிபடுவதைத் தொடர்ந்து 21 முறை தூர்வாயுக்ம சமர்ப்பணமும் செய்து வழிபட வேண்டியது அவசியம். தூர்வா என்றால் அருகம்புல். யுக்மம் என்றால் இரட்டை என்று பொருள். பொதுவாக அர்ச்சனையின்போது நாம் அருகம்புல்லை சாத்துவது வழக்கம். விநாயகர் சதுர்த்தி அன்று அருகம்புல் கொண்டு அர்ச்சிப்பதன் மூலம் அற்புத பலன்களைப் பெறலாம். இரண்டு இரண்டாக அருகம்புற்களை எடுத்து கணபதியின் நாமத்தைச் சொல்லி இறைவனுக்கு சமர்ப்பிக்க வேண்டும்

அருகம்புல் வழிபாடு என்பது அல்லல்கள் தீர்க்கும் வழிபாடு. வாழ்வில் தொடர்ந்து பிரச்சினைகள், தொல்லைகள், கடன், வறுமை, ஆகியவற்றால் துன்புறுபவர்கள் விநாயகப்பெருமானுக்கு அருகம்புல் சாத்தி வழிபட அவை படிப்படியாகக் குறையும். அருகம்புல்லை இறைவனுக்கு சாத்தி வணங்குவதன் மூலம் மன அமைதி கிடைக்கும். விநாயகர் சதுர்த்தி அன்று 108 முறை நாமம் சொல்லி வழிபடும் 108 அஷ்டோத்திர அர்ச்சனையோடு, 21 மலர்கள், 21 இலைகள், 21 இரட்டை அருகம்புல் ஆகியன கொண்டு விநாயகரை வழிபட்டு சகல நன்மைகளையும் பெறுவோம்.

x