மகா பெரியவா: அருளே ஆனந்தம் - 48


மகா பெரியவா

மகா பெரியவா அன்ன பிஷையை நித்தமும் எடுத்துக் கொள்ளவில்லை என்றதும், அன்னதான சிவன் மிகவும் மனம் வருந்தி ஒரு கடிதம் எழுதினார் ஸ்ரீமடத்துக்கு. அதில், ‘பிஷையை பெரியவா ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என்று ஆதங்கத்துடன் எழுதி இருந்தார்.
கடிதம் படிக்கின்ற வழக்கம் கொண்ட தொண்டர் அதைப் பெரியவாளுக்கு படித்துக் காட்டினார். பெரியவா ஒரு புன்னகையோடு அந்தக் கடித வாசகத்தைக் காதில் வாங்கியது போலும் காட்டவில்லை; வாங்காதது போலும் காட்டவில்லை.
அடுத்த ஒரு சில தினங்களில் மகா பெரியவா காட்டிய இந்த ஏனோதானோ ‘ரியாக்ஷன்’, வெளியூரில் இருக்கும் அன்னதான சிவனின் பார்வைக்குக் கொண்டு போகப்பட்டது.மனம் உடைந்து அடுத்த கடிதத்தையும் உரிமையுடன், அதே நேரத்தில் சோர்ந்து போகாமல் எழுதி ‘போஸ்ட்’ செய்தார் அன்னதான சிவன்.

காஞ்சி ஸ்ரீமடத்துக்கு வந்து சேர்ந்தது இரண்டாவது தபால்!

கடிதங்களை மகா பெரியவாளுக்குப் படித்துக் காட்டும் வழக்கம் உள்ள அதே தொண்டர் ஒரு நாள் மதிய வேளையில் படித்துக் காண்பித்தார். ‘பெரியவா அன்ன பிஷையை ஏற்றுக் கொண்டு அனைவருக்கும் தன் இன்னருளை வழங்க வேண்டும்’ என்று நெக்குருகி சிவன் எழுதி இருந்த வாசகங்களை முழுவதுமாக ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டினார்.
மீண்டும் அன்ன பிஷையை மகான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் பிரார்த்தனை!

இந்தமுறை பெரியவாளிடம் இருந்து ஒரு ‘பாஸிட்டிவ் ரியாக்ஷன்’! இதை அவரது முகக் குறிப்புகளில் இருந்தே தெரிந்து கொள்ள முடிந்தது.

தொண்டரில் இருந்து அங்கே கூடி இருந்த சிப்பந்திகள் வரை அனைவருக்கும் ஒரு நெகிழ்ச்சி. மகான் அநேகமாக ‘க்ரீன் சிக்னல்’ காண்பித்து விடுவார் என்று நம்பிக்கை.

கடிதத்தைப் படித்துக் காண்பித்த தொண்டர், அதற்கு அடுத்த கடிதத்தைப் படிக்காமல் ‘இதற்கு என்ன பதில் எழுத வேண்டும்?’ என்பது போல் பெரியவாளையே கனிவுடன் ஏறிட்டுப் பார்த்தார்.

தொண்டரைப் பார்த்து ஒரு தெய்வீகப் புன்னகை பூத்தது அந்தப் பரப்பிரம்மம். பிறகு, ‘‘சிவனுக்கு ஒரு பதில் போட்டுடு’’ என்றார் நெகிழ்ச்சியுடன்.

பெரியவா பேசிய தொனி கேட்டு சந்தோஷமானார் தொண்டர். ‘‘என்னன்னு பதில் எழுதணும் பெரியவா?’’
மகான் வாயில் இருந்தே சந்தோஷமான அந்த வார்த்தைகளை வரவழைத்து விட வேண்டும் என்று ஒரு ஆசை அவருக்கு.
தொண்டருக்கு இருக்கிற தாபம், நடமாடும் தெய்வத்துக்குத் தெரியாதா? மீண்டும் ஒரு புன்னகையுடன், ‘‘கடிதத்தில் எழுதி இருக்கிறபடி எல்லாம் நன்னா நடக்கும்னு ஒரு பதில் போட்டுடு. ஒண்ணும் கவலைப்பட வேண்டாம்னு எழுதிடு’’ என்று திருவாய் மலர்ந்து அருளியது கலியுக தெய்வம்!

‘‘உத்தரவு பெரியவா... அப்படியே போட்டுடறேன். உங்ககிட்டேர்ந்து வந்த இந்த பதில் எங்களுக்கெல்லாம் அளவு கடந்த மகிழ்ச்சியைக் கொடுக்கறது’’ என்று கைகளைக் குவித்துப் பேசுகிறபோது, நா தழுதழுத்தது தொண்டருக்கு.
இந்தப் பதில் கடிதம் அன்னதான சிவனுக்குப் போய்ச் சேர்ந்ததும், அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இருந்த இடத்தில் இருந்தவாறு மகா பெரியவா இருக்கின்ற திசையை நோக்கி சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார்.

தன் குழந்தைகள் சாப்பிட வேண்டும் என்பதற்காக ஒரு ஏழைத் தாய் பட்டினியும் இருப்பாள். குழந்தைகள் வயிறு நிரம்பினாலே தாய்க்கும் அது ஒரு சந்தோஷம். ஆனால், அந்தத் தாயும் சாப்பிட்டுத் திடமாக இருந்தால்தான் குடும்பத்தை நல்வழியில் நடத்த முடியும். எனவே, தாயின் வயிறும் நிரம்ப வேண்டும்.

மகா பெரியவா

அதுபோல் சர்வ லோகத்தையும் காத்தருளுகிற மகான் அன்ன பிஷையை ஏற்றுக்கொண்டு, உடல் நலத்துடன் இருந்தால்தான் பக்தர்களைக் காத்தருள முடியும் என்கிற அன்னதான சிவனின் பாசத்தையும் பரிவையும் எப்படிப் பாராட்டுவது?

மகானுக்கு வெகு உரிமையுடன் இதுபோல் ஒரு கடிதம் எழுதுவதற்கு ஒரு தைரியம் வேண்டும்; அதைவிட தகுதி வேண்டும். இத்தகைய தைரியத்தையும் தகுதியையும் கொண்டிருந்த அன்னதான சிவன் மேல் மகா பெரியவாளும் பரிவு கொண்டிருந்தார்.

சிவனது கடைசி நாட்களில் மகா பெரியவா அவர் மேல் கொண்டிருந்த பரிவு, கண் கலங்கும் விதத்தில் வெளிப்பட்டது. முதுமை காரணமாகவும் தளர்வு காரணமாகவும் சொந்த ஊரில் ரொம்பவும் கஷ்டப்பட்டார் சிவன்.

தகவல் மகா பெரியவாளை அடைந்தது. சிவனுக்கு அருகில் இருந்து அவரை நன்றாகக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்கிற உத்தரவோடு தன் சிப்பந்திகளை அன்னதான சிவனின் ஊருக்கே அனுப்பி வைத்தார் பெரியவா. அதற்கேற்றபடி சிப்பந்திகளும் சிவனின் கடைசிக் காலத்தில் நன்றாகவே கவனித்துக் கொண்டனர்.

விதி தன் கணக்கைப் பூர்த்தி செய்து எழுதி இருந்த வேளையில், தன் சொந்த ஊரிலேயே சிவப்பதம் அடைந்தார் சிவன்.
அன்னதான சிவனின் மறைவு குறித்து மகானிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அன்று தன்னைத் தரிசிக்கக் கூடி இருந்த பக்தர்களிடமும், சிப்பந்திகளிடமும் சிவனைப் பற்றிய சில விஷயங்களை நினைவு கூர்ந்தார் பெரியவா.

‘‘சிவன் சந்நியாச தர்மத்தின்படி வாழவில்லை. என்றாலும், அவர் ஒரு துறவி. ஒரு சந்நியாசியைப் போல் எதன் மீதும் பற்று இல்லாமல் வாழ்ந்து வந்தவர். மற்றவர்கள் வயிறு நிரம்ப வேண்டுமே என்பதற்காகத் தன் காலத்தை செலவழித்தவர். ‘பசி’ என்று எவர் ஒருவர் வந்தாலும், அவருக்கு போஜனம் போட்டுத்தான் அனுப்பி வைப்பார். அவர் செய்த சேவைக்கு நிச்சயம் மோட்சத்தில் இடம் கிடைத்திருக்கும்’’ என்றார் பெரியவா.

நடமாடும் சர்வேஸ்வர சொரூபமே இப்படித் திருவாய் மலர்ந்து அருளி இருக்கிறது என்றால், மோட்ச சாம்ராஜ்யம் ரத்னக் கம்பளம் விரித்தல்லவா சிவனை வரவேற்றிருக்கும்!

அன்னதான சிவனின் நற்கதிக்காக கும்பகோணத்தில் உள்ள ஆலயங்களிலும், திருபுவனம் சிவாலயத்திலும் மோட்ச தீபம் ஏற்றுமாறு ஸ்ரீமடத்துச் சிப்பந்திகளுக்கு உத்தரவு பிறப்பித்தார் பெரியவா.

ஊருக்கெல்லாம் அன்னதானம் செய்து சந்தோஷப்பட்ட சிவன் மறைந்த பத்தாம் தினத்தன்று, ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்தார் பெரியவா. சிவனோடு பெரிதும் தொடர்புடைய கும்பகோணம் சங்கர மடத்திலேயே இதை விமரிசையாக நடத்தி வைத்தார் மகான்.

தவிர, தன் சொத்தாக சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்திருந்த சொற்ப பணத்தை, தான் இறந்த பிறகு தர்ம காரியங்களுக்கு செலவிடும்படி கேட்டுக் கொண்டிருந்தார் சிவன். அதன்படி, அவரது சேமிப்பு குறித்து மகா பெரியவாளுக்குத் தகவல் சொல்லப்பட்டது.

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட மகான், ‘‘தன்னோட சொத்தா அவர் சேர்த்து வைத்திருந்த அந்தப் பணம் நல்ல தர்ம காரியத்துக்குப் பயன்படணும். தவிர, உண்மையிலே கஷ்டப்படறவாளுக்கு அது போய்ச் சேரணும்’’ என்றார். சொன்னதோடு மட்டுமல்லாமல், சிவனோடு தொடர்புடைய ஒரு கிராமத்தில் இருந்த பாழ்பட்ட குளத்தைச் செப்பனிட அந்தப் பணத்தைப் பயன்படுத்த வைத்தார்.

அடிப்படை வசதிகள் அதிகம் இல்லாத ஒரு கிராமத்தைத் தேர்ந்தெடுத்தார். அங்கே தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகம் வசித்து வந்தார்கள். அந்தக் கிராமத்தில் நீருக்கு ஆதாரமே அங்கிருந்த குளம்தான்.

சிவன் சேமித்து வைத்திருந்த பணத்தைக் கொண்டு, அந்தக் குளத்தைத் தூர் வாரிச் செப்பனிட உத்தரவு பிறப்பித்தார் மகா பெரியவா. வேளைகள் மளமளவென நடந்தன. நித்தமும் தாங்கள் பயன்படுத்தும் குளம் சுத்தமானதும், ஊர்க்காரர்கள் ஒன்று கூடி இதற்குக் காரணகர்த்தாவான சிவனை மனதார வாழ்த்தினார்கள். இந்த வாழ்த்து அல்லவா அன்னதான சிவனுக்குப் போய்ச் சேர வேண்டும்!

ஒற்றை ஆசாமியாக இருந்து சிவன் நடத்திய வியக்கத்தக்க தொண்டுகளுக்குப் பின்னால், மகா பெரியவா என்கிற மாபெரும் சக்தி இருந்தது. அந்த சக்திதான் சிவனுக்கு அத்தகைய மனோபலத்தைக் கொடுத்து எண்ணற்ற சாதனைகளைப் புரிய வைத்தது.
உண்மையான மகிழ்ச்சி எங்கே இருக்கிறது என்றால், பிறருக்கு உதவுவதில்தான்!

மற்றவர்களின் தேவை அறிந்து, வலியச் சென்று ஒருவர் அந்தத் தேவையைப் பூர்த்தி செய்கிறபோது அதில் கிடைக்கிற சந்தோஷத்துக்கு விலையே இல்லை.

வாழ்த்துக்கள் இரு வகைப்படும். ஒன்று ... வாயார வாழ்த்துவது; இன்னொன்று ... மனமார வாழ்த்துவது.

முதல் வாழ்த்து, கரும்பலகையில் எழுதப்படுவது. அழித்துவிட முடியும்.

இரண்டாவது வகை வாழ்த்து, கல்வெட்டில் எழுதப்படுவது. என்றும் நிலைத்திருக்கும்!

இரண்டாவது வகை வாழ்த்து ஒருவருக்குக் கிடைக்க வேண்டும் என்றால், சமுதாயத்தில் கஷ்டப்படுகிறவர் களுக்கு நிறைய உதவ வேண்டும். இதைத்தான் சமூக சேவை என்று மகா பெரியவா சொல்வார்.

இத்தகைய வாழ்த்துகள் கிடைக்க வேண்டும் என்றால், அதற்கு குருவருள் கூட வேண்டும்!

எப்படி வாழ்ந்தால் வாழ்க்கையில் சந்தோஷம் நீடித்திருக்கும்?

மகா பெரியவா சொல்கிற தகவல்களைப் பார்க்கலாம்.

(ஆனந்தம் தொடரும்...)

சென்ற அத்தியாயத்தை வாசிக்க:

மகா பெரியவா: அருளே ஆனந்தம் - 47

x