ஸ்ரீரங்கத்துக்கு முன் தோன்றிய ஆதி திருவெள்ளரை


திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள்

ஸ்ரீரங்கத்துக்கும் முன்பே உருவான திருத்தலமாக கருதப்படுவது திருவெள்ளறை. இதன் தொன்மையைக் குறிப்பதற்காக ஆதிவெள்ளறை என்று இத்தலம் அழைக்கப்படுகிறது. திருச்சியில் இருந்து துறையூர் செல்லும் நெடுஞ்சாலையில் 12 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

வெள்ளறை என்பது வெண்மையான பாறைகளாலான மலை என்பதைக் குறிக்கிறது. வடமொழியில் ஸ்வேதகிரி என்றும், உத்தம ஷேத்ரம், ஹித ஷேத்ரம் என்றும் பெயர் பெறுகிறது. அயோத்திக்கு அதிபதியாய் விளங்கிய சிபிச் சக்ரவர்த்தி ஒரு சமயம் தன் படை பரிவாரங்களுடன் வந்து திருவெள்ளறையில் தங்கி இருக்கும் போது, அங்கு தோன்றிய ஒரு வெள்ளைப் பன்றியைத் (ஸ்வேத வராம்) துரத்த அது பக்கத்தில் உள்ள ஒரு புற்றில் சென்று மறைந்துவிட்டது.

திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயில்

இதனைக் கண்டுஆச்சர்யமுற்ற சிபி அங்கே தவம் செய்து கொண்டிருந்த மார்க்கண்டேயரை அணுகி வினவ, அவர் சொற்படி பன்றி மறைந்த அப்புற்றுக்குப் பாலால் திருமஞ்சனம் செய்து வழிபட உடனே பகவான் சிபிச் சக்கரவர்த்திக்கும், மார்க்கண்டேயருக்கும் நின்ற திருக்கோலத்தில் காட்சியருளினார். அதனாலேயே “ஸ்வதே வராஹத் துருவாய் தோன்றினான் வாழியே” என்ற திருப்பெயர் இப்பெருமாளுக்கு உண்டாயிற்று.

மூலவரின் திருப்பெயர் புண்டரீகாட்சன் (தாமரைக் கண்ணன்). நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். தாயார் செண்பகவல்லி தனி சன்னதியில் வீற்றிருக்கிறார். தாயார் உற்சவருக்கு பங்கயச் செல்வி என்பது திருநாமம்.

திருவெள்ளறை ஜேஷ்டாபிஷேக விழாவுக்காக கொள்ளிடம் ஆற்றில் இருந்து புனித நீர் எடுக்கப்படுகிறது.

கோயில் மதிலுக்குள்ளேயே 1. திவ்ய தீர்த்தம்,2. வராஹ தீர்த்தம், 3. குசஹஸ்தி தீர்த்தம், 4. சந்திர புஷ்கரிணி தீர்த்தம், 5. பத்ம தீர்த்தம், 6. புஷ்கல தீர்த்தம், 7. மணிகர்ணிகா தீர்த்தம் ஆகிய் 7 தீர்த்தங்கள் உள்ளன.திருமங்கையாழ்வாரும், பெரியாழ்வாரும் மொத்தம் 24 பாசுரங்களை இத்தலத்து பெருமாள் மீது பாடியுள்ளனர். ஸ்ரீ நாதமுனிகளின் சீடரான உய்யக் கொண்டார் என்ற வைணவஆசார்யரும், முற்றுப்பெறாமல் இருந்த ஸ்ரீபாஷ்யத்தை எழுதி முடித்த விஷ்ணு சித்தர் என்ற எங்களாழ்வானும் அவதரித்த தலம் இது. பல்லவ மன்னன் முதலாம் நரசிம்மவர்மன் இக்கோயில் கட்டிடப் பணியில் தன் கலையம்சத்தைக் காட்டி மெருகூட்டினான் என்பதை பல்லவர்களின் வரலாற்றால் அறிய முடிகிறது.

கொள்ளிடம் ஆற்றில் இருந்து தங்கக்குடத்தில் புனித நீர் எடுத்து யானை மீது பவனி வருகிறது.

திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாளுக்கு ஆடி ஜேஷ்டாபிஷேகம் மிக விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் இருந்து ஒரு தங்கக்குடம் மற்றும் 21 வெள்ளிக் குடங்களில் புனித நீரை யானை மீது வைத்தும், கோயில் பட்டர்கள் சுமந்தும் மண்ணச்சநல்லூர் வழியாக திருவெள்ளறைக்கு எடுத்து வருவார்கள். அந்த தீர்த்தக்குடங்கள் ஸ்வஸ்திக் குளம் அருகே வைக்கப்பட்டு அங்கிருந்து மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோயிலின் மூலஸ்தானத்தை சென்றடைந்தது. இதைத்தொடர்ந்து புனித நீரால் பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு அபிஷேகமும், மாலையில் தீபாராதனையும் நடைபெற்றது.

x