சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தில் அறநிலையத்துறை தலையிட முடியாது: தீட்சிதர்கள் பதிலடி!


சிதம்பரம் நடராஜர் கோயில்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் புதியதாக கட்டுமானங்கள் எதுவும் செய்யப்படவில்லை எனவும், கோயில் நிர்வாகத்தில் அறநிலையத்துறை தலையிட முடியாது எனவும் பொது தீட்சிதர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் புதிய கட்டுமானங்கள் அனுமதியின்றி நடப்பதாகவும், இதனால் புராதனச் சிலை மற்றும் கல்வெட்டுகள் பாதிக்கப்படுவதாகவும் கூறிய தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை, இதற்கு விளக்கம் கேட்டு, பொது தீட்சிதர்களுக்கு அறிவிப்பு கடிதம் ஒன்றை அண்மையில் அனுப்பியிருந்தது. அதற்கு நடராஜர் கோயில் பொது தீட்சிதர்களின் செயலாளர் சிவராம தீட்சிதர் தற்போது பதிலளித்து அறநிலையத்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

'சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தில் இந்து சமய அறநிலையத்துறை தலையிட சட்டத்தில் வழியில்லை. அதுகுறித்து, உரிய சட்ட விளக்கம் அளிக்கப்பட்டபோதும், தொடர்ந்து, கோயில் நிர்வாகத்திற்கு இடையூறு செய்யும் நோக்கில், சட்டத்திற்குப் புறம்பாக அறிவிப்பு அனுப்பப்படுகிறது.

அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இல்லாத நடராஜர் கோயிலுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவை மீறும் வகையில், தற்போது அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது.

சிதம்பரம் கோயில்

தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டது போன்று, கோயிலில் எவ்வித திருப்பணிகள் மற்றும் புதிய கட்டுமானங்கள் ஏதும் செய்யப்படவில்லை. கோயில் பராமரிப்புக்கு மறைப்பு கட்டுவதையும், கோயிலைச் சுத்தப்படுத்துவதையும் மிகைப்படுத்தி பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவது உள்நோக்கம் கொண்டதாக உள்ளது.

எனவே, அறநிலையத்துறை சார்பில், மீண்டும் மீண்டும் தேவையற்ற கடித தொடர்புகளைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்' என்று தீட்சிதர்களின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

x