மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத் திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று நாரைக்கு முக்தி அளித்த திருவிளையாடல் நடைபெற்றது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்-ஆவணி மூலத் திருவிழாவின் 2ம் நாளான நேற்று நாரைக்கு முக்தி கொடுத்த திருவிளையாடல் நடைபெற்றது. இதில் பிரியாவிடை சுந்தரேசுவரர் மீனாட்சி அம்மன் திருவிளையாடல் அலங்காரத்தில் அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அன்றிரவு பூத வாகனத்தில் பிரியாவிடை சுந்தரேசுவரரும், அன்ன வாகனத்தில் மீனாட்சி அம்மனும் ஆவணி மூல வீதியில் எழுந்தருளினர்.
இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து மூன்றாம் நாளான (செப்.07) இன்று மாணிக்கம் விற்ற திருவிளையாடல் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன், கோயில் இணை ஆணையர் ச.கிருஷ்ணன் தலைமையில் அறங்காவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
திருவிளையாடல் புராண வரலாறு: "மதுரைக்கு தெற்கே ஒரு தடாகத்தில் நாரை ஒன்று வாழ்ந்து வந்தது. அக்குளத்தில் நீர் வற்றியதால் மற்றொரு குளத்திற்குச் சென்றது. அக்குளத்திலே முனிவர்கள் நீராடினர். அவர்கள் மேல் புரண்டு விளையாடிய மீ்ன்களை உண்ணலாகாது எனக் கருதி உண்ணாமலே இருந்தது நாரை. அம்முனிவர்களின் உரையாடலால் மதுரையைப் பற்றி அறிந்த நாரை மதுரைக்கு வந்து, பொற்றாமரைக் குளத்திலே நீராடி இறைவனை வணங்கி முக்தி பேறு பெற்றது.
மேலும் அந்த நாரை இறைவனிடம் பொற்றாமரைக் குளத்திலே நீர்வாழ் உயிர்கள் எதுவும் இருக்கக்கூடாது என்று வரம் வாங்கியது. அவ்வாறு இருந்தால் மற்ற பறவைகள் அதனை உண்ணக்கூடும். அதனால் பாவம் வந்து சேரும். எனவே நீர்வாழ் உயிரினங்கள் எதுவும் இருக்கக்கூடாது என்று வரம் வாங்கியது. நாரைக்கு இறைவன் அருளிய வரத்தின்படி இன்று வரை இக்குளத்தில் நீர்வாழ் உயிரினங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.