சந்திரன் வழிபட்ட சோமநாதர்


மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர்

வைகை நதி பாயும் மாவட்டங்களில் மகாவிஷ்ணுவுக்கும், சிவபெருமானுக்கும் புகழ்பெற்ற புராதனமான கோயில்கள் பல உள்ளன. மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெறும் சித்திரைத் திருவிழா உலகப் பிரசித்திபெற்றது. மதுரையைப் போலவே மானாமதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவும் பிரசித்தி பெற்றது.

மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் ஆலயம் - அம்மன் சந்நிதி கோபுரம்

வைகை நதியின் மேற்கு கரையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இங்கு மதுரையைப் போலவே சித்திரை மாதம் ஆனந்தவல்லி - சோமநாதர் திருக்கல்யாணம், தேரோட்டம், அழகர் ஆற்றில் இறங்குதல் என அனைத்து வைபவங்களையும் கண்டுகளிக்கலாம்.

தட்சனிடம் சாபம் பெற்று தொழுநோயாளியாக சந்திரன் மாறினார். அகத்திய முனிவரின் யோசனைப்படி, வைகைக் கரையில் இருந்த வில்வ வனத்தில் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கு கோயில் எழுப்பி சந்திரன் வழிபட்டார். சந்திரனின் பூஜைகளால் மகிழ்ந்து, ஆனந்தவல்லி அம்மனுடன் காட்சி தந்ததால் இத்தலத்தில் இறைவன் சோமநாதர் எனப்பட்டார். ராஜகோபுரத்தின் வலப்பக்கம் சந்திர பகவான் தம் மனைவியரான கார்த்திகை, ரோகிணியுடன், சோமநாதரை வணங்கிய கோலத்தில் வீற்றிருப்பதை இப்போதும் காணலாம். இக்கோயிலில் தல விருட்சம் வில்வமரம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் ஆலயம் - ஐந்து நிலை ராஜகோபுரம்

சிவகங்கை சமஸ்தானத்துக்கு உட்பட்ட சுமார் 2,000 ஆண்டுகள் பழமையான இக்கோயில் ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சி தருகிறது. முதல் பிரகாரத்தில் ஆனந்தவல்லி அம்மன் சன்னதியும், அம்பாளுக்கு தனி கொடிமரமும், அஸ்திர சக்தியும் நந்திகேஸ்வரரும் காணப்படுகின்றனர். நுழைவுவாயிலுக்கு முன்னதாக இடது புறம் விநாயகர், அம்மன் சன்னதியின் கன்னி மூலையில் மற்றொரு விநாயகர், வடமேற்கு மூலையில் கிழக்கு நோக்கி நாகசுப்பிரமணியர் ஆகிய சன்னதிகள் உள்ளன. அம்மன் சன்னதிக்கு அருகில் தெற்கு நோக்கி பள்ளியறை அமைந்துள்ளது.

அடுத்து, இரண்டாம் பிரகாரத்தில் உள்ள சோமநாதர் சன்னதிக்கு தனி ராஜகோபுரம், கொடிமரம், பலிபீடம், நந்திகேஸ்வரர், கன்னி மூலையில் விநாயகர், சோமநாதருக்கு மேற்கு பக்கமாக சதாசிவ பிரம்மேந்திரர், காயத்ரி தேவி, ரிஷப சூலம் ஆகிய சன்னதிகள் அமைந்துள்ளன. சித்த புருஷரான சதாசிவ பிரம்மேந்திரர் இந்த திருத்தலத்தில் ஜோதி ரூபமாக காட்சி தந்ததாக நம்பப்படுகிறது.

சோமநாதர் சன்னதிக்கு வெளியே வடமேற்கு மூலையில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் அருள்பாலிக்கிறார். சோமநாதருக்கு இடதுபுறமாக விநாயகர், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் சன்னதியும், மூன்று சிவலிங்கங்களும், காசிவிஸ்வநாதர், விசாலாட்சியும் காட்சி தருகின்றனர்.

சித்திரைத் திருவிழாவைப் போலவே 11 நாட்கள் நடைபெறும் ஆடித்தபசு திருவிழாவும் இக்கோயிலில் பிரசித்தம். ஆடித்தபசு திருவிழாவில் அம்மன் சன்னதியில் கொடியேற்றப்பட்டு, பல்வேறு அலங்காரங்களில் ஒவ்வொரு வாகனத்தில் அம்மன் வீதி உலா வருவார். விழாவின் 10-ம் நாள் தபசு கோலத்தில் அம்மன் எழுந்தருள்வார். அப்போது அம்மனுக்கு சோமநாத சுவாமி காட்சி தரும் வைபவம் நடைபெறும். 11-ம் நாள் சந்தனக்காப்பு உற்சவத்துடன் திருவிழா நிறைவுபெறுவது வழக்கம்.

மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் - ஆடித்தபசுக் காட்சி...

மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர்

x