சிவபெருமானும், ஸ்ரீமகாவிஷ்ணுவும் ஒருசேர சங்கரநாராயணராக காட்சி தர வேண்டி, கோமதி அம்பாள் தவமிருந்த இடமே சங்கரன்கோவில். அம்பாளின் தவத்தை மெச்சி, சங்கரநாராயணராக சுவாமி காட்சி தந்த நாளே ஆடித்தபசு திருநாளாகும்.
ஆண்டுதோறும் ஆடி உத்திராடம் நாளன்று காலை நடைபெறும் விழாவில் அம்பிகை தபசு மண்டபம் சென்று, கையில் விபூதிப்பையுடன் ஒரு கால் ஊன்றி தவம் இருப்பாள். மாலையில் அம்பாளுக்கு, சுவாமி சங்கரநாராயணராக காட்சி தரும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறும். இரவில் சங்கரலிங்க சுவாமியாக காட்சி தரும் நிகழ்ச்சி நடைபெறும். சுவாமியின் இவ்விரு திருக்கோலத்தையும், அம்பாளின் தபசு திருக்கோலத்தையும் காண்பதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள்.
ஆடி தபசு திருவிழா அம்பாளுக்குரிய விழா என்பதால், இவ்விழாவின் ஒன்பதாம் நாள் நடைபெறும் தேரோட்டத்தில் அம்பாள் மட்டுமே தேரில் அமர்ந்து உலா வருவார்.
சங்கரன்கோவிலில் ஆடித்தபசு, பங்குனி - சித்திரையில் பிரம்மோத்ஸவம், ஐப்பசியில் திருக்கல்யாணம், தை மாதம் கடைசி வெள்ளி தெப்ப உற்சவம் ஆகியவை இக்கோயிலின் முக்கிய திருவிழாக்கள். சித்திரை மற்றும் ஐப்பசி மாதப்பிறப்பன்று அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.
இக்கோயிலில் பக்தர்களுக்கு பிரதான பிரசாதமாக புற்று மண் வழங்கப்படுகிறது. இந்த புற்று மண்ணை தண்ணீரில் கரைத்து உடலில் பூசிக்கொள்வதாலும், பருகுவதாலும் பல்வேறு நோய்கள் தீர்வதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
பாம்பு, பூரான், தேள் போன்ற விஷ ஜந்துக்களின் உருவங்களை வாங்கி இக்கோயிலுக்கு காணிக்கையாக அளித்தால் தங்கள் வீடுகளில் அவற்றின் தொல்லை நீங்கும் என்று மக்கள் நம்புகின்றனர். தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீடுகளுக்குள் இந்த விஷ ஜந்துக்களை பார்த்தாலேயே, சங்கரன்கோவிலுக்கு காணிக்கை நேர்ந்துவைத்து, குறிப்பிட்ட நாளில் சங்கரன்கோவிலுக்கு நேரில் சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
மார்ச், செப்டம்பர் மாதங்களில், 21-ம் தேதியிலிருந்து மூன்று நாட்கள் மூலவர் சங்கரலிங்கம் மீது சூரிய ஒளி விழுகிறது. மூலஸ்தானத்தில் சிவனும், பெருமாளும் ஒன்றாக அருளும் சங்கரநாராயணருக்கு அபிஷேகம் செய்வது இல்லை. அங்குள்ள ஸ்படிக லிங்கத்துக்கே நித்தியப்படி அபிஷேகம். அவரது திருநாமம் சந்திரமவுலீஸ்வரர்.
கோயில் நுழைவு வாயிலில் இடதுபுறம் அதிகார நந்தி மட்டுமே இருப்பது வழக்கம். இங்குள்ள அதிகார நந்தி தன் மனைவி சுயஜ்ஜாதேவியுடன் காட்சி தருகிறார். கருவறையை நோக்கி இருக்கும் நந்திக்கு மேலே ருத்ராட்ச பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற சக்தி பீடங்களில் கருவறைக்கு அடியில் அல்லது அம்பிகையின் பாதம் முன்பு சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். சங்கரன்கோவில் கோமதி அம்பாள் சன்னதிக்கு முன்புள்ள மண்டபத்தில் சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. `ஆக்ஞா சக்கரம்’ என அழைக்கப்படுகிறது. இச்சக்கரத்தினை திருவாவடுதுறை ஆதினம் 10-வது பட்டம் வேலப்ப தேசிக சுவாமிகள் பிரதிஷ்டை செய்தார்.
இந்த சக்கரத்தில் அமர்ந்து கோமதியம்மனை நம்பிக்கையோடு வழிபட்டு வந்தால் நினைத்த காரியங்கள் நடைபெறும் என்பது ஐதீகம். இன்னும் சொல்லப்போனால் மனநோய், மனக்குழப்பம் உள்ளவர்கள் இச்சக்கரத்தின் மேல் அமர்ந்து அம்பிகையிடம் வேண்டிக் கொள்கிறார்கள். இதனால் நோய் நிவர்த்தியாவதாகவும் நம்பிக்கை.
ஆடித்தபசு தரிசனம் - 4