சென்னை: கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் 1,682 கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கோயில்களில் நாள் முழுவதும் பிரசாதம், அன்னதானம் வழங்கும் திட்டம், ஆன்மிக சுற்றுலா, அறுபடை வீடு சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும், தமிழகத்தில் உள்ள தொன்மையான கோயில்கள், 12 ஆண்டுகளுக்குமேல் கும்பாபிஷேகம் நடைபெறாமல் உள்ள கோயில்கள், வரலாற்றுப் புகழ் பெற்ற மற்றும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த கோயில்கள், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற மற்றும் நாயன்மார்களால் பாடப்பெற்ற பழமை வாய்ந்த கோயில்கள், கிராமப்புரங்கள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதியில் உள்ள சிறு கோயில்கள் உள்ளிட்ட கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, பொதுமக்கள் அளிக்கும் நன்கொடை, கோயிலின் சொந்த நிதி, அரசு மானியம், பொது நல நிதி, ஆலய மேம்பாட்டு நிதி உள்ளிட்ட பல்வேறு நிதிகள் மூலம் கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருப்பணிகள் நிறைவுற்ற கோயில்கள் தொடர்ச்சியாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், திமுக ஆட்சி பொறுப்பேற்று கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் விக்ரம சோழீஸ்வரர் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு முதல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதன் பிறகு மாதமாதம் ஏராளமான கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வந்த நிலையில், நடப்பு ஆண்டு மே மாதத்தில் மட்டும் இதுவரை 60 கோயில்களில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. அந்த வகையில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் 1,682 கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.