ஆபாச வீடியோ மிரட்டல் விவகாரத்தில் திமுகவுக்குத் தொடர்பா?: தருமபுரம் ஆதீனம் விளக்கம்!


தருமபுரம் ஆதீனகர்த்தர்

தருமபுரம் ஆதீனத்துக்கு, ஆபாச வீடியோ இருப்பதாக கூறி கொலை மிரட்டல் கொடுத்த விவகாரத்தில் திமுக ஒன்றிய செயலாளருக்கு எந்த தொடர்பும் இல்லை என்று ஆதீனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தருமபுரம் ஆதீனகர்த்தர்

மயிலாடுதுறை அருகே பழமை வாய்ந்த சைவ மடமான தருமபுரம் ஆதீன மடம் அமைந்துள்ளது. ஆதீனத்தின் 27வது குருமகா சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், தருமபுரம் ஆதீனம் தொடர்புடைய ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாகக் கூறி, சிலர் பணம் கேட்டு தொடர்ந்து மிரட்டியுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து புகாரில் குறிப்பிடப்பட்ட வினோத், செந்தில், விக்னேஷ், குடியரசு, ஜெயச்சந்திரன், விஜயகுமார், அகோரம் ஆகிய 7 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதில் தொடர்புடைய 4 பேரை கைது செய்துள்ளனர். பாஜக மாவட்ட தலைவர் அகோரம் உள்ளிட்ட பலரைத் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த வழக்கில் போலீஸாரால் சேர்க்கப்பட்டுள்ள திமுக ஒன்றிய செயலாளர் திருக்கடையூர் விஜயகுமார் என்பவர் தனக்கு உதவியவர் எனவும், தனக்கு உதவி செய்ததைத் தவிர இந்த வழக்கில் அவருக்கு வேறு எந்த தொடர்பும் இல்லை எனவும் புகார்தாரர் விருத்தகிரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு விருத்தகிரி கடிதம் எழுதியுள்ளார். 'நான் ஏற்கெனவே கொடுத்த புகாரின் பெயரில் காவல்துறை தக்க நடவடிக்கை எடுத்தமைக்கு காவல்துறைக்கு மிகவும் நன்றி. இதில் திருக்கடையூர் விஜயகுமார் என்பவர் இந்த பிரச்சினை விவகாரத்தில் எனக்கு உறுதுணையாக இருந்து உதவி செய்தவர் ஆவார்.

என்னை மனஉளைச்சலுக்கு ஆளாக்கிய நபர்களிடம் விஜயகுமார் பேசி, பிரச்சினையை சுமுகமாக தீர்த்துக் கொள்ள முயற்சி எடுத்தார். அது பலன் அளிக்கவில்லை.

அதனால் விஜயகுமார், அந்த நபர்கள் ரவுடிகளாக இருப்பதால் காவல் துறையை நாடுவது மிகவும் நல்லது என அவர் கூறிய ஆலோசனையின் பெயரிலேயே நான் காவல் துறை உதவியை நாடினேன். எங்களுக்கு உதவி செய்தது தவிர விஜயகுமாருக்கு இந்த வழக்கில் வேறு எந்த தொடர்பும் இல்லை' என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

x