மண்டல மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை நடை திறக்கப்படுகிறது.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கார்த்திகை 1 முதல் 60 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி நடப்பு மண்டல மகர விளக்கு சீசனையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
கோயில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி கோயில் நடையை திறந்து வைத்து தீபாராதனை காட்ட உள்ளார். பின்னர் 18-ம் படிக்கு கீழ் உள்ள நெருப்பு ஆழியில் கற்பூரம் வைத்து தீ மூட்டப்படும்.
அதிகாலை 4 மணிக்கு புதிய மேல்சாந்தி பி.என்.மகேஷ் நடையை திறந்து வைத்து பூஜை மற்றும் வழிபாடுகளை தலைமை ஏற்று நடத்துவார். அன்று நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், தொடர்ந்து 12 மணி வரை நெய் அபிஷேகம், உச்ச பூஜைக்கு பின் பகல் 1 மணிக்கு நடை அடைக்கப்படும்.
மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை, இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகமும், அத்தாழ பூஜைக்கு பிறகு இரவு 10 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பு சீசனை யொட்டி விழாவின் சிகர நிகழ்ச்சியாக டிசம்பர் 27-ம் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 15-ம் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறும். சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் மட்டுமே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
பக்தர்களின் நலன் கருதி உடனடி முன்பதிவு செய்ய நிலக்கல்லில் சிறப்பு முன்பதிவு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.